வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு வாலிபர் ரத்தக்காயத்துடன் தஞ்சம் அடைந்தார். அவர், போலீசாரிடம் ‘எனது மனைவி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறாள்.
எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்” என கண்ணீர் விட்டு கதறினார்.
அப்போது இளம்பெண் ஒருவர் ஆவேசத்துடன் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து, அந்த வாலிபரிடம் கடும் ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் இருவரையும் விசாரித்தபோது, அவர்கள் தம்பதி என தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபரிடம், போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது: நான் காட்பாடியில் எலக்ட்ரீஷியனாக உள்ளேன். எனக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. வேலைக்கு செல்லும்போது, காட்பாடியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நட்பு ரீதியில் பழகி வருகிறோம். இதனை, எனது மனைவி தவறாக நினைத்துக்கொண்டு, என்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்து கிறாள்.
இன்று (நேற்று) காலையில் கூட சாப்பிடும்போது, சிம்கார்டை சாப்பாட்டில் வைத்து சாப்பிடும்படி வற்புறுத்தினாள். மறுத்ததால், என்னுடைய கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தாள்.
அதோடு, வாயில் சிம்கார்டை வைத்து விழுங்கும்படி அடித்து கொடுமைப்படுத்துகிறாள். எனவே, மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொடுங்கள். என் உயிரை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதார்.
அவரது மனைவியிடம் விசாரித்தபோது, “எனது கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. இதுபற்றி குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது.
அப்போது என்னுடைய குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் கணவருடன் வாழ ஒப்புக்கொண்டேன். ஆனாலும் கள்ளக்காதலியின் தொடர்பை அவர் விடவில்லை.
இதனால், பொறுமை இழந்துதான் அடித்தேன். என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்” என்றார்.
இதையடுத்து போலீசார், அந்த வாலிபர், நீலி கண்ணீர் வடிப்பதை கண்டுபிடித்தனர். கள்ளக்காதலிக்காக அவர் கண்ணீர் நாடகம் நடத்தியதும் தெரிய வந்தது.
கள்ளக்காதலி தொடர்பை துண்டித்து விட்டு, மனைவி மற்றும் குழந்தையுடன் குடும்பம் நடத்தும்படி போலீசார் அந்த வாலிபரை எச்சரித்தனர்.
பின்னர் மனைவியுடன் ஒழுங்காக வாழ்வேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு மனைவியுடன் அனுப்பி வைத்தனர். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.