இலங்கையிலுள்ள சில ஹஜ் பிரயாண முகவர்கள் கடந்த புதன்கிழமை பொதுபல சேனா அமைப்பைச் சந்தித்து கலந்துரையாடிய விவகாரத்தையடுத்து 2014 ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் யாத்திரை தொடர்பான சர்ச்சை புதுவடிவம் எடுத்திருக்கிறது.
ஹஜ் என்பது முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ள 5 ஆவது கடமையாகும். பொருளாதார வசதியும் உடல் பலமும் உள்ள ஒருவர் தனது வாழ் நாளில் ஒருமுறை சவூதி அரேபியாவிலுள்ள மக்கா நகருக்குச் சென்று ஹஜ் கடமையில் ஈடுபட வேண்டும். சுமார் 3 மில்லியன் பேர் வருடாந்தம் இக் கடமைக்காக மக்கா நகரில் ஒன்றுகூடுகின்றனர்.
உலகின் சகல பாகங்களிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்கள் இக் கடமைக்கு வருவதன் காரணமாகவும் மக்காவில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகள் காரணமாகவும் சவூதி அரசாங்கம் ஒவ்வொரு நாட்டுக்குமான யாத்திரிகர்கள் எண்ணிக்கையை கோட்டா அடிப்படையில் மட்டுப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இலங்கையிலிருந்து 2800 பேர் மாத்திரமே இவ்வருடம் இக் கடமைக்காக செல்ல முடியும். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வரை 5000 முதல் 8000 வரையான யாத்திரிகர்கள் இலங்கையிலிருந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர்களை மக்காவுக்கு அழைத்துச் செல்லும் பணியில் நூற்றுக்கு மேற்பட்ட பிரயாண முகவர் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஹஜ் கோட்டாவினை பிரதமரும் மதவிவகார அமைச்சருமான டி.எம். ஜயரத்னவினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் ஆகியோரின் இணைத் தலைமையிலான ஹஜ் குழு முகவர்களுக்கு பகிர்ந்தளிக்கிறது.
முகவர்களின் அனுபவம், தகுதி, கடந்த கால சேவைகள், அவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நேர்முகப்பரீட்சை மூலமாகவே இந்த கோட்டா முகவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இருப்பினும் இம்முறை ஹஜ் குழு முகவர்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகவும் பாரபட்சமான முறையில் ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஹஜ் முகவர் அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தனர்.
இருப்பினும் சவூதி அரேபியா, உரிய காலக்கெடுவுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் பௌசியின் பட்டியலுக்கமைவாக தாம் அடுத்த கட்டப் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் புதிய பட்டியலை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அறிவித்துவிட்டது.
ஆக, ஏலவே தயாரிக்கப்பட்ட பட்டியலுக்கு அமைவாகவே இம் முறை ஹஜ் யாத்திரிகர்களை முகவர்கள் அழைத்துச் செல்ல முடியும்.
இந்நிலையில்தான் உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு சில ஹஜ் முகவர்கள் கடந்த புதன்கிழமை பொதுபல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேவைச் சந்தித்து தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள் ளனர்.
“ஹஜ் விவகாரத்தில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் புகுந்து விளையாடுகிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே தான் இந்த விடயத்தில் பொதுபல சேனா தலையிட வேண்டும். அநீதியிழைக்கப்பட்டுள்ள எமக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும்’’ என தம்மைச் சந்தித்தவர்கள் வேண்டுகோள்விடுத்ததாக டிலந்த விதானகே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் முஸ்லிம்களின் மார்க்க தலைமைத்துவங்களுடனும் அரசியல் தலைமைத்துவங்களுடனும் சம்பந்தப்பட்டுள்ளதால் இதில் பொதுபல சேனா தலையிட விரும்பவில்லை என தாம் குறித்த முகவர்களிடம் தெரிவித்ததாகவும் இருப்பினும் பொதுபல சேனா இதில் தலையிட்டாலேயே தமக்கு நீதி கிடைக்கும் என முகவர்கள் உறுதியாக இருந்ததாகவும் டிலந்த விதானகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட முகவர்களுள் ஒருவர் தாம் பொதுபல சேனாவை திட்டமிட்டுச் சந்திக்கவில்லை எனவும் தற்செயலாக வீதியில் வைத்து டிலந்த விதானகேவை கண்டு கொண்ட சமயத்தில்தான் இதுபற்றி அவருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதனை மறுத்துள்ள டிலந்த, செவ்வாய்க்கிழமை இரவு தம்மிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே மறுநாள் புதன் கிழமை இச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இது தற்செயலான நிகழ்வு அல்ல எனவும் ஹஜ் விவகாரத்தில் பொதுபல சேனா தலையிட விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஹஜ் முகவர்கள் பொதுபல சேனாவைச் சந்தித்தமையானது முஸ்லிம்கள் மத்தியில் பலத்த கண்டனத்தையும் விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்கியும் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான பிரசாரங்களை முன்னெடுத்தும் வருகின்ற, அளுத்கமவில் கலவரம் வெடிப்பதற்கு வித்திட்ட பொதுபல சேனா அமைப்பைச் சந்தித்து நீதி கோரியமையானது முஸ்லிம்களை மாத்திரமன்றி பொதுபல சேனாவின் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத சகல மக்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் சிந்தனைகளையோ செயற்பாடுகளையோ எந்தவொரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்வதில்லை. மட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அமைப்பு மேற்கொள்ளும் செயற்பாடுகளை தமிழர்களிலும் பௌத்தர்களிலும் கூட கணிசமானவர்கள் எதிர்க்கிறார்கள்.
