மாற்றம் என்ற சொல்லைத்தவிர ஏனைய அனைத்துமே மாறக்கூடியது என்பது உலக நியதி. இலங்கையின் ஆட்சியிலும் இது விதி விலக்கல்ல. கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் புரட்சி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றிற்கு வித்திட்டது.
நாட்டிற்கு விடுதலையும் ஜனநாயகமும் அபிவிருத்தியும் வேண்டும் என்ற காரணத்திற்காக 2005 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டது.
அதன் பின்னர் யுத்த வெற்றி, சர்வதேச மாநாடுகள் இலங்கையில் நடைபெற்றமை, உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி என உலகம் அங்கீகரித்த பல சம்பவங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தேறியது.
எனினும் 2015 இல் வழமை போலவே ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு விட்டது. காரணம் என்னவெனில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தினை மக்கள் விரும்பவில்லை என்பதே.
2005 ஆம் ஆண்டில் இருந்து ஒரு தசாப்தகாலமாக நாட்டில் அபிவிருத்திகள், நன்மைகள், மாற்றங்கள் என பல மக்களின் கண்முன் இடம்பெற்றன.
ஆன போதும் கண்முன் தெரியாத பல மோசடிகள் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் யாரால் ஏற்பட்டது? என்பதே ஆச்சரியமானதாக உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக தான் ஒரு அரசனென சித்திரித்து ஆட்சியினை கொண்டு சென்ற தனி மனிதனின் ஆதிக்கம் ஒரு மாதத்தினுள் ஆட்டம் கண்டு விட்டது.
இதற்குக் காரணம் என்ன? கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் அமைதியாக இயங்கிய ஒரு அமைப்பு இன்று அனைவரினதும் வாய்களில் உச்சரிக்கப்படுகின்றது.
சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு கோட்டே நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த போது நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பமாகியது.
இதுவே மாற்றத்திற்கான முதற்படியென குறிப்பிட முடியும். இதனைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சிகள் ஒரு சில இவ் அமைப்புடன் கைகோர்த்தமையும் பிரதான இடது சாரிகள் ஜனநாயகவாதக் கட்சிகள் என ஒரு பலமான அணி உருவாக்கப்பட்டது.
இதன் பின்னணியிலும் மாதுலுவாவே சோபித தேரரே செயற்பட்டு வந்தார். எனினும் ஆட்சி மாற்றம் என்பதை விடவும் அரசியல் அமைப்பின் மாற்றம்தான் அவசியமென இவர்கள் சுட்டிக் காட்டினர்.
அப்போது ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பிரதான பங்காளிகள் வாய்மூடி செயல்பட்டுக் கொண்டிருந்த காலமது.
அப்போது உருவாகிய பொது எதிரணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க போன்ற பிரபல்யங்கள் பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருந்த போதிலும் பொது எதிரணி பலவீனமற்றதாகவே காணப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் பொது எதிரணியின் அணி வகுப்பு ஆரம்பமாகியது.
எவருமே எதிர்பார்க்காதவொரு நிலையில் எதிர்பார்த்த தலைமைகளை விடவும் முக்கிய தலைவரை பொது எதிரணி களமிறக்கியது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவை பொது எதிரணியின் வேட்பாளரென களமிறக்கி அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்தனர்.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் கை கோர்த்த பொது எதிரணியினை பலப்படுத்த 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை பணயம் வைத்தனர். இதுவே மாற்றத்தின் முக்கிய படியாக கருதப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியும் பௌத்த சிங்கள இலட்சினையில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு செயற்பட்டதுமான ஜாதிக ஹெல உறுமயவின் வெளியேற்றம், அப்போது மேடைகளில் அக்கட்சியின் பீரங்கிப் பேச்சுக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்தியே தீருவோம் என்ற அழுத்தமான வார்த்தைகளும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்தியது.
இத்தனை காலமும் பொது எதிரணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி வெறுமனே புலிகளின் ஆதரவுக் கட்சியெனவும் புலம்பெயர் நலன் கருதி செயற்படும் கட்சியெனவும் சித்திரிக்கப்பட்டு சேறு பூசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஜாதிக ஹெல உறுமயவின் வெளியேற்றம் புலம் பெயர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சிங்கள மக்கள் பொது வேட்பாளரை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை ஜாதிக ஹெல உறுமயவினரையே சாரும்.
அதன் பின்னர் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான உறுப்பினர்கள் பலர் அரசில் இருந்து பிரிந்து பொது எதிரணியுடன் கை கோர்க்க ஆரம்பித்தனர்.
பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தவுடனே மக்கள் அலை மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது.
