இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை.
தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை… பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள்.
இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர்.
நடைப்பயணத்தின்போதே பலர் இறந்தனர். பணத் தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளை ஆழி தின்றது.
இப்படித்தான் ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி’ கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு அப்சர்வர்’ பத்திரிகை.
இங்கிருந்து சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியா எனப் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளில் சாலை களை உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான் கடிக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.
மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமந்தனர். இலங்கையர்களோ கள்ளத்தோணி, தோட்டக் காட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்று பல வசைச் சொற்களைச் சொல்லி இழிவு படுத்தினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசினார்கள்.
இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் துரத்துவதில் முனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங் கைக்காக உழைத்தவர்கள் அநாதைகளாக ஆக்கப் பட்டார்கள்.
1964-ல் இலங்கை அதிபர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் நேற்றோடு 50 ஆண்டுகளை நிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளை என இடைப்பட்ட 130 ஆண்டுகளில் கொஞ்சநஞ்சம் கிடைத்தவற்றையும் பறிகொடுத்து இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள்.
இலங்கையின் பூர்விகத் தமிழர்களால் இவர்களுக்கு ஆதாயங்கள் இல்லை என்றாலும், தீமைகள் காத் திருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாம் பூர்விகத் தமிழர்களைக் குறிவைத்ததோ, அப்போதெல்லாம் இவர்களையும் குறிவைத்தது. சிங்களவர்களின் கைக்கெட்டும் தூரத்திலிருந்த இவர்களது வீடுகளும் வணிகக் கூடங்களும் உயிர்களும் அவர்களின் வன்முறைக்கு இலக்காயின.
இரா. வினோத்,