தேர்தல் அரசியல் நிலையான கொள்கைகளையும், சமூகத்துக்கு அவசியமான கருத்தியல்களையும் அதிகம் கொண்டிருப்பதில்லை. அது, அதிகாரத்தை எவ்வாறு அடையலாம் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அரசியலினால் சமூக முன்னேற்றம் பெரிதாக சாத்தியமாவதில்லை.
இவ்வாறானதொரு பிரதிபலிப்பை கடந்த வாரத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். அது, அடிப்படையற்ற கொள்கை முரண்களுடன் கூடியதாக இருக்கின்றது.
அதுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றத்தையும், முன்னோக்கிய அரசியல் பயணத்தையும் வேறொரு திசையில் கொண்டு சேர்ப்பதாக இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுத போராட்ட இயக்கங்களோடு தன்னால் இணைந்து இயக்க முடியாது என்று கடந்த வாரம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கூட்டமொன்றில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்த்த (தமிழர் விடுதலைக் கூட்டணி இப்போது கூட்டமைப்புக்குள் இல்லை என்று கொள்ளலாம்) ரொலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளோடு தன்னால் இணைந்து இயங்க முடியாது என்பதையே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முழுமையாக இணைந்து கொண்டு முன்னெடுத்திருக்கிறார். அதற்கு அவர் அஹிம்சா வழி அரசியல் என்ற தோரணையிலான கருத்தையும் முன்வைத்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும் கொழும்பின் புதுக்கடையில் பிறந்த சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை அரச சேவையில் இணைந்து நீதியரசராக பதவி வகித்தவர்.
ஓய்வின் பின், கொழும்பில் தமிழ் மற்றும் சைவ வளர்ச்சி பற்றிய மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்களில் பிரதான அழைப்பாளராக மேடைகளை அலங்கரித்தவர். அப்போதும், அவர் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டினை முன்வைத்து வந்திருக்கின்றார்.
ஆனால், அப்போது, அவருக்கு தேர்தல் அரசியலை தேர்தெடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கவில்லை.
அதுபோக, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற தமிழ்த் தேசிய அரசியலுக்கு வருவதற்கு அவரினால் சாத்தியமான வழிகள் இருக்கவில்லை.
ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதம் பெற்றவர்களையே மக்கள் ஆதரித்து வந்திருந்தனர். இவ்வாறானதொரு நிலையில், சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் 2009க்கு முன்னர் இருந்திருக்கவில்லை.
இது, எல்லோரும் அறிந்த வரலாறு. அதன் நீட்சிதான் இப்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதனை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டிருப்பதும். அதனை, இரா.சம்பந்ததோ, எம்.ஏ.சுமந்திரனோ, சி.வி.விக்னேஸ்வரனோ மறுக்க முடியாது. அப்படி மறுத்தாலும் அது முழுக்க முழுக்க அபத்தங்களினால் ஆனது.
தமிழ்த் தேசிய அரசியல், தந்தை செல்வாவுக்குப் பின் தலைமைத்துவ சிக்கலுக்குள் இருந்து வந்திருக்கின்றது. அது, அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், வீ. ஆனந்தசங்கரி, இரா.சம்பந்தன் என்று தளம்பலான நிலையிலேயே தமது தலைவர்களை வைத்துக் கொண்டிருந்தது.
இதில், இன்னொரு விடயமும் முக்கியத்துவம் பெறுகின்றது. தந்தை செல்வாவின் காலத்துக்குப் பின் தமிழ்த் தேசியத்தினை ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தமது கைகளுக்குள் எடுத்துக் கொண்டுவிட்டன. அவற்றுக்கு முன்னால், அரசியல் கட்சிகளினால் நிலையான இடத்தினைப் பிடிக்கவும் முடியவில்லை. அதற்கான சூழ்நிலைகளும் இருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்தமான வீழ்ச்சி என்பது புதிய அரசியல் தலைமை ஒன்றின் தேவையை தமிழ் மக்களிடம் விதைத்து. அதற்கான தேடல் என்பது திரும்பத் திரும்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே முன்னெடுக்கப்பட்டது.
அது, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர்களையே முன்னிறுத்தியது. இவ்வாறானதொரு நிலையில் தான் வட மாகாண சபைத் தேர்தலுக்காக கவர்ச்சிமிக்க வேட்பாளரின் தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டது. இதுதான், பல சர்ச்சைகளைத் தாண்டி சி.வி.விக்னேஸ்வரனை தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வந்து சேர்த்தது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று இரா.சம்பந்தனினால் உத்தியோகபூர்வமாக சி.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டார்.
அப்போது, அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து அழைத்தால் தான் போட்டியிடுவதாக அறிவித்தார்.
அது, ஊடகங்களிலும் வெளியானது. அப்போது, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுவேட்பாளரே அன்றி, அதில் அங்கம் வகிக்கும் கட்சியொன்றினைச் சார்ந்தவராக இருக்கவில்லை. இதுதான் கடந்த வருட வரலாறு.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சார காலங்களிலும் சி.வி.விக்னேஸ்வரன் தன்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராகவே முன்னிறுத்தினார்.
மற்றபடி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி என்ற ரீதியில் எதையுமே மொழியவில்லை. அதுபோக, தமிழ் ஆயுத போராட்ட இயக்கங்களின் பெருமைகளினையும், புகழினையும் அற்புதமாக அவர் ஆளுமைபெற்ற தமிழில் பாடினார்.
அதுவும், அவர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி பாடிய புகழ் உலகம் அறிந்தது.
தேர்தல் வெற்றி சி.வி.விக்னேஸ்வரனுக்கு புதிய ஞானத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதுவும், தன்னை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி போலவே செயற்பட வைத்து.