இவ்வாறானதொரு நிலையில் சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரேடியாக பொது எதிரணியினை ஆதரித்தமை பொது எதிரணியின் வெற்றியினை உறுதிப்படுத்தியது.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒருமித்த ஆதரவுடன் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன கடந்த காலங்களில் இனவாதத்தினை ஆயுதமாக பயன்படுத்தி ஒரு சில பௌத்த மத அமைப்புக்களை சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி விட்டு பிரிவினையிலும் இராணுவ ஆதிக்கத்திலும் ஆட்சி நடத்திய அப்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷவை விட முன்னிலையில் இருந்தார் என்பது புள்ளிவிபரங்களும் புலனாய்வு தகவல்களும் வெளிப்படுத்தின.
இவ்வாறானதொரு பரபரப்பான சூழ்நிலையில் 2015 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. மாற்றம் ஏற்படுமா அல்லது மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியின் ஆட்சி நடக்குமா என்ற கேள்விக்கு மத்தியில் ஜனவரி 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.
வழமையாகவே நாட்டில் நடந்த தேர்தல்களின் போது சுயாதீனமானதொரு தேர்தல் இடம்பெறுவது கேள்விக் குறியாகவே காணப்பட்டது. எதிரணிகள் தொடர்ச்சியாக நாட்டில் சுயாதீனமானதொரு தேர்தல் நடைபெற வேண்டும் என தெரிவித்தமை நாம் அனைவரும் அறிந்தவையே.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் சுயாதீனமானதொரு தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்ததுடன் அன்றில் இருந்து பொலிஸ் சேவை சுயாதீனமாக செயற்பட்டமையும் இறுதி நேரத்தில் இராணுவ புரட்சிக்கு அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரும் திட்டம் தீட்டிய போது இராணுவம் சுயாதீனமாக செயற்பட்டமையும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழி வகுத்தது.
ஜனவரி 8 ஆம் திகதி அமைதியான முறையிலும் அதிக மக்கள் வாக்களித்ததுமான ஜனநாயகத் தேர்தலொன்று இடம்பெற்றது.
இதில் பொலிஸாரும் இராணுவமும் தனது கடமையினை மிகச் சரியாக செய்து மக்களை சுதந்திரமானதொரு தேர்தலுக்கு அனுமதித்தமை இம்முறை மாற்றம் ஒன்று ஏற்பட அடிப்படையாக அமைந்தது.
உண்மையிலேயே ஒரு நாட்டில் அதிகார பலத்தை விடவும் பண பலத்தினை விடவும் மக்கள் பலம் மிகவும் பலம் வாய்ந்தது.
அவ்வாறான மக்கள் பலம் வெளிப்பட வேண்டுமாயின் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடைபெற இடமளிக்க வேண்டிய தேவை ஒன்று உள்ளது. அதை இம்முறை வெளிப்படையாக அனைவரும் உணர்ந்து வாக்களித்தனர்.
அதேபோல் எந்தவொரு விடயத்திலும் இரு வேறு விதமான சக்திகள் செயற்படும் விடயம் மிகவும் சாதகமாக அமைவது சாத்தியமானது. அவ்வாறு இம்முறை தேர்தலின் போதும் இருவேறு விதமான சக்திகள் செயற்பட்டன.
மக்கள் உணரும் வகையில் வெளிப்புறத் தோற்றத்தில் மக்களை கவரும் வகையில் மூவின அரசியல் கட்சிகளும் மக்களுடன் நேரடியான தொடர்பினை வைத்து ஆதரவினை திரட்டியதைப் போல் மறைமுகமாக மக்களின் ஆதரவினை பொது எதிரணியின் பக்கம் திருப்பிய பெருமை மக்கள் விடுதலை முன்னணியினையே (ஜே.வி.பி.)சாரும்.
இடதுசாரிகள் எப்போதும் யார் பக்கமும் சாயாமல் தமது காரியத்தினை வென்று முடிப்பார்கள். ஒக்டோபர் புரட்சி, ஜேர்மனியப் போராட்டம், ரஷ்ய புரட்சிகளில் இடதுசாரிகள் யார் என்பது உலகிற்கு வெளிப்பட்டதைப் போல் இலங்கையில் ஜனநாயகத்தினையும் நல்லாட்சியினையும் வென்றெடுக்கும் புரட்சியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பிரதான பாத்திரம் ஏற்று செயற்பட்டது.
ஆனால் இவற்றை வெளிப்படையாக எவரும் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு கிராமங்களாக ஒவ்வொரு வீடுகளாக தமது பிரசாரங்களை செய்ததுடன் சுதந்திரமானதொரு தேர்தல் நடைபெற மக்கள் விடுதலை முன்னணி, (ஜே.வி.பி.) செயற்பட்ட விதமும் வித்தியாசமானதாகவே அமைந்தது.
