சென்னை: ஐ படத்தில் தங்களை மோசமாகச் சித்தரித்ததற்காக இயக்குநர் ஷங்கர், நடிகர் விக்ரம் மற்றும் நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரியுள்ளனர். மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஐ படத்தில் வில்லத்தனமான வேடத்தில் ஒரு திருநங்கையை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர். அந்தப் பாத்திரம் விக்ரமை பாலியல் இச்சையுடனே எப்போதும் நெருங்குவது போலவும், அந்த திருநங்கை வரும்போது, ‘ஊரோரம் புளிய மரம்..’ என கிண்டலடிப்பது போல கும்மியடித்து விக்ரமும் சந்தானமும் பாடுவது போலவும் காட்சிகள் உள்ளன.

சில இடங்களில் பொட்ட என்ற வார்த்தையை உபயோகப்படுத்தப்படுகிறது. இவை தங்களை மிகவும் கொச்சைப்படுத்துவதாகவும், கேவலமாக சித்தரிப்பதாகவும் கூறி, திருநங்கைகள் படம் வெளியான நாளிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்றும் சென்னையில் சாஸ்திரி பவனில் உள்ள சென்சார் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தினர். திருநங்கைகளை அசிங்கப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி தணிக்கை அலுவலர் பக்கிரிசாமியிடம் மனு கொடுத்தனர்.

மேலும், இந்தப் படத்தில் தங்களை அசிங்கப்படுத்தியதற்காக இயக்குநர் ஷங்கர், நடிகர் விக்ரம் மற்றும் நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் போராட்டம் தொடரும் என்று எச்சரித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version