அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா அமுதம் அங்காடி, அம்மா விதைகள், அம்மா பேபி கேர் கிட்…. என எல்லா இடத்திலும் அம்மா.

அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள, ‘அம்மா பேபி கேர் கிட்’ திட்டப்படி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு 16 பொருட்கள் தரப்படுகின்றன.

புதுத் துண்டு, குழந்தை உடை, குழந்தைப் படுக்கை, பராமரிப்பு வலை, நாப்கின், எண்ணெய் டப்பா, ஷாம்பு, சோப்பு, சோப்புப்பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, கை கழுவும் திரவம், கை கழுவும் சோப்பு, தாய்க்கு சுண்டிலேகியம்… இவ்வளவையும் வைத்துக்கொள்ள ஒரு பெட்டி ஆகியவற்றைக்கொண்டதாக அது இருக்கப் போகிறது.

சாமான்ய மக்களுக்கு இவை கைக்குக் கிட்டாத அதிசயப் பொருட்கள். சிலருக்கு இதில் ஏதாவது ஒன்றிரண்டு பொருட்களை வாங்கும் சக்தி இருக்கலாம். மொத்தமாக அனைத்தும் வாங்க இயலாது. இவ்வளவையும் மொத்தமாக வாரிக்கொடுப்பது வரவேற்கவேண்டியதே.

ஆனால், எல்லோரும் தன்னைப் போற்றும்விதமாக அல்லது மரியாதை நிமித்தமாக அழைக்கும் ‘அம்மா’ என்ற பதத்தையே, தாம் உருவாக்கும் திட்டங்களுக்குப் பெயராகச் சூட்ட வேண்டுமா?

”பெரியவர் முதல்  சிறியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் என்னை, ‘அம்மா’ என்று அழைக்கிறார்கள். இதைவிட எனக்கு என்ன வேண்டும்?” என்று தமிழ்நாடு  சட்டமன்றத்தில் கேட்ட ஜெயலலிதா, இன்னும்  வேண்டும், வேண்டும் என்று ‘அம்மா’ பெயர் சூட்டிக்கொள்வது அவசியமா?

கேட்டால், ‘ ‘அம்மா’ என்பது பொதுச்சொல்தானே!’ என்று விளக்குகிறார்கள். ‘கலைஞர்’ என்பதும் பொதுச்சொல்தான். சினிமா முதல் சின்னத்திரை வரை எல்லோருமே கலைஞர்கள்தான்.

ஆனால், கலைஞர் என்றதும், கரகரக் குரலும் கறுப்புக் கண்ணாடியும் நினைவுக்கு வருவதைப்போல, அம்மா என்றதும் ஜெயலலிதாதானே மனதில் வந்துபோகிறார்.

அ.தி.மு.க தலைமைக் கழகத்தாலோ, தனது சொந்தப் பணத்திலோ ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து அம்மா பஜனை பாடினால், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.

ஆனால், அரசாங்கப் பணத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தரப்பட்டுள்ள அந்தஸ்தை வைத்து, மக்கள் வரிப் பணத்தில் நிறைவேற்றப்படும் அரசு நலத் திட்டங்களுக்கு ‘அம்மா’ என்று பெயர் சூட்டுவது அபத்தம்; ஆபத்து; அருவறுக்கத்தக்கது!

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவர் செய்த தீமையை ஒருவர் மாற்றித் தடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், நன்மைகளையும் மாற்றுவதில் குறியாக இருப்பவர்கள்.

அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்து (அந்த நம்பிக்கை கருணாநிதியிடமே இப்போது இருக்கிறதா என்பது வேறு விவாதம்!) இந்தத் திட்டங்களின் பெயரை மாற்றினால் பரவாயில்லை.

திட்டமே ‘அம்மா’ பெயரை நினைவுபடுத்துகிறது என்று நிறுத்திவிட்டால், ஜெயலலிதாவின் நோக்கமே சிதைந்துபோகும். முதல்வரின் நோக்கம், தன் பெயரைச் சூட்டுவதா, திட்டம் உருவாக்குவதா என்பதை முதலில் முடிவுசெய்ய வேண்டும்.

பெயர் சூட்டுவதால் எந்தப் பெருமையும் இல்லை. மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் தனது பெயரையும், சத்துணவு திட்டத்துக்கு எம்.ஜி.ஆர் தனது பெயரையும் சூட்டிக்கொள்ளவில்லை.

p10a

‘காமராஜர் அன்றைக்கு சோறு போட்டதால்தான், நான் படித்து முன்னேறினேன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர் சாப்பாடு போடாவிட்டால், நான் பள்ளிக்கூடத்துக்கே போயிருக்க மாட்டேன்’ என்று இன்றும் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இழைத்து, இழைத்து வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதி கட்டினார். திறப்புவிழா நடக்குபோது அவரது ஆட்சி கலைக்கப்பட்டு இருந்தது.