தேர்தல் வாக்கு நிலையங்களில் மிகச்சரியான பெயர் பட்டியல், வாக்கு எண்ணும் நிலையங்களில் தமது பக்கச் சார்பற்ற ஆட்கள் என சகல விதத்திலும் தவறு விடாத வகையில் தமது கடமையினை செய்து முடித்து வெற்றியின் பின்னரும் புகழாரம் இல்லாது ஒதுங்கிக்கொண்டனர்.
இவை அனைத்தும் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஜனவரி 8 ஆம் திகதி வரையில் நடைபெற்ற மாற்றத்திற்கான படிக்கல். எனினும் ஜனவரி 9 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளி வந்தவுடன் பிரதான மாற்றக்காரர்கள், மாற்றத்தின் பிரதானிகள் யார் என்பது வெளிப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மிகப்பெரிய வெற்றியினைப் பெற்று தன்னை அசைக்க முடியாத அரசனாக வெளிப்படுத்தினார்.
அதே நம்பிக்கையில் மக்களை இனவாதத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று எண்ணியே இம்முறையும் தான் மூன்றாவதுதடவையாகவும் போட்டியிட நினைத்திருப்பார் போல்.
ஆனால் இம்முறை மக்கள் மாற்றத்தினை விரும்பி விட்டார்கள். ஜனவரி 9 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் முன்னாள் ஜனாதிபதியாக மஹிந்தவை மாற்றி விட்டது.
இத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ 5,768,090 வாக்குகளையும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 6,217,162 வாக்குகளையும் பெற்றதுடன் 449,072 வாக்குகளால் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இதில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளின் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைத்துள்ளனர் என்ற கருத்து தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வாயினால் வெளிவந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
உண்மையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருவரினதும் வாக்குகள் வடக்கு கிழக்கில் மொத்த வாக்குகளில் 90வீதமேனும் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைத்திருக்கும்.
கடந்த வட மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் 353,525 வாக்குகளைப் பெற்றது. ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைத்த வாக்குகள் 394,991 ஆகும்.
வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பினருக்கு கிடைத்த வாக்குகளை விடவும் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் அதிகமாக இம்முறை ஜனாதிபதியாகியுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைத்துள்ளது.
அதேபோல் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எதிரணிகள் மொத்தமாக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 401,645 ஆக காணப்பட்டது.
ஆனபோதும் இம்முறை ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிற்கு கிழக்கு மக்கள் 583,120 வாக்குகளை வழங்கி சுமார் ஒரு லட்சம் மேலதிக வாக்குகளை பொது எதிரணிக்கு வழங்கியுள்ளனர்.
இம்முறை வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் மொத்தமாக 978,111 வாக்குகள் பொது எதிரணியினருக்கு கிடைத்துள்ளது.
இது இவ்வாறு இருப்பினும் ஜனாதிபதியாக போட்டியிட்ட மஹிந்த ராஜபக் ஷவிற்கு வடக்கு மற்றும் கிழக்கில் மொத்தமாக 323,600 வாக்குகள் கிடைத்தது. ஆன போதும் முழுமையாக தமிழ், முஸ்லிம் வாக்குகள் மட்டுமே மைத்திரிபால சிறிசேனவினை ஜனாதிபதியாக்கியது என்பதை ஏற்றுக் கொள்வதிலும் சிறிய சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி மொத்த வாக்குகளின் எண்ணிக்கையினை பார்த்தாலும் மைத்திரிபால சிறிசேன 5,893,562 வாக்குகளுடன் முன்னிலையிலும் மஹிந்த ராஜபக்ஷ 4,789,979 வாக்குகளுடன் பின்தங்கிய நிலையிலேயே உள்ளார்.
எனவே கணிசமான அளவு சிங்கள வாக்குகள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைத்துள்ளது என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, இந்த வெற்றி தேசிய வெற்றி. மூவின மக்களும் ஒன்றிணைந்து ஒரு ஜனநாயகத்திற்கான தலைவனை தெரிவு செய்துள்ளனர். இவையே மாற்றத்திற்கு பிரதான காரணமாகும்.
இந்த வெற்றியில் ஒருவர் மட்டும் பங்கு கொள்ள முடியாது. மூவின மக்களின் ஒற்றுமையும் மூவின மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றாக கைகோர்த்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமானது மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமானதொன்றாகவே உள்ளது. தமது வாழ்வாதாரம், மத முரண்பாடு, இனவாதத்தில் இருந்து விடுபட வேண்டியதொரு தருணத்தில் மிகச் சரியான சந்தர்ப்பமொன்று கிடைத்த போது மக்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த மாற்றத்தினை தவறாக பயன்படுத்தி மீண்டுமொரு குழப்பத்தினை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் இம் மாற்றத்தனால் விளங்கிக் கொள்ள வேண்டியதே.
ஆர். யசி