கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

பாப்பரசரை ஏற்றிய இத்தாலி விமானம் இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து.

இதையடுத்து, காலை சுமார் 9.06 மணியளவில் பாப்பரசர் விமானத்தில் இருந்து கீழ் இறங்கி இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.

அவரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,அமைச்சர்கள், அதிகாரிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும், கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

விமான நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்ததுடன், சிங்கள கலாசார மரபுகளின் படி வரவேற்பும் அளிக்கப்பபட்டது.

 pope-lanka

இந்த வரவேற்பு நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.

அவருக்கு புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

முன்னதாக, கத்தோலிக்கத் திருச்சபை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும், இரண்டு பேரும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று கோரியிருந்தது.

அதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கையை மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் நாடாக காண்பதே எனது அபிப்பிராயம் – பாப்பரசர்
12-01-2014

இலங்கையை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மத மற்றும் அரசியல் நல்லிணக்கம் உள்ள நாடாக காண்பதே தனது அபிப்பிராயம் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த பாப்பரசர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, பாப்பரசரின் விஜயம் இலங்கைக்கு பாக்கியம் என கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்த பரிசுத்த பாப்பரசரை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு நிகழ்வை அடுத்து பாப்பரசர் விசேட வாகனத்தில் கொழும்பு நோக்கி வருகை தருகிறார். பாப்பரசரின் ஆசியை பெறவென கொழும்பு – நீர்கொழும்பு வீதி ஓரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version