தி.மு.க.வில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது. தி.மு.க.வை தான் திருத்தப் போகிறேன். அதற்காகப் போராடி வருகிறேன். ஜனநாயகத்தை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன்!

நெப்போலியனைத் தொடர்ந்து அழகிரியும் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால். தி.மு.க. வில் தனக்கு ரூட் முழுமையாக கிளியர் ஆகி விடும் என்று ஸ்டாலின் கணக்குப் போட்ட நிலையில் நானாவது வேறு கட்சிக்குப் போவதாவது என்று குண்டு போட்டார் அழகிரி, அடுத்து அதிருப்தியாளர்களை இழுக்கும் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்திக்கிறார் அழகிரி.

தி.மு.க. வில் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அழகிரி என்றாலே பரபரப்புத்தான். கடந்த 2007இல் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வெளிவரும் நாளிதழில் கட்சியில் அடுத்த வாரிசு யார்? என கருத்துக் கணிப்பு வெளியானது.

அதில் ஸ்டாலினுக்கு 70 சதவிகித தொண்டர்கள் ஆதரவும் அழகிரிக்கு வெறும் 2 சத விகித ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டது. தீயிட்டுக் கொளுத்தப்பட்டதில் 3 அப்பாவி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்போதே தி.மு.கவின் அடுத்த தலைவர் போட்டியில் தானும் உண்டு என்பதை அழுத்தமாகக் காட்டினார் அழகிரி. அதன் பின் அரசியல் மாற்றங்களில் ஓரங்கட்டப்பட்ட அழகிரி கட்சியில் மீண்டும் காலூன்ற எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கலில் முடிந்தது. ஆனால், தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை அழகிரிக்கு சாதகமாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த அழகிரியின் தீவிர ஆதரவாளரான நடிகர் நெப்போலியன் அழகிரியின் ஆசியுடன்தான் நான் இணைந்தேன். அவர் பா.ஜ.க. வில் சேருவது பற்றி அவர்தான் முடிவெடுப்பார் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.

அழகிரி அடுத்த நாளே அதை அவசர அவசரமாக மறுத்தார். நெப்போலியனிடம் நான் பேசியே ஒரு மாதமாகிறது. நான் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன்.

இறுதி மூச்சு இருக்கும் வரை கருப்பு சிவப்புதான். தி.மு.க.தான் எனது உயிர்நாடி எனது பிறந்த நாளுக்கு (ஜனவரி 30 ) முன்பாகவே தி.மு.க. வில் நல்லது நடக்கும். அதன் பிறகு ஆதரவாளர்களுடன் பேசி நல்லதொரு முடிவை அறிவிப்பேன் என்றார்.

இதற்கிடையே தி.மு.க. வில் அதிருப்தியாளர்களுக்குத் தூண்டில் போடும் பா.ஜ.க அழகிரிக்கும் வலை விரித்து அமித்ஷா முன்னிலையில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்த திட்டம் போட்டதாகவும் இதற்காக மத்திய அமைச்சர் ஒருவர் அடிக்கடி அழகிரியிடம் போனில் பேசியதாகவும் கூறப்பட்டது.

ஆரம்பத்தில் அதில் நாட்டம் கொண்ட அழகிரியிடம் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்து விடாதீர்கள்.

எங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு ஸ்டாலின் எப்படிப் கட்சி நடத்துவார்? நீங்கள் பொறுமையாக இருங்கள் என்று தி.மு.க. வின் சில மூத்த தலைகள் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் அழகிரி அவசரமாக மறுப்பு வெளியிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

துரைமுருகன் பழனிமாணிக்கம் போன்றவர்கள் ஸ்டாலினைப் பகிரங்கமாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக அழிகிரிக்கு சப்போர்ட் செய்வதாகவும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் அழகிரியும் நெப்போலியன் பாணியில் பா.ஜ.க. விற்கு வெகுசீக்கிரம் தாவி விடுவார் என மதுரையில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் வதந்தி கிளப்பி விட்டு வருகிறார்கள். இதனால் அழகிரி ஆதரவாளர்கள் கொதித்துப் போயுள்ளனர். தி.மு.க. வில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது. தி.மு.க.வை நான் திருத்தப் போகிறேன். அதற்காகத்தான் போராடி வருகிறேன்.

அந்த ஜனநாயகத்தை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். என்றும் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் எனக்குத் தேவையில்லை. நான் வேண்டும் என நினைத்தால் என்னுடன் இருங்கள் என்றும் அழகிரி சொன்ன கோஷங்களை மீண்டும் ஒருமுறை ஓங்கிச் செல்கிறார்கள் அவர்கள்.

மேலும் நெப்போலியன் பா.ஜ.க. வில் சேர்ந்தது தி.மு.கவிற்கு அழகிரி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் என்கிறார்கள் அவர்கள். அதாவது, அழகிரிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பா.ஜ.க. காத்திருப்பது போல் பிரமையை ஏற்படுத்தி அப்படி அவர் போய் விட்டால் தி.மு.கவின் அதிருப்தியாளர்கள் வரிசையாக அங்கு படையெடுப்பார்கள் என்று தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆயுதம் தான் அது என்கிறார்கள்.

இதை உணர்ந்தே சமீபத்தில் மதுரை வந்த தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விரைவில் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைக்கப்படுவார்கள் என சூசகமாக தெரிவித்துச் சென்றிருக்கிறார்.

அழகிரியின் தீவிர ஆதரவாளரான இசக்கிமுத்துவிடம் பேசிய போது அண்ணனின் பலம் என்ன என்பதைத் தலைமை உணரும் காலம் வரும். பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் இன்று அதே பதவிக்காகத்தான் அணி மாறியுள்ளனர்.

காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. அதனால் தான் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருப்பவர்கள் மீண்டும் அண்ணனைத் தேடி வருகிறார்கள். காவி உடை உடுத்தவா 30, 40 வருஷமா கருப்பு சிவப்பு வேட்டியில் கொடி பிடித்தோம்.

செத்தாலும் கருப்பு சிவப்பு கரைவேட்டியை எங்களிடமிருந்தோ அண்ணன் அழகிரியிடமிருந்தோ யாரும் பிரிக்க முடியாது. இவ்வாறு கிளப்பி விடுபவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது.அழகிரியுடன் இருப்பவர்கள்தான் உண்மையான தி.மு.க. வினர். ஒட்டுமொத்த மதுரையையும் மீட்டு விட்டதாக கனவு கண்டவர்கள்.

இப்போது அவர்களுக்குள்ளேயே வெட்டுக் குத்து என நாறடித்து வருகின்றனர். அழகிரி இருந்திருந்தால வாடிப்பட்டியில் அந்தச் சம்பவம் நடந்திருக்குமா? தி.மு.க.வில் இப்போது ஸ்டாலினுக்கு எதிராக மிகப்பெரிய பூகம்பமே திரண்டு கொண்டிருப்பது அவருக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை என்றார் காட்டமாக.

2015ஆம் வருட புத்தாண்டையும் ஜனவரி 30இல் பிறந்த நாள் விழாவையும் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம் அழகிரி. ஸ்டாலினுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் தன்னைத்தேடி வருவார்கள் என்ற நம்பிக்கைதான் காரணம்.

மேலும் தனது பிறந்த நாளுக்கு முன்பாக பொதுக்குழுவில் தனக்குப் பதவியைப் பெறுவதற்காக குடும்பத்தினரிடம் காய் நகர்த்தி வருகிறாராம். இதனால் மதுரையில் அழகிரியின் பிறந்த நாளை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

ஆகவே, அழகிரியின் அடுத்த கவுன்ட் டவுன் ஸ்டார்ட்டாகி விட்டதென்றே கூறலாம்!

Share.
Leave A Reply

Exit mobile version