அதற்காகக் கோட்டத்தைக் கட்டியது அப்போதைய கவர்னர் கே.கே.ஷா என்று யாராவது நினைப்பார்களா என்ன? கல்லணை கட்டியது யார் என்றும், தஞ்சை பெரிய கோயில் அமைத்தது யார் என்றும் மக்களுக்குத் தெரியும். திட்டம் சிறப்பானதாக இருந்தால், மக்கள் மறக்க மாட்டார்கள். பயனற்ற பதராக இருந்தால், மறுநாளே மறக்கப்படும்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ‘ஜெ.ஜெ.ரகம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. நெல் ரகங்களுக்கு அதன் பெயர்தான் அடையாளம். CO49 என்றால் கோவை  வேளாண் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

ADT49 என்பது ஆடுதுறையிலும், K1 என்பது கோவில்பட்டியிலும், TKM 13 என்பது திருவூர்குப்பம் பண்ணையிலும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது இதன் பொருள். ஆனால், ஜெ.ஜெ ரகம் சுயநலப் பண்ணைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு காணாமலும்போனது. காரணம் அதன் நோக்கம், மக்கள் பசியாறுவது அல்ல; துதி பாடுவது!

ஆனால், இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதிதான். கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பருப்பு ரகத்துக்கு தன் ‘அம்மா’ அஞ்சுகம் பெயரை கருணாநிதி சூட்டியதில் இருந்து இது ஆரம்பித்தது.

மாணவன் உதயகுமாரின் உயிர் விளையாட்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டது. அண்ணாவுக்கு ஒரு நகர் இருக்கிறது, நமக்கு வேண்டாமா என்று கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்) பெயர் சூட்டப்பட்டது.

அதில் இருந்து ஆரம்பித்து கடைசியாக ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ வரை அந்தப் பெயர் சூட்டும் பணி தொடர்ந்தது. ஜெயலலிதா வந்ததும் பெயரையும் மாற்றி, கம்பெனியையும் மாற்றி, அப்போது வாங்கப்பட்ட அட்டையும் செல்லாது என்று ஆக்கி… ஒரே நேரத்தில் பல்வேறு கத்திகளைச் செருகினார்!

கருணாநிதிக்கு எதற்கு டாக்டர் பட்டம்? மூன்று பிஹெச்.டி வாங்கியவர்களால்கூட, ‘மனசாட்சி உறங்கும் நேரம் பார்த்துதாம், மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று கருணாநிதி எழுதிய மூன்று வரிகளைக்கூட எழுத முடியாது.

‘நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?’ என்று கருணாநிதியிடம் கேட்கப்பட்டது. ‘M.A P.F’ படித்திருக்கிறேன்’ என்றார். ‘அப்படி ஒரு பட்டமே இல்லையே’ என்றதும், ‘மெட்ரிகுலேஷன் அட்டெம்ப்ட், பார்ட் ஃபெயில்’ என்றார்.

இந்தப் புத்திசாலித்தனத்தைவிடவா கௌரவ டாக்டர் பட்டம் பெருமை சேர்த்துவிடப்போகிறது? அவர் ஆரம்பித்தது எம்.ஜி.ஆரில் தொடர்ந்து, ஜெயலலிதாவில் மலையெனக் குவிந்தது. ஜெயலலிதாவும் ‘டாக்டர்’ ஆகிவிட்டார் என்றதும், கருணாநிதி ‘டாக்டர்’ என்று போட்டுக்கொள்வது இல்லை.

‘தனக்குத்தானே பட்டங்கள் கொடுத்துக்கொள்வதும், தனது பெயரைத் தானே சூட்டிக்கொள்வதும், தன்னைப் பார்த்து தானே மோகம்கொள்வதற்கு ஒப்பானது’ என்பார் சிக்மண்ட் ஃப்ராய்டு.

ஆற்றங்கரையில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவன் நீரில் தெரியும் பிம்பத்தைப் பார்த்து, ‘தன்னைவிட அழகாக இருக்கும் இவன் யார்?’ என்று திகைத்து நிற்பான்.

அந்த இடத்தில் அவனைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். தான்தான் இவ்வளவு அழகாக இருக்கிறோமா என்று தன்னுடைய பிம்பத்தைக் காதலிப்பான். ஃப்ராய்டு குறிப்பிடும் இந்த மனோபாவம் அரசியலிலும் சினிமாவிலும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேபோகிறது.