அதுவும், வடக்கு மாகாண அமைச்சர்கள் நியமனத்தின் போது பங்காளிக் கட்சிகளின் வேண்டுகோள்களை மீறி, குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் எதிர்ப்பினை மீறி அந்தக் கட்சிக்குள் இருந்து பொன்னுத்துரை ஐங்கரநேசனை அமைச்சராக நியமிக்கும் அளவுக்கு மாறியது.
அது, நிர்வாகத் திறமையுள்ளவர்களை தன்னொடு வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்று எடுத்துக் கொண்டு விடலாம். ஆனால், சி.வி.விக்னேஸ்வரனின் தற்போதைய நடவடிக்கைளில் காணப்படும் பொறுப்பின்மை அல்லது கருத்து வெளிப்படுத்தல்களின் போது வெளிப்படும் அதிகார தோரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதறடிக்கும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன.
இன்னொரு புறத்தில், சி.வி.விக்னேஸ்வரன் தன்னை ஒரு கட்சியில் இணைத்துக் கொள்வது அவரது உரிமை என்ற விடயம் இருக்கின்றது.
ஆனால், அவரது அரசியல் வருகை என்பது தனிக்கட்சி சார்பில் எப்போதும் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. அதுவும், 12 வருடங்களைத் தாண்டிய வரலாறினைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளை, அதற்குள் வந்த ஒரு வருடத்துக்குள்ளேயே எரிச்சற்படுத்துமளவுக்கு அவரின் நடவடிக்கைகள் இருப்பதுதான் பெரும் சோகம்.
தமிழ் அரசியல் சூழலில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மாத்திரமல்ல, அஹிம்சை வழிக்கட்சிகள் என்று தங்களை முன்மொழியும் கட்சிகளும் இரத்தக்கறை தோய்ந்த கரங்களுடனேயே இருக்கின்றன. ஏனெனில், அதிக தருணங்களில் ஆயுத போராட்டத்தினை அந்தக் கட்சிகளே ஊக்குவித்தும் வந்திருக்கின்றன.
அது, அந்தக் கட்சிகளின் கைகளை மீறிச் சென்றது என்பது உண்மையே. மற்றப்படி, அஹிம்சைவாதிகள் என்று தங்களை முன்னிறுத்துபவர்களின் கைகளின் அடியிலும் இரத்தக்கறை உண்டு. இதுதான், நாம் கடந்து வந்த பாதை. அந்தப் பழைய வரலாற்றை, (அவருக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்த வரலாற்றை) சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் பேச வைத்திருக்கின்றார்.
தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம்
ஆனால், அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. அது, தன்னுடைய அதிகார எல்லைகளை குறைத்துவிடும் என்று கருதுகிறது.
அதுதான், இரா.சம்பந்தனாக இருந்தாலும், மாவை சேனாதிராஜாவாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதை தவிர்க்க வைக்கின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய பங்காளிக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து ஓய்ந்து போய்விட்டன. கடந்த வாரத்திலும் அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அதனை, சாதகமான முறையில் பரிசீலிப்பதாக இரா.சம்பந்தன், பங்களிக் கட்சிகளிடையே பதிலளித்துக் கொண்டிருக்க, தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான மாவை சேனாதிராஜா லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்காக வாய்ப்புக்கள் இல்லை என்றிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் அதிக ஆளுகை என்பது பெருமெடுப்பில் மேலெழுந்து வருகின்றது. அது, பங்காளிக் கட்சிகளை சரியாக மதிக்கும் நிலையை இல்லாமற் செய்துவிடுமோ என்கிற நிலைகளை தோற்றுவித்திருக்கிறது. இது, எதிர்கால நிலைபெறுகைக்கு நல்லதல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கொள்கை, கோட்பாட்டியல் ரீதியாக ஒன்றிணைந்தவை அல்ல. அது, தமிழீழ விடுதலைப் புலிகளின் நாடாளுமன்ற அரசியல் பிரிவு. இன்றைக்கு விடுதலைப் புலிகள் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. அதனை, மக்கள் இறுதித் தெரிவாகக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு சடுதியாக சாத்தியமாகாது. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் வரையில்தான் வாக்குகளைப் பெற முடியும் என்ற வெளிப்படையான உண்மை அதற்குள் இருக்கும் அனைத்துப் பங்காளிக் கட்சிகளுக்கும் தெரியும். அதுதான், அவர்களை இப்போது இணைத்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரே புள்ளி. இல்லையென்றால், எப்போதோ பிரிந்து சென்றிருப்பார்கள்.
வாக்குகள் மட்டுமே கட்சிகளை இணைத்து வைத்துக் கொண்டிருக்கும் நிலை என்பது தூர நோக்குள்ள அரசியலுக்கு நல்லதல்ல. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஆதிக்கம் செலுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உணர்ந்து கொள்ள வேண்டும். இதனையே, தமிழ் மக்களும், ஊடகங்களும், சிவில் சமூக அமைப்புக்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றன.
அதை இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், ஏம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மறுபுறத்தில், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றவர்கள் தங்களின் அழுத்தமான நடவடிக்கைகளின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்டத்துக்கான பங்களிப்பை வழங்க வேண்டும்.
அதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான அரசியல் முன்னேற்றத்திற்கான ஆரம்பமாக இருக்கும். அது, ஆரம்பம் மட்டுமே. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் வீரியமாகவும், சமயோசிதமாகவும் பயணிக்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கின்றது.
இல்லையென்றால், திரும்பவும் பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி ஏற்படும். இதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தவன் என்கிற வகையில் சொல்லக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. புரிந்து கொள்ளுங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களே. அதுதான், எங்களுக்கும் உங்களுக்கும் நல்லது!
-புருஜோத்தமன் தங்கமயில்–