ஜனா­தி­பதித் தேர்­த­லை­ய­டுத்து, அதி­காரம் சுமு­க­மான  முறையில் கைமாற்­றப்­பட்­ட­தற்கு வெளி­நா­டு­களில் இருந்து வாழ்த்துச் செய்­திகள் வரத் தொடங்­கிய நிலையில் தான், அதி­கார கைமாற்றம் முற்­றிலும் சுமு­க­மான நிலையில் இடம்­பெற்றி­ருக்­க­வில்லை என்­பது வெளிச்­சத்­துக்கு வந்­தி­ருக்­கி­றது.

தேர்தல் முடி­வுகள் வெளி­யாகத் தொடங்­கி­யதும், அதில் தோல்வி காணும் நிலை ஏற்­படும் என்­பதை உணர்ந்த முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜபக்ஷ, அதி­கா­ரத்தை தக்­க­வைப்­ப­தற்கு இரா­ணு­வத்தின் துணையை நாடி­ய­தாகக் குற்­றச்­சாட்டு எழுந்தி­ருக்­கி­றது.

இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் தயா ரத்­நா­யக்க, பொலிஸ் மா அதிபர் இலங்­ககோன், சட்­டமா அதிபர் யுவஞ்சன் விஜேதிலக ஆகிய மூவரும் எடுத்த துணிச்­ச­லான முடிவு தான், ஜன­நா­யக பாரம்­ப­ரி­யங்­களில் இருந்து இலங்கை விலகிச் செல்­லா­மைக்குக் காரணம் என்று புகழ்ந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது.

2010ஆம் ஆண்டு, தேர்­தலில் சரத் பொன்­சேகா தோல்­வியைத் தழு­விய போது, இரா­ணு­வத்தைக் கொண்டு ஆட்­சியைப் பிடிக்கத் திட்­ட­மிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு, கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டார்.

இப்­போது அதே குற்­றச்­சாட்டு மஹிந்த ராஜபக் ஷவின் மீதும் வந்­தி­ருக்­கி­றது.

மெத­மு­லா­னவில் வாக்­க­ளித்து விட்டு, கடந்த 8ஆம் திகதி மாலையில் கொழும்பு திரும்­பிய மஹிந்த ராஜபக் ஷ, இரவு 9 மணி­ய­ளவில் அலரி மாளி­கைக்குச் சென்­றி­ருந்தார்.

அதி­லி­ருந்து, மறுநாள் காலை 6.30 மணி­ய­ளவில், அலரி மாளி­கையில் இருந்து அவர் வெளி­யேறும் வரை­யான கால இடைவெ­ளிக்குள் நிகழ்ந்த சம்­ப­வங்கள் குறித்து பர­ப­ரப்­பாகத் தக­வல்கள் பலவும் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

அலரி மாளி­கையில், அமைக்­கப்­பட்­டி­ருந்த சிறப்புத் தேர்தல் அவ­தா­னிப்பு நிலை­யத்தில் இருந்து அமைச்­சர்­க­ளுடன், முடி­வு­களை அவ­தா­னிக்கத் தொடங்­கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவுக்கு தபால் வாக்­கு­களின் போக்கே நிலை­மையின் இறுக்கத்தை உணர வைத்­து­விட்­டது.

ஆரம்­பத்தில், வந்த அதி­கா­ர­பூர்­வ­மற்ற தபால் வாக்கு முடி­வுகள், வடக்கு, கிழக்கு, நுவ­ரெ­லிய போன்ற இடங்­களில் தாம் தோல்வி காணப்போவ­தையும், அது தனது வெற்­றியைப் பாதிக்கும் என்­ப­தையும் அவர் உணரக் கார­ண­மா­யிற்று.

அவற்றை ஆய்வு செய்­து­விட்டு குழப்­ப­ம­டைந்­தி­ருந்த அவர், நள்­ளி­ரவில் சற்று ஓய்­வெ­டுக்கத் தனது அறைக்குச் சென்றிருந்தார். தோல்விப் பயம் அவரை நெடு­நேரம் தூங்­கவோ ஓய்­வெ­டுக்­கவோ விட­வில்லை.

சுமார் 2 மணி­ய­ளவில் எழுந்து மீண்டும், தேர்தல் அவ­தா­னிப்பு அறைக்கு வந்­த­வ­ருக்கு, மேலும் சில தொகு­தி­களின் முடிவுகள் கைய­ளிக்­கப்­பட்­டன. அவை தனக்குச் சாத­க­மற்ற நிலை ஏற்­பட்டு வரு­வதை அவ­ருக்கு உணர்த்­தி­யி­ருந்­தன.

