குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன், வேலெ சுதா, தன்னிடம் கிரமமாக பணம் பெற்று வந்த முக்கிய அரசியல்வாதிகள் பலரின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து சிறிலங்காவுக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்து விநியோகித்த, வேலெ சுதா, கடந்த வாரம் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இவரை மூன்று மாதங்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளது சிறிலங்கா காவல்துறை.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த, சக்திவாய்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிகவும் நெருக்கமானவராக வேலெ சுதா இருந்து வந்துள்ளார்.
அவருக்கும், வேறு காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் வேலே சுதா மாதாந்தம் 10 மில்லியன் ரூபாவை கொடுத்து வந்துள்ளார்.
வேலே சதாவின் மனைவி மூலம் குறித்த அரசியல்வாதிக்கு இந்த பணம், வங்கிக்கணக்கு மூலமும் செலுத்தப்பட்டுள்ளது.
சில சமயங்களில் வெளிநாட்டு வங்கிக்கணக்குகளிலும் இவர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
தன்னிடம் பணம் பெற்ற அரசியல் வாதிகள் பற்றிய விபரங்களை வேலெ சுதா விசாரணையின் போது வெளியிட்டுள்ளதாக, காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.