2001-2006ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெயலலிதா இப்படி இல்லை. திட்டங்களுக்கு தன் பெயரைச் சூட்டும் ஆர்வம் அவரிடம் துளியும் இல்லை. முந்தைய தேர்தலில் (1996) வாங்கிய அடி, அதற்குக் காரணமாக இருக்கலாம்.

1991-1996ம் ஆண்டு காலகட்டத்தில் ‘டாக்டர் புரட்சித் தலைவி மருத்துவ நலத் திட்டம்’, ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டம்’, ‘பெண் குழந்தைகளுக்கான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா திட்டம்’, ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்’, ‘ஜெ.ஜெயலலிதா நகர் (ஜெ.ஜெ.நகர்)’... எனப் பலவும் அப்போதைய அமைச்சர்களால் ஆராதிக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்டது. அந்தப் பூசாரிகளில் பலர் இப்போது அ.தி.மு.க-விலேயே இல்லை.

அன்று புரட்சித் தலைவி… இன்று அம்மா! அவ்வளவுதான் வித்தியாசம். ஆளும் கட்சியாக வந்துவிட்டோம் என்ற பெருமை ஆட்டுவித்தது அன்று. இன்று மூன்றாம் முறை முதலமைச்சர் என்பதால், அந்த மயக்கம் இருக்காது. ஆனால், தன்னை எதிர்க்க யாருமே இல்லை, கேள்வி கேட்க எவருமே இல்லை என்ற நினைப்பே இன்று ஜெயலலிதாவை இப்படிச் செயல்பட வைக்கிறது.

சமீபமாக, கருணாநிதிக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையைவிட, தி.மு.க தலைவர் பதவியைத் தக்கவைக்க வேண்டும் என்ற பதற்றம்தான் பாடாய்ப் படுத்துகிறது.

ஏதோ தி.மு.க வென்றுவிட்டது மாதிரியும், புதிய அமைச்சரவை பதவியேற்கக் காத்திருப்பது மாதிரியும், கோட்டைக்கு கான்வாய் தயாராக இருப்பது மாதிரியும்… கோபாலபுரத்தில் இருக்கும் ஒருவர் மட்டும்தான் அதற்குத் தடையாக இருப்பது மாதிரியும்… ஸ்டாலின் யோசிக்கிறாரே தவிர, அவருக்கு ஜெயலலிதாவைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை.

தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மாற்றாகப் புறப்பட்ட பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தேய்ந்து, முடிவுகளுக்குப் பிறகு முடங்கிவிட்டன. ராமதாஸ் மட்டும்தான் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட நான்கைந்து பக்கங்களுக்கு அறிக்கைவிடுகிறார். ‘தான் எதிர்த்த சோனியாவைவிட மோசமான நிலைப்பாடுகளை எடுக்கிறார், தான் ஆதரித்த மோடி,’ என்ற நினைப்பு வைகோவை வாட்டிக்கொண்டு இருக்கிறது.

உடலையும் கட்சியையும் சேர்த்துக் கவனிக்க விஜயகாந்த் திணறி வருகிறார். பா.ஜ.க-வுக்கு டெல்லிதான் முக்கியமே தவிர, தமிழ்நாடு ஒரு பொருட்டே இல்லை. ‘எவ்வளவு குறைவாகக் கொடுத்தாலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி’ என்று கமலாலயத்தில் கண்சிமிட்டல் பேச்சுக்கள் தொடங்கிவிட்டன.

இல்லாத முதலமைச்சர் நாற்காலியை இருட்டு சத்தியமூர்த்தி பவனில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தேட ஆரம்பித்துள்ளார்கள். பாலன் இல்லம் கட்டிய பெருமிதமும், அதற்கு வாடகைக்கு ஆள் வர வேண்டுமே என்ற கவலையும்தான் இந்திய கம்யூனிஸ்ட் தலைமைக்கு. மத்திய அரசு மட்டும்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு.

எதிர்த்துக் களமாடவேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்க, இப்போதைக்கு கல்வி உரிமை போதும் எனத் தன்னார்வத் தொண்டராக மாறிவிட்டார் தொல்.திருமாவளவன். இப்படி எல்லாக் கட்சிகளும் தங்கள் கட்சிகளைத் தக்கவைக்கவே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அம்மா பஜனையைப் பற்றி கேள்வி கேட்கக்கூட இங்கே ஆள் இல்லை!

‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிகத் திறமைசாலிகள்’ என்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் பாட்டுக்கு நடுவே ஒரு வசனம் வரும். அது மந்திரிகளுக்கு மட்டுமா… தமிழக மக்களுக்கும் சேர்த்தா ‘அம்மா’?

ப.திருமாவேலன்

 

Share.
Leave A Reply

Exit mobile version