அதி­கா­ர­பூர்­வ­மற்ற வகையில், மாவட்ட செய­ல­கங்­களில் இருந்து கிடைத்த தக­வல்கள், மஹிந்த ராஜபக் ஷ தோல்வி கண்டு வரு­வதை உறு­திப்­ப­டுத்­தின.

இந்­த­நி­லையில் அவர், அவ­ச­ர­மாக பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ, இரா­ணுவத் தள­பதி லெப்.ஜென ரல் தயா ரத்­நா­யக்க, பொலிஸ் மா அதி பர் இலங்­ககோன், சட்­டமா அதிபர் யுவஞ்சன் விஜே­ய­தி­லக ஆகி­யோரை அல­ரி­மா­ளி­கைக்கு அழைத்தார்.

அப்­போது அங்கு ஜனா­தி­ப­தியின் செயலர் லலித் வீர­துங்­கவும் இருந்தார்.

அவர்கள் நிலை­மையை ஆராயத் தொடங்­கினர்.

இந்தக் கட்­டத்தில் தான், அவ­ச­ர­காலச் சட்ட விதி­களைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி, தேர் தல் முடி­வு­களை அறி­விப்­பதை நிறுத்தி வைக்கும் உத்­த­ரவை தயார் செய்­யு­மாறு சட்­டமா அதி­ப­ரிடம் ஜனா­தி­பதி கேட்டுக் கொண்­ட­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், கொழும்பு உள்­ளிட்ட நாட் டின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் இரா­ணு­வத்தை பாது­காப்பில் ஈடு­ப­டுத்­து­மாறும், அவர் இரா­ணுவத் தள­ப­திக்கு உத்­த­ர­விட்டார்.

எனினும், ஜனா­தி­பதி மஹிந்­தவின் உத்­த­ர­வுக்கு கீழ்ப்­ப­டிய முடி­யாது என்றும் இந்த மூவரும் மறுத்து விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

சட்ட விரோ­த­மான முறையில் இரா­ணு­வத்­தி­னரை நிறுத்த உத்­த­ர­விட முடி­யாது என்று இரா­ணுவத் தள­ப­தியும், அர­சி­ய­ல ­மைப்­புக்கு முர­ணாக செயற்­பட முடி­யாது என்று சட்­டமா அதி­பரும், இந்த திட்­டங்­க­ளுக்கு உடன்­பட முடி­யா­தென பொலிஸ் மா அதி­பரும், திட்­ட­வட்­ட­மாக கூறி­விட்­ட­தாகச் சொல்­லப்­ப­டு­கி­றது.

இந்தப் பர­ப­ரப்­பான சூழலின் ஒரு கட்­டத்தில், தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­ப­டு­வது சுமார் 1 மணி நேரத்­துக்கும் மேலாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷவுக்குப் பாத­க­மான முடி­வுகள் வெளி­யாகிக் கொண்­டி­ருந்த கட்­டத்தில் அதி­காலை 3 மணி­ய­ளவில் திடீரென முடி­வுகள் வெளி­வ­ரு­வது தடைப்­பட்­ட தால், நாடெங்கும் மக்­க­ளி­டையே குழப் பம் ஏற்­பட்­டது.

பெரும்­பா­லா­ன­வர்கள் அன்று தேர்தல் முடி­வு­களை அறிந்து கொள்­வ­தற்­காக வானொ­லி­யு­டனோ, தொலைக்­காட்­சி­யு­டனோ, இணை­யத்­து­டனோ இணைந்­தி­ருந்­தனர்.

கிட்­டத்­தட்ட, ஒரு மணி­நே­ரத்­துக்கும் மேலாக இந்த தேக்­க­நிலை நீடித்­தது.

மஹிந்த ராஜபக் ஷ வேறு வழி­யின்றி, பத­வி­யி­லி­ருந்து இறங்க முடிவு செய்த பின்னர் தான் அடுத்­த­டுத்து தேர்தல் முடி­வுகள் வெளி­யாகத் தொடங்­கின.

இது­கு­றித்து விசா­ரணை நடத்தப் போவதாக புதிய அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது புதிய திருப்பம் தான்.

ஏற்­க­னவே இந்த சதித்­திட்டம் குறித்து, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர குற்­றப்­பு­ல­னாய்வுத் துறை­யிடம் முறைப்பாடு செய்­துள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பாய ராஜ­பக் ஷ, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்­மன்­பில ஆகி­யோரே இந்த திட்­டத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று மங்­கள சம­ர­வீ­ர­வினால் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, முன்னர் சரத் பொன்­சேகா சந்­தித்த குற்­றச்­சாட்­டு­க­ளையும் விசா­ர­ணை­க­ளையும் மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜ­பக்­ ஷவும், சந்­திக்கும் நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, இரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்தி, அதி­கா­ரத்தை நிலை நிறுத்தும் முயற்சி தோல்வி கண்ட நிலையில் தான், சுமுக­மான முறையில் அதி­கா­ரத்தைக் கைமாற்றும் முடி­வுக்கு மஹிந்த ராஜபக் ஷ வந்­தி­ருந்­த­தாகத் தெரி­கி­றது.

