அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது அதிலும் கூன், குருடு, செவிடு நீங்கிப்பிறத்தலரிது என்ற தமிழ்த் தாயின் வாக்கை பொய்ப்பித்து விட்டது ஈழப்போரில் இறுதியாய் நடைபெற்ற கோர யுத்தம். ஐந்து ஆண்டுகள் அல்லது ஐயாயிரம் நூற்றாண்டுகள் கடந்தாலும் ஆறாத வடுக்கள்.

தற்போது மக்கள் சூழ்நிலை கைதிகளாக்கப்பட்டு வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்பட்டு சிதறல்களாக தமது இப்பிறப்பு மானிட வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு பல்வேறு விடயங்கள் சான்று பகர்வதாய் அமைகின்றன. உறவுகள், உடைமைகள் என அனைத்தையுமே தொலைத்து விட்டு தமது முகவரியை தேடிக்கொண்டிருக்கின்றனர். அனைத்துமே பூச்சியமாகி விட்ட நிலையில் அடுத்த வேளை உணவுக்குக் கூட கையேந்தும் நிலையும் ஏற்பட்டுவிட்டது. தமக்கான உதவிக்கரத்தை யார் நீட்டுவார் என்பது கனமான நெஞ்சங்களின் ஏக்கமாகவுள்ளது.

இதன் ஓர் அங்கம் தான் திருமுறிகண்டி வசந்த நகரில் வாழும் 52வயதுடைய அழகர் இராமநாதனின் வாழ்க்கைக்கோலம். எழில் கொஞ்சும் மலையகத்தில் நாவலப்பிட்டியை சொந்த இடமாகக் கொண்டவர் உயர்கல்விக்காக கொழும்பை வதிவிடமாக்கினார்.

பின்னர் திருமணம் செய்துகொண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் தனது இல்லறத்தை ஆரம்பித்தவர் இன்று யுத்தத்தின் உக்கிரத்தில் உருக்குலைக்கப்பட்டு கச்சான் விற்றாவது சுயமாகப் பிழைக்க யாராவது சிறுதொகைப் பணத்தைத் தருவார்களா என கையேந்தி நிற்கின்றார்.

1996 ஆம் ஆண்டு முதல் இவரை யுத்தம் விரட்ட ஆரம்பித்தது. விசுவமடுவில் இடம்பெயர ஆரம்பித்தவர் இறுதியாக புதுமாத்தளன் வரை ஓயாது ஓடினார். பின்னர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கி சற்று ஓய்வெடுத்தவர் என்ன நடந்தாலும் இல்லறம் நடத்திய எனது சொந்த மண்ணுக்கே செல்ல வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார்.

சுற்றமின்றி முற்றமின்றி பற்றைகள், புதர்களுக்கு மத்தியில் நான்கு தடிகள் தாங்கிநின்ற தரப்பாலை நம்பி தனது நோய்வாய்ப்பட்ட துணையுடனும் இளம் பராயத்தை எட்டிய மூன்று பிள்ளைகளுடனும் எனது சொந்த பூமி என்ற இறுமாப்போடு 06-.03-.2011இல் குடியேறியவரை வறுமை வாட்டியது. வாடி வதங்காது எதிர்நீச்சல் போடத்தயாரானவரை காலன் விட்டுவிடவில்லை.

03.-03.-2014 அன்று  எங்கட உறவுகள் எல்லாரும் வந்திருந்தவை. என்ட பேரன் முறையானவன் ஏதொவொரு சின்ன பொருளை கையில வைச்சு விளையாட தொடங்கினான்.

கையில கால்ல விழுந்தா காயம் வந்திடும் என்டு நினைச்ச நான் ்ஓடிப்போய் அடம்பிடிச்ச அவனிட்ட இருந்து வாங்கினன். ஓவெண்டு அழத் தொடங்கிவிட்டான். நான் அதை பொருட்படுத்தவில்லை. அந்தப் பொருளை தூரமாய் எறிஞ்சன். அவ்வளவுதான் ஏதோ வெடிச் சத்தம் மட்டும் தான் கேட்டது.

பிறகு என்ன நடந்தது என்டு எனக்கே தெரியாது.

நினைவு வந்து எழுந்து பார்க்கிறன். ஆஸ்பத்திரி. கால்களை அசைக்க முயற்சிக்கிறன். முடியவில்லை. என்ட வலது கால் முழங்காலுக்கு கீழே பெரிய கட்டு. ஒரு நிமிசம் நெஞ்சே வெடிச்சதைப்போல இருந்தது. திருப்பியும் காலையே பார்த்தன்.

சத்திரசிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டிருந்தது. இடது காலுக்கு கம்பி வைத்து கட்டப்பட்டிருந்தது. வீட்டுக்காரரை தேடினேன்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் எனது தம்பி உடம்பு முழுக்க மருந்து கட்டுக்களுடன். தம்பியின் மனைவி ஒரு கண்ணிலும் தலையிலும் கட்டுப்போட்டபடி… இரண்டு மருமக்கள் இடுப்புக்குக் கீழே காயங்களுடன் காணப்பட்டார்கள். ஐயோ என்று தொண்டை  வரை வந்தாலும்  வார்த்தைகள் வெளியே வரவில்லை இவர்களை பார்த்ததும் எனக்கு என்னைப் பற்றிய நினைவெல்லாம் மறந்துவிட்டது.

