யேமனிய தலைநகர் சனாவிலுள்ள பொலிஸ் கல்லூரியொன்றுக்கு வெளியே இன்று புதன்கிழமை இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் குறைந்நது 38 பேர் பலியாகியுள்ளதுடன் 23 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் ஆட்சேர்ப்பு ஒன்றுக்காக வரிசையில் மக்கள் காத்திருந்த போதே குண்டு வெடித்துள்ளது.
இந்தக்குண்டு வெடிப்பின் அதிர்வானது நகரெங்கும் உணரப்பட்டுள்ளது.
அத்துடன் வானளாவ புகை மூட்டமும் எழுந்துள்ளது.
மேற்படி தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் அரேபிய தீபகற்பத்திலான அல் – கொய்தா போராளிகள் குழுவே காரணம் என நம்பப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது முதற்கொண்டு யேமன் ஸ்திரத்தன்மையற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது. மேற்படி எதிர்ப்பாட்டங்களால் யேமனை 33 ஆண்டுகள் காலம் ஆட்சி செய்த ஜனாதிபதி சாலெஹ் 2012 ஆம் ஆண்டில் பதவி விலக நேர்ந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் அரசியல் பதற்ற நிலையை தணிவிக்கும் முகமாக புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டது.