தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தனியொரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை. அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா லண்டனுக்குச் சென்றிருந்த நேரம் அங்கு வைத்து தெரிவித்திருக்கின்றார்.

அது மட்டுமல்லாமல் தானோ அல்லது தனது கட்சியின் தலைவர்களோ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படும் என்று வாக்குறுதி எதனையும் கொடுக்கவில்லை என்பதையும் கூறியிருக்கின்றார்.

தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் இணைந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தனியொரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன் வைக்கப்பட்டு வந்துள்ளது, இந்த விடயம் குறித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு  குழு போன்ற பல்வேறு மடட்டங்களிலான கூட்டங்களில் பல தடவைகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கென நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் புளொட் அமைப்பின் தவைர் த.சித்தார்த்தனையும் உள்ளடக்கிய குழுவொன்றும்  திருகோணமலையில்  நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் தேர்தல் திணைக்களத்தில் ஏற்கனவே கையளிக்கப்பட்டு, பதிவு நடவடிக்கைக்காக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயர் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றது.

இத்தகைய ஒரு நிலைமையின் பின்னணியிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பதிவு செய்யப்படமாட்டாது என்ற தகவல் மாவை சேனாதிராஜாவினால் இப்போது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சின்னமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்   வீட்டுச் சின்னமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல், அதன் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இந்த வகையில் தமிழரசுக் கட்சியே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகச் செயற்பட்டு வருகின்றது. தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்படும் வரையில் கூட்டமைப்பின் தேர்தல் மற்றும் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் தொடர்புபட்ட அனைத்து விடயங்களிலும், தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜாவே செயற்பட்டு வந்துள்ளார்.

அவ்வாறு செயற்பட்டு வந்த அவரே இப்போது தமி;ழ்த்தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படும் என்று வாக்குறுதி எதனையும் தாங்கள் வழங்கவில்லை என கூறியிருக்கின்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் அளவற்ற மதிப்பையும் நம்பிக்கையையும் கொண்டுள்ள ஓர் அரசியல் அமைப்பாகும். கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களைப் பொருத்தமட்டில், மந்திரம் போன்று சக்தி வாய்ந்தது.

விடுதலைப்புலிகள் காலத்தில் உருவாக்கப்பட்டு கடந்த 13 வருடங்களாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. இக்காலப் பகுதியில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளார்கள்.

இதனால், தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு செல்வாக்கு மிக்க அரசியல் அமைப்பாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே இன்னும் திகழ்கின்றது. உள்நாட்டிலும்சரி, சர்வதேச மட்டத்திலும்சரி, இலங்கைத் தமிழ் மக்களின் அதிகாரமுள்ள அரசியல் அடையாளமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பே கணிக்கப்படுகின்றது. சர்வதேச அரங்குகள் அனைத்திலும், தமிழ் மக்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்கின்றது.

இதனால் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் அதிக செல்வாக்கு பெற்ற ஓர் அரசியல் பெயராகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு திகழ்கின்ற ஒரே காரணத்திற்காகத் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செல்வாக்கைப் பெற விரும்புகின்ற தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், சிங்கள அரசியல்வாதிகளும்கூட, அந்தப் பெயரைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் திணைக்களத்தில் தேர்தல் ஆணையாளருடன் இடம்பெற்ற ஒரு சந்திப்பின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதானால், விரைவாகப் பதிவு செய்ய வேண்டும்.

இல்லையேல், அந்தப் பெயரில் பதிவு செய்வதற்காக வேறு பலர் தம்மை நச்சரித்துக் கொண்டிருப்பதனால், அவர்களில் யாருக்காவது அதனைக் கொடுக்க வேண்டியேற்படும் என்று தேர்தல் ஆணையாளர், அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பிரதிநிதிகளிடம் எச்சரித்திருந்தார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் திருகோணமலையில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கேள்வியுற்றதையடுத்து கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, மாவை சேனாதிராஜா உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

mavaiநாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு இந்த விடயம் நிச்சயமாக நினைவில் இருக்க வேண்டும். அவர் இதனை மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் கூட்டமைப்பைப் பதிவு செய்வதென்பது நடைமுறை சாத்தியமற்றது. இப்போது இருப்பது போலவே, கூட்டமைப்பு செயற்படும் என்று என்ன நோக்கத்திற்காக கூறினார் என்பது தெரியவில்லை.

