அகர்தலா: திரிபுராவில் 10 வயது குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்தவர் அபுல்  உசைன். இவருக்கு 10 வயதில் ருக்ஷனா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.

தனக்கு பெண் குழந்தை பிறந்து விட்டதே என கருதி  குழந்தையில் இருந்தே தனது மகளை அபுல்  உசைன் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், அபுல் உசைனின் மனைவி இன்று காலை 6  மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அபுல் உசைன்  தனது 10 வயது மகளை வீட்டின் பின்புறம் அழைத்து சென்று, அங்கு கை, கால்களை  கயிற்றால் கட்டினார். பின்னர் அவளது வாயில் டேப்பை ஒட்டினார்.

பின்னர் குழியை தோண்டி புதைக்க முயற்சி செய்தார். இதற்கிடையே காலை 8 மணியளவில் வேலைக்கு சென்ற அவரது மனைவி திடீரென திரும்பி வரும்  சத்தம் கேட்டது. இதனால்  குழிக்குள் பாதி அளவில் மூடிய நிலையில் மகளை அப்படியே மூங்கில் கூடையால் மறைத்துவிட்டு வெளியே வந்தார்.

மகளை  எங்கே என்று மனைவி கேட்டதற்கு ஏதேதோ சாக்குபோக்கு  கூறினார். பின்னர் அபுல் உசைனின் மனைவி வீடு முழுவதும் தேடிவிட்டு, வீட்டு தோட்டத்தில்  சென்று தேடினார்.

அப்போது மகள் உயிரோடு மார்பளவுக்கு மண்ணில் புதைக்கப்பட்டு மூங்கில் கூடையால் மூடி வைத்திருந்ததை கண்டு அலறினார். சத்தம் கேட்டு அங்கு வந்த  அக்கம் பக்கத்தினர் அபுல்  உசைனை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அபுல் உசைன் மீது போலீசார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் பெற்ற  மகளையே ஒருவர் மண்ணில் உயிரோடு புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply

Exit mobile version