மைத்திரிபாலவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து
புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமது ஆலோசனைக்கு அமைய மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தத் தேர்தலில் பெரும் ஆதரவளித்த நாட்டு மக்களுக்கு, குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கு, நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரதூரமான பிரச்சனைகள் பலவற்றுக்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக தீர்வு காணவேண்டி இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் ஜனநாயகத்தின் உண்மையான பயனாளர்களாக நன்மைபெறும் வகையில் தேசியப் பிரச்சனைக்கு கௌரவமான தீர்வுகாண்பது இந்தப் பிரச்சனைகளில் உள்ளடங்குவதாக அக்கட்சியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.