பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பாகிஸ்தான் ரெஹ்ரீக் ஈ இன்சாவ் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், தொலைக்காட்சி அறிவிப்பாளரான ரெஹாம் கானை திருமணம் செய்து கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்திலுள்ள இம்ரான் கானின் இல்லத்தில் கடந்த 8 ஆம் திகதி இத்திருமண வைபவம் நடைபெற்றுள்ளது.
இம்ரான் கானின் பேஸ் புக் பக்கத்தில் இத்திருமணம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
“பாரி கலாலாவில் நடைபெற்ற சாதாரண வைபவமொன்றில் ரெஹாம் கானை இம்ரான் கான் இன்று (ஜனவரி 8) திருமணம் செய்து கொண்டார்.
நிக்கா வைபவம் இம்ரான் கானின் இல்லத்தில் முப்தி சயீட்டினால் நடத்தப்பட்டது. திருமண பைவத்தை தொடர்ந்து வறியவர்களுக்கு உணவு விநியோக நிகழ்வு நடைபெறும்.
கடந்த மாதம் பெஷாவர் நகரில் பாடசாலையொன்றில் நடைபெற்ற தாக்குதலில் 145 பேர் கொல்லப்பட் நிலையில் தமது திருமண வைபவத்தை ஆடம்பரமின்றி நடத்த இம்ரான் கான் தீர்மானித்தார் என அவரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
62 வயதான இம்ரான் கானுக்கும் 41 வயதான ரெஹாமா கானுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கான் 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமிமா கானை திருமணம் செய்து 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றிருந்தார். இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
ரெஹாமா கான் உளவியல் நிபுணர் ஒருவரை திருமணம் செய்து 3 பிள்ளைகளுக்கு தாயாரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானிய பெற்றோரின் மகளாக லிபியாவில் பிறந்த ரெஹாமா கான், பி.பி.சி. தொலைக்காட்சி அலைவரிசையில் வானிலை அறிவிப்பாளரான பணியாற்றியவர்.
பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு திரும்பி பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.
ரெஹாமாவும் இம்ரான் கானும் திருமணம் செய்யப்போவதாக கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
இவர்கள் இரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.
இது குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களுக்கு தனது திருமணம் குறித்து விரைவில் நல்ல செய்தி கூறப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஜோடி திருமணம் கொண்டமை தற்போது உறுதியாகியுள்ளது.
இத்திருமணத்தை இம்ரான் கானின் சகோதரிகள் விரும்பவில்லை என ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்திருமண வைபவத்தில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.
ஆனால், மணமகளான ரெஹாம் கானின் தாயார், சகோதரிகள், மற்றும் இரு நெருங்கிய நண்பிகள் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.
இம்ரான் கானும் ரெஹாம் கானும் தமது திருமணத்தின் பின்னர் தேனிலவுக்குச் செல்லாமல், அறக்கட்டளையொன்றினால் நடத்தப்படும் இஸ்லாமாபாத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றுக்கு விஜயம் செய்து அங்கு தங்கியுள்ள சிறார்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து மதிய உணவை உட்கொண்டனர்.
இந்த சிறுவர் இல்லத்துக்கு விஜயம்செய்தபோது தமது வாகனத்தை இம்ரான் கானே செலுத்தி வந்தார். அவருக்கு அருகிலிருந்த ஆசனத்தில் பல வர்ணங்களிலான ஆடை அணிந்த திருமதி ரெஹாமா கான் அமர்ந்திருந்தார்.
இத்திருமணத்துக்கான மஹர் பணமாக 82,000 பாகிஸ்தான் ரூபாவை (சுமார் 1,05,000 இலங்கை ரூபா) இம்ரான் கான் வழங்கினார் என இம்ரான் கானின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.