கர்நாடகாவில்  மணமேடையில்  தாலி கட்ட வேண்டிய மணமகன் கெட்டிமேள ஓசைக்கு எழுந்து நடனமாடியதால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணமகளுக்கும், மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹீமாவு கிராமத்தை சேர்ந்த மணமகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரியோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலையில் பன்னியனஉண்டி கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

மணமேடையில் மணமகள் வந்து அமர்ந்ததும் முகூர்த்த நேரம் வந்ததால் கெட்டிமேளம் வாசிக்கத் தொடங்கினர். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த மணமகன், தாலியை மணமகள் கழுத்தில் கட்டுவதற்குப் பதிலாக திடீரென எழுந்து கூச்சலிட்டபடி நடனமாடத் தொடங்கியுள்ளார்.

இதனைக் கண்டு மணமகள் உட்பட திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மணமகள் வீட்டார் மணமகனின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர்.

இதனால் அங்கு வாக்குவாதம் உண்டானது. மணமகள் வீட்டாருக்கு மணமகனின் மனநிலையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு வந்திருந்த பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மணமகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அதற்கு மணமகளின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே திருமணம் இனிதே நடைபெற்றது.

கெட்டிமேளம், நாதஸ்வர சத்தத்தை கேட்ட மணமகன் மணமேடையில் எழுந்து நின்று நடனம் ஆடி திருமணம் தடைப்பட்ட சம்பவம் சாம்ராஜ்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அழகிப் போட்டியால் விபரீதம்!: உடல் இளைக்க மகளுக்கு நாடாப்புழுவைக் கொடுத்த தாய்!
23-08-2014

வாஷிங்டன் : அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு இளம்பெண் தீவிர வயிற்றுவலி அறிகுறியுடன் புளோரிடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் அவருக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் முடிவு எதிர்மறையாக வந்தது. இருப்பினும் அவரது குடல்கள் தொடர்ந்து வீங்கி காணப்பட்டதால் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் தடுமாறினர்.

அதன்பின்னர் அந்தப் பெண் கழிப்பறைக்குச் சென்றுவந்த  பின்னரே அவர்களால் உண்மையான காரணத்தைக் கண்டறிய முடிந்தது.

அந்தக் கழிப்பறையின் கிண்ணம் முழுவதும் நாடாப்புழுக்கள் நிறைந்திருந்ததாகவும் அவற்றுள் சில நன்கு வளர்ந்து காணப்பட்டதாகவும் அவருக்கு பணி புரிந்துவந்த மரிக்கர் கப்ரால்  ஓசொரியோ என்ற செவிலியர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்தபோது அழகிப்போட்டி அணிவகுப்பு ஒன்றில் தனது மகள் பங்கு பெற இருந்ததால் ஒல்லியாக மாறவேண்டும் என்பதற்காக நாடாப்புழுக்களின் முட்டைகளை அவளுக்கு அளித்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த முட்டைகளை மெக்சிகோவில் வாங்கியதாகக் கூறிய அவர், தனது தவறுக்காக மகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை.

உணவு பரிமாறும் ரோபட் சீன ஓட்டலில் அசத்தல்
23-08-2014

Evening-Tamil-News-Paper_15264093876பீஜிங்:சீனாவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வருவோருக்கு ரோபட்கள் உணவு பரிமாறுகின்றன. ஆங்கிலப்படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் போன்று அந்த ஓட்டல் செயல்படுவது வாடிக்கையாளர்களை பிரமிக்க வைக்கிறது.

சீனாவின் கிழக்கே சுஸ்ஹாவ் பிராந்தியத்தில் குன்சான் என்ற துணை நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சோங் ஜுகாங் என்பவர் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்த ஓட்டலுக்குள் நுழைந்தால் ஒரு நிமிடம் பயந்து விடுவீர்கள். காரணம், அங்கே அறிவியல் கூடம் போல் ரோபட்கள் நடமாடிக் கொண்டிருக்கும். சாப்பிடுவோருக்கு, அவைதான் உணவு வகைகளை எடுத்து வந்து பரிமாறும்.

ஓட்டல் வாசலிலேயே உங்களை ரோபோ ஒன்று வரவேற்கும். வாடிக்கையாளர்கள் வந்து அமர்ந்ததும் மற்றொரு ரோபோ வந்து ஆர்டர் கேட்கும். வாடிக்கையாளர்கள் வழக்கமாக கேட்கக் கூடிய உணவு வகைகளை அவை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரோபட்கள், வழக்கமான 40 வாக்கியங்களை புரிந்து கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஆர்டர் எடுப்பதில் பிரச்னை இல்லை. அதே போல், உணவுகளை 4 ரோபட்கள் எடுத்து வருகின்றன.

இது பற்றி, சோங் ஜுகாங் கூறியதாவது:  ஒரு ரோபட் விலை ரூ.4 லட்சம். மொத்தம் 12 ரோபட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்கள் ஓட்டலில் ரோபட்டுகள் பரிமாறும் அழகை பார்த்து, நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

இப்போதெல்லாம் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. மேலும், ஓட்டல் பணியாளர்களுக்கு தரும் சம்பளத்தை விட, இதன் பராமரிப்பு செலவு குறைவாக உள்ளது. இதனால், இதே போல் இன்னொரு ரோபட் ஓட்டலை திறக்கும் ஐடியா உள்ளது.

ரோபட்டுகளை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், 5 மணி நேரம் இடைவிடாமல் வேலை செய்கிறது. இந்த ரோபட்டுகளை மேலும் நவீனப்படுத்தினால், அவை வீடு மற்றும் ஓட்டல் பராமரிப்பில் கூடுதல் பணிகளை மேற்கொள்ள உதவும் இவ்வாறு ஜுகாங் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version