இந்நிலையில் முஸ்லிம்களில் உள்ள ஒரு குழுவினர் அதுவும் புனித கடமை ஒன்று தொடர்பான விடயத்தில் இவ்வாறு பொதுபல சேனாவிடம் சென்று மண்டியிட்டு நீதி கோரியுள்ளமையானது மேற்சொன்ன சகல தரப்பினரையும் சலிப்படையச் செய்துள்ளது.
இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் கூட காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. “ முஸ்லிம்களில் ஒருதரப்பினர் பொதுபல சேனாவைச் சந்தித்து தங்களது மார்க்க விடயங்கள் தொடர்பில் தலையிடுமாறு கோரியிருப்பது சொரணையற்ற சிறுபான்மைச் சமூகமாக சித்திரித்துக் கொள்வதற்கு ஒப்பானது” என ஓர் சிங்கள இணையதளம் கருத்து வெளியிட்டுள்ளமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதேபோன்று நாட்டின் சட்டம், ஒழுங்குகளை மதிக்காது நடந்து கொள்கின்ற பொதுபல சேனாவிடம் சென்று தமக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக முறையிட்டதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் காட்டிக் கொடுத்துள்ள இந்த முகவர் அமைப்புகளை பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் இந்த முகவர்களுடன் இணைந்து எந்தவொரு முஸ்லிமும் ஹஜ் கடமைக்குச் செல்லக் கூடாது எனவும் தற்போது நாடளாவிய ரீதியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பேஸ் புக், டுவிட்டர், வட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களை மையப்படுத்தி இன்று நாடளாவிய ரீதியில் இப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை சில முஸ்லிம் பகுதிகளில் இது தொடர்பில் மக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக முகவர் அமைப்புகள் யாத்திரிகர்களை ஏமாற்றி நிதி மோசடிகளில் ஈடுபடுவதும் புனித கடமை என்றும் பாராது இஸ்லாத்துக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் கண்டிக்கத்தக்கதாகும்.
இன்று அதன் தொடரில்தான் சமூகத்தின் உணர்வுகளை மதிக்காது பணத்தை மாத்திரமே குறியாகக் கொண்டு செயற்பட்டதால்தான் இவர்கள் பொதுபல சேனாவிடம் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான சமூ கத்தைக் காட்டிக் கொடுக்கின்ற முகவர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் மிகவும் அவதா னமாக நடந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் மார்க்க தலைமைத்துவ மான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதுபற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று சிவில் சமூக அமைப்புக ளான தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன் ஸில் உள்ளிட்ட அமைப்புகளும் இது விட யத்தில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.
எதிர்காலத்தில் ஹஜ் விவகாரத்தை நெறிப்படுத்தி ஓர் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைத்திட் டத்தை ஆரம்பிப்பதற்கான தருணமாக இத னைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றேல் நாளை முஸ்லிம்களின் மார்க்க விடயங்களில் தலையிட்டு தீர்ப்புச் சொல் கின்ற பஞ்சாயத்துக்காரர்களாக பொதுபல சேனாவினர் மாறிவிடுவார்கள். அதன் பிற்பாடு கைசேதப்படுவதில் எந்தவொரு அர்த்தமும் இராது.
பைஸ் –