நடந்ததைக் கேட்டேன். தம்பியின் மனைவிக்கு கண்ணிலும் தலையிலும் காயம். அதோட அவன்ட கண்ணில ஒப்பரேஷன் வேற. மருமக்களுக்கும் காயம். யாரை நோவது எல்லாம் விதி என்று நினைச்சுக்கொண்டு ஒரு பெருமூச்சை விட்டன்.

நாட்கள் எப்படியோ நகர்ந்தன.  5 மாதங்கள் ஆஸ்பத்திரியில இருந்தேன். வர போரவர்களெல்லாம் ஐஞ்சப்பத்த தருவார்கள். ஆஸ்பத்திரி செலவுகளுக்கே அந்தக் காசு முடிஞ்சிடும். ஒரு நாளைக்கு எழும்ப முடியாம இருந்த என்னை தூக்கி பறிச்சு பார்க்க 1,200 ரூபாவை ஆஸ்பத்திரியர் கேட்பார்கள்.

என்ன செய்யிறது என்டு தெரியாம எனது மனைவி பிள்ளைகளுடைய காதில, கழுத்தில இருந்ததையெல்லாம் வித்து விட்டேன். ஒரு காலை இழந்த நான் மற்றக் காலையாவது பாதுகாக்க வேண்டும் என்று என்னால் முடிந்த அத்தனையையும் செய்தேன்.

இருந்தும் எதுவுமே சரியாக முடியவில்லை. பணம், பொருள் எல்லாவற்றையும் இழந்தது மட்டுமில்ல மற்றக்காலின் நரம்பும் பாதிக்கப்பட்டு விட்டதால சத்திர சிகிச்சை செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். இப்போது என்னிடம் எதுவும் இல்லை. என்னையும் எனது மனைவியினதும் மூன்று பிள்ளைகளினதும் உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

யுத்தத்தில் கால் போயிருந்தாலாவது உதவிகள் வழங்கப்படும் பட்டியலுக்குள்ள நானும் இணைந்திருப்பேன். அதுவும் இல்லை. உடம்பில வேறு எங்காவது காயம் ஏற்பட்டால் ஒரு கடையிலாவது நின்று என் குடும்பத்துக்கு கஞ்சியையாவது ஊத்துவேன். அதுவும் முடியாது. எதுவுமே இல்லாமல் இன்று படுக்கையில் குடும்பத்துக்கு பாரமாக இருக்கிறேன்.

எனக்கு மூத்தவர் மகன். அடுத்த இரண்டு பிள்ளைகளும் மகள் மார். மூத்த மகனுக்கு இருபது வயது. அடுத்த மகளுக்கு 18வயது. மூன்றாவது பிள்ளை முறிகண்டி இந்துவித்தியாலயத்தில ஏ.எல் படிக்கிறா. படுக்கையில இருக்கிற என்னையும் ஆஸ்மாவில இருக்கிற மனைவியையும் பராமரிக்கவே மூத்த இரண்டு பிள்ளைகளுக்கும் நேரம் போதாது.

அவர்களுக்கு எண்டு ஒரு வாழ்க்கையில்லை. எங்களை பார்க்கிறதிலேயே காலம் போகுது. எங்களால் அவர்களும் எங்கும் வேலைக்குச் செல்லமுடியாது.

யுத்தத்திற்கு முன் கூலி வேலை செய்ததோட 25 மாடுகள் சொந்தமாக வைத்து வேளாண்மை செய்த எனக்கு இன்று 25 ரூபா கூட இல்லாமல் இருக்கிறேன். ஒரு வேளை சாப்பாட்டை வயிரார சாப்பிட முடியவில்லை. மழை வந்தால் ஒதுங்க வீடில்லை கட்சி பேதமின்றி எல்லா அரசியல்வாதிகளிடமும் கையேந்தினேன். கேட்பவர்களெல்லாம் நன்றாக கேட்பார்கள்.

இதுவரை 5 ரூபா கூட எந்த ஒரு அரசியல் தலைவர்களோ அரசுசாரா நிறுவனங்களோ எனக்குத் தரவில்லை என்ற வேதனை எனக்குள்ள இன்னும் இருக்கின்றது.

இன்று எனது கொட்டில் வீட்டுக்கு முன்னாலாவது கச்சான் வித்தாவது எனது குடும்பத்தை காப்பேன் என்ற மன நம்பிக்கை எனக்குள் இருந்தாலும் அதற்கான மூலதனம் என்னிடமில்லையே என்ற சங்கடம் தான் இருக்கிறது. அதுக்காகவாவது யாரும் உதவிசெய்ய முன்வருவார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றேன்.

குமுறல் தொடரும்…..

பகுதி-1

Share.
Leave A Reply

Exit mobile version