இரா­ணுவத் தள­பதி, பொலிஸ்மா அதி பர், சட்­டமா அதிபர் ஆகியோர், அதி­கா­ரத்தை தக்­க­வைக்கும் முயற்­சிக்கு ஒத்­து­ழைக்க மறுத்­த­தை­ய­டுத்து, வேறு வழி ஏதும் அவ­ருக்கு இருக்­க­வில்லை.

குழப் ­ப­மான அந்தக் கட்­டத்தில், மஹிந்த ராஜ பக் ஷ ஒரு தீர்க்­க­மான முடிவை எடுத் தால், தப்பிக் கொள்­ளலாம் என்று எதிர்பார்த்தார்.

அதனால் தான் அவர் தேர்தல் முடி­வு­களின் போக்கு தமக்குச் சாத­க­மாக வரப் போவ­தில்லை என்­பதை முன்­னு­ணர்ந்து, பதவியை விட்டு விலக முடிவு செய்தார்.

அது தனது சதித் திட்ட நட­வ­டிக்­கை­களின் பாதிப்­பி­லி­ருந்து பாது­காக்கும் என்றும் அவர் கரு­தி­யி­ருந்தார் போலும்.

ஆனால், அவ­ரது அந்த முடி­வுக்கு கடு­மை­யான எதிர்ப்பைத் தெரி­வித்­தி­ருந்தார் கோத்­தா­பய ராஜபக் ஷ.

மஹிந்த ராஜபக் ஷவின் தோல்­வியால், கோத்­தா­பய ராஜபக் ஷவே கடு­மை­யாக அதிர்ச்­சி­ய­டைந்­த­வ­ராகக் காணப்­பட்டார் என்றும், மிகவும் குழப்­ப­ம­டைந்து போயி­ருந்தார் என்றும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

லலித் வீர­துங்க உள்­ளிட்ட அதி­கா­ரிகள் பலரும் பொறுத்­தி­ருக்­கும்­படி கூறிய போதிலும், மஹிந்த ராஜபக் ஷவினால், பொறுத்­தி­ருக்க முடி­ய­வில்லை.

அதி­காலை 4.30 மணி­ய­ளவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைத் தொலை­பே­சியில் அழைத்துப் பேசினார் அவர்.

அதை­ய­டுத்து தாம் அலரி மாளி­கைக்கு வந்து பேசு­வ­தாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­விட்டு, தொடர்பை துண்­டித்தார்.

ரணில் வரு­வ­தற்­கி­டையில் அவ­சர அவ­ச­ர­மாக சில கோப்­பு­களில் கையெ­ழுத்­திட்டார் மஹிந்த ராஜபக் ஷ.

அவற்றில் ஒன்­றுதான், தனது இரண்­டா­வது மகன், யோஷித்த ராஜபக் ஷவை கடற்­ப­டையின் லெப்­டினன்ட் தர அதிகாரிபதவியில் இருந்து விலகிக் கொள்­வ­தற்கு அனு­ம­திக்கும் ஆணை.

2006ஆம் ஆண்டு கடற்­ப­டையில் இணைந்து கொண்ட யோஷித்த ராஜ­பக்ச, குறு­கிய காலத்­தி­லேயே லெப். தர அதிகாரியாக்கப்­பட்டார்.

அது­மட்­டு­மன்றி, கடற்­ப­டையின் றகர் குழுவின் தலை­வ­ரா­கவும் அவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

அவர் தொடர்ந்து கடற்­ப­டையில் இருந்தால் முன்­னைய சலு­கைகள் கிடைக்­காது என்­பது மஹிந்­த­வுக்குத் தெரியும்.

அதனால், அவரை கடற்­ப­டையில் இருந்து விலக வைத்தார்.

மேலும், யோஷித்த ராஜபக் ஷ கடற்­ப­டையில் ஒரு தள­ப­திக்­கு­ரிய வச­தி­க­ளோடு தான் இருந்­தவர்.

கடற்­ப­டையின் விதி­மு­றை­க­ளுக்கு ஏற்ப அவர் நடந்து கொண்­ட­தில்லை.

புதிய அர­சாங்கம், இரா­ணுவ விசா­ரணை ஒன்றை அவர் மீது நடத்த உத்­த­ர­விட்டால், அது மோச­மான விளை­வு­களை தனது மக­னுக்கு ஏற்­ப­டுத்தும் என்­பதை உணர்ந்து யோசித ராஜ­பக்­ ஷவை கடற்­ப­டையில் இருந்து வெளி­யேