தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு நல்லது எனவே தெரியாத அந்த மைத்திரி தேவதையை விட நான் தெரிந்த இந்த பிசாசு நல்லது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (02) காலை நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்பகுதிக்கு ஒரு கொள்கையும் வடபகுதிக்கு ஒரு கொள்கையும் நாங்கள் சொல்லவில்லை. வடக்கில் சொல்வதை தான் தெற்கிலும் சொல்கின்றோம்.

நாங்கள் வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பது பற்றி மஹிந்த சிந்தனையில் கூறியுள்ளோம். வடக்கிலே வந்து ஒன்றையும் தெற்கில் போய் இன்னொன்றையும் சொல்ல மாட்டோம்.

தமிழ் மக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அது பற்றி நாங்கள் பேசி தீர்த்து கொள்ளலாம். பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் அழைக்கும் போது அதற்கு வராவிட்டால் நாம் எப்படித்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நான் கேட்க விரும்புகின்றேன்.

இந்த மாகாண சபைக்கு நான் பணம் கொடுத்துள்ளேன். அந்த பணத்தில் நூற்றுக்கு ஐம்பது வீதம் கூட இன்னமும் செலவு செய்யப்படவில்லை. அந்த பணத்தை செலவு செய்யாமல் இந்த பகுதியை முன்னேற்றுவது எப்படி? இதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலை நடாத்த முனைந்த போது பலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். நான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததன் காரணமாக உங்களுக்கு ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தாலேயே இந்த தேர்தலில் மூன்றில் இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என தெரிந்து கொண்டே இந்த தேர்தலை நடாத்தினோம்.

ஆனால் அதிலே வெற்றி பெற்றவர்கள் சரியாக தமது சேவையை செய்கின்றார்களா என உங்களிடம் கேட்கின்றேன். அவர்கள் செலவு செய்யும் பணத்தை வைத்தே அவர்கள் தமது சேவையை சரியாக செய்கின்றார்களா இல்லையா என என்னால் கணக்கிட முடியும்.

நாங்கள் இரணைமடுவில் இருந்து இங்கே தண்ணீர் கொண்டுவருவதற்கு முயற்சித்த போது அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால் இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் உங்களுக்கு வழங்கவுள்ள நீரை நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு பெற்று தருவோம் என்பதை இங்கே உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

என்னோடு போட்டியிடும் அந்த சிறிசேனாவை உங்களுக்கு முன்னரே தெரியுமோ தெரியாது அவர் இதற்கு முன்னால் இங்கு வந்தாரோ தெரியவில்லை நான் அப்படி அல்ல நான் இங்கே 11 தடவை வந்து தங்கி சென்றுள்ளேன்.

உங்களுக்கு சிறிசேனாவை தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை ஆனால் என்னை உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே ஒரு பழமொழி இருக்கின்றது தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு நல்லது என்று எனவே தெரியாத அந்த தேவதையை விட நான் தெரிந்த இந்த பிசாசு நல்லது என்று சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இனவாத அரசியல் மிக மிக மோசம் எமக்கு தேவை சகோதர பாசம் இனவாதம் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் அப்பாவி மக்களின் பிள்ளைகள் இந்த நாட்டிலே எனவே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்

நாங்கள் முன்னோக்கி போவதா பின்னோக்கி போவதா நன்றாக யோசித்து பாருங்கள். பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி செல்வோம். பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம்.

யார் யார் எந்த பக்கம் போனாலும் நான் உங்கள் பக்கம் தான் அரசியல் வேறு அபிவிருத்தி வேறு வடக்கின் வசந்தம் உங்கள் பிள்ளைகளின் வசந்தம் நான் உங்களை பாதுகாப்பேன் நீங்கள் என்னை நம்பலாம் என மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது உரையில் இறுதியில் சில நிமிடங்கள் தமிழிழும் உரையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version