இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேரும் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்களை கூட்டாக சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இரு தரப்புக்கும் இடையே இரண்டு தடவைகள் பேச்சுக்கள் நடந்துள்ளபோதிலும், முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ள நிலையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்றுள்ள சந்திப்பின்போது, முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரே, மீதமுள்ள அடுத்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கிழக்கு மாகாண சபையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெருன்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ளது.

‘கடந்த தடவை அமைந்த ஆட்சியில் தமிழர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஜனநாயக ரீதியிலும் தார்மீக ரீதியிலும் எதிர்வரும் பதவிக் காலத்தில் தமிழர் ஒருவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்’ என்றும் குமாரசாமி நாகேஸ்வரன் சுட்டிக் காட்டுகின்றார்.
150118170154_tna_east_sri_lanka_epc_512x288_bbcகிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் 11 உறுப்பினர்கள் உள்ளனர்

‘மற்றக் கட்சிகளின் ஆதரவை நாடலாம்’

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் ஆதரவை நாடுவது தொடர்பாக கவனம் செலுத்துமாறு தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கட்சி தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ அடைந்த தோல்வியின் எதிரொலியாக, அவரது பதவிக் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழிருந்த மாகாணசபைகளிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

2012ம் ஆண்டு கிழக்கு மகாண சபைத் தேர்தலில் 37 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்களை வென்றிருந்த ஐ.ம.சு.கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் 22 உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சியை அமைத்துக் கொண்டது.

தற்போது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐ.ம.சு. கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில் தற்போதைய ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version