கூட்டமைப்பு ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டமானது, ஆயுதப் போராட்ட காலத்திற்கு முன்னர் கட்டமைப்போடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.  சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் தலைவர்கள், பேரினவாத அரசியல் தலைவர்களுடன் உள்ளுரிலேயே பேச்சுக்களை நடத்தினார்கள்.

உடன்பாடுகளைக் கண்டார்கள். ஒப்பந்தங்களைச் செய்தார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்தவே இல்லை. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களை அடக்கியொடுக்குவதற்காக சட்டத்தின் துணையைக் கையில் எடுத்துச் செயற்பட்டார்கள்.

இதனால் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் தலைவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அப்படியிருந்தும், அன்றைய தொடர் சாத்வீகப் போராட்டங்களின் மூலம், முன்னைய தமிழ் அரசியல் தலைவர்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை.

அதேபோன்று, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணவும் அவர்களால் முடியாதிருந்தது. இந்த நிலையில்தான் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தலையெடுத்தது. ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டது.

வன்முறையாளர்கள், வன்முறை வழி வந்தவர்கள் என்று, ஒரு வகையில் அரசியல் ரீதியாக ஏளனமாக இன்று சுட்டிக்காட்டப்படுகின்ற போரட்ட அமைப்புக்களே, தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்காகவும், பேரினவாத அரசுகள் ஆயுதப் படைகளைப் பயன்படுத்தி நடத்திய ஒடுக்குமுறைகளில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகவும் ஆயுதமேந்தி போராடியிருந்தன.

இதற்காக அளவற்ற உயிர்த்தியாகங்களை அந்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தார்கள். இத்தகைய போராட்டமும், உயிர்த்தியாகங்களுமே, இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக திம்பு தொடக்கம் ஐரோப்பிய நாடுகளின் பல நகரங்களிலும் சரவ்தேசத்தின் பார்வையில் பேச்சுக்கள் நடத்துவதற்கான வழி சமைத்திருந்தது. இந்த வழிமுறையின் பயனாகத்தான், இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச அளவில் அதிமுக்கியத்துவம் பெற்றதாக மாற்றம் பெற்றிருக்கின்றது.

துரதிஸ்டவசமாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு, மீண்டும் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அன்றைய நிலையிலும்பார்க்க, அரச அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் இன்று மோசமடைந்திருக்கின்றன. அன்றைய சாத்வீகப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் அதனதன் அளவில் கட்டுக்கோப்பான நிலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் என்பவற்றுக்கு முகம் கொடுப்பதென்பது தமிழ் மக்களுக்கும் சரி, தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் சரி கடினமான காரியமாகியிருக்கின்றது.

இந்த நிலையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எவரும் செயற்பட முடியாது. அரசாங்கம் என்ன வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைத் தீர்க்கதரிசனத்துடன், மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களை அணி திரட்ட வேண்டியிருக்கின்றது.

கட்டுக்கோப்பான முறையில் காரியங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குப் போராட்டச் செயற்பாடுகள் தள்ளப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியான யுத்தச் சூழலில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இன்னும் மோசமான நிலைமைகளை நோக்கி தள்ளிச் செல்வதற்கான வியூகங்களை அமைத்து, அரச தரப்பினரும், பேரினவாதிகளும், பேரின தீவிரவாதிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் சக்தியை, ஒரே அணியாக வலுவுள்ளதாக, இறுக்கமானதாகக் கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது.

இது, கட்சி அரசியலை முன்னெடுக்கின்ற தருணமோ அல்லது ஆயுதமேந்திப் போராடியதற்காக, வன்முறை வழி வந்தவர்கள் – வன்முறையாளர்கள் என்று எவரையும் நிந்தித்து, ஒதுக்கி வைத்து, அவர்களில் இருந்து பிரிந்து சென்று அரசியல் நடத்துவதற்கான காலமோ அல்ல.

பல்வேறு நெருக்கடிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ளபோதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பில் கட்டுண்டிருக்கின்ற மக்களின் ஒன்றுதிரண்ட சக்தியை மேம்படுத்தி, அனைவரும் ஓரணியில் செயற்பட வேண்டிய ஒரு கால கட்டத்தி;ல் இருக்கின்றோம் என்பதைத் தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியென்ற வகையில் தமிழரசுக் கட்சி இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்துவதன் ஊடாகத்தான் இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை, சிதைவடையாமல் பாதுகாக்க முடியும்.

மக்களின் பலமும், ஆதரவும் அரவணைப்புமில்லாமல் ஒருபோதும் அரசியல் நடத்த முடியாது என்பது நீண்ட கால அனுபவமுள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

மக்களை நோக்கித் தலைவர்கள் செல்லவேண்டுமேயல்லாமல், தலைவர்களை நோக்கி மக்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. மக்களை நாடிச் செல்பவர்களே மக்கள் மத்தியில் செல்வாக்குடன் நிலைத்து நிற்க முடியும். மக்களுடைய போக்கில், அணுகி அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் ஊடாகத்தான் அரசியல் தலைமையைக் கைப்பற்றவும், அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்.

தலைவர்களுடைய போக்கிற்கு மக்கள் வளைந்து கொடுப்பார்கள் அல்லது மக்கள் தலைவர்களுடைய வழியைத் தேடி வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மக்களை நாடிச் செல்லாவிட்டால், அவர்கள் வேறு யாரையும் தேடிச் சென்றுவிடுவார்கள். இத்தகைய ஆபத்தான ஒரு நிலைமை தமிழ் மக்களுடைய அரசியலில் நேர்ந்துவிடாமல், தமிழ் அரசியல் தலைவர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

கூட்டுச் செயற்பாடே அவசியம்

சிங்கள மக்களின் பாரம்பரிய அரசியல் கட்சிகளாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்pய தேசிய கட்சியும் செயற்பட்டு வந்தன. இப்போதும் அந்தக் கட்சிகளே அந்த மக்கள் மத்தியில் முன்னணியில் இருக்கின்றன. இதேபோன்று தமிழ்க்காங்கிரசும், தமிழரசுக் கட்சியும், வடகிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய அரசியல் கட்சிகளாக முன்னர் செல்வாக்கு பெற்றிருந்தன.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழ்க்காங்கிரஸ் 50க்கு 50 என்ற கோரிக்கையையும், தமிழரசுக் கட்சி சமஸ்டி முறையை முன்வைத்துச் செயற்பட்டு வந்தன. ஆயினும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அந்தக் கட்சிகளின் தனித்தனியான போக்குகள் வழிசமைக்கவில்லை.

இதனால்தான், தந்தை செல்வா தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் மட்டுமல்லாமல், மலையகக் கட்சியாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் உள்ளடக்கி தமிழர் விடுதலைக்கூட்டiணியை உருவாக்கி மக்களை அணிதிரட்டி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இந்த அரசியல் வழியைப் பின்பற்றியே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யுத்த காலத்தில் உதயமாகியது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டு அமைப்பைக் கைகழுவி, தனிக்கட்சிகளை முன்னெடுக்கின்ற முனைப்பு தமிழ் அரசியல் அரங்கில் தலையெடுத்திருக்கின்றது. இது இன்றைய காலத்திற்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை.

சிறப்பான நிர்வாகத்தை நடத்துவதற்காக ஆங்கிலேயர்கள் பிரித்தாளுகின்ற தந்திரோபாயத்தைப் பயன்படுத்தினார்கள். இதனால் சுதேசிகளின் பலத்தை நிர்மூலமாக்கி தமக்கு வேண்டிய வகையில் ஆட்சி நடத்தவும், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர்களுக்கு இலகுவாக இருந்தது. இதே தந்திரோபாயத்தையே இன்றைய ஆளுந்தரப்பினரும் கையாண்டு வருகின்றார்கள்.

மலையகத்தின் வாக்கு வங்கியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், வடக்கு கிழக்கின் வாக்கு வங்கியாக தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு காலத்தில் திகழ்ந்தன. கிங் மேக்கர் என்ற பெயரை ஒரு காலம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பின்னர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் பெற்றிருந்தன.

பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் கூறுகளாகப் பிரித்து அவற்றின் அரசியல் பலத்தை பேரினவாத அரசியல் தலைவர்கள் சிதைத்திருக்கின்றார்கள்.

இதேபோன்று மூன்றாவது பேரினவாத அரசியல் சக்தியாக முளைவிட்டிருந்த ஜேவிபியின் கட்டமைப்பையும் சிதைத்து, ஆளும் தரப்பினர் அதனைப் பலவீனப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதேபோன்று, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கான முயற்சிகளையும் அரச தரப்பினர் மேற்கொண்டிருந்த போதிலும், அது வெற்றியளிக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கின்ற அசைக்க நம்பிக்கையும், அந்தக் கூட்டமைப்புக்கு அவர்கள் அளித்து வருகின்ற அமோக ஆதரவுமே முக்கிய காரணமாகும்.

தமிழரசுக் கட்சியானது பழம்பெரும் கட்சி என்ற ஒரே காரணத்தி;ற்காக அதனை வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பில் காணப்படுகின்ற, தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தியை குலைத்துவிடக் கூடிய பேராபத்து சூழ்ந்திருக்கின்றது என்பதை அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் மறந்துவிடக் கூடாது.

ஜனாதிபதி தேர்தலும், அதனையடுத்து பொதுத் தேர்தலும் வருவதற்குரிய மேகங்கள் அரசியல் வானில் கருக்கட்டியிருக்கின்ற இன்றைய சூழலில் புதிய அரசியல் கட்சிகள் எதனையும் பதிவு செய்வதற்கு சட்டம் இடமளிக்கமாட்டாது. எனவே, தற்போதுள்ள நிலையில் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் அனைத்தும் புரிந்துணர்வோடும், விட்டுக்கொடுப்போடும் திறந்த மனதுடன் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளையும், கட்சித் தலைவர்களையும் சீற்றமடையவும், கவலை கொள்ளவும் தக்க வகையிலான பேச்சுக்களைத் தமிழரசுத் தலைவர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது.

கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளைச் சார்ந்தவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, மக்களுக்காகச் செயற்பட வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அரசியலுக்கு வந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். எனவே, ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மட்டுமே அந்த அர்ப்பணிப்பைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க முடியும்.

பிரிந்திருந்து அரசியல் பகைமையுடன் மக்கள் மத்தியில் அரசியல் பணி செய்ய முடியாது. இந்த சாதாரண உண்மையை உணர்ந்து, கவனத்திற் கொண்டு செயற்படுவதன் ஊடாகத்தான் தமிழர் தரப்பு அரசியலை ஆரோக்கியமானதாகவும், அசைக்க முடியாக சக்தியாகவும் வளர்த்தெடுக்கவும், அதன் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய சரியான வழியில் அடியெடுத்து வைத்து நகர்ந்து செல்லவும் முடியும்.

-செல்வரட்னம் சிறிதரன்-

ராஜீவ் காந்தி கொலையில் வெளிநாட்டு சதிகள் ஈடுபட்டனவா? (பாகம்-2)

Share.
Leave A Reply

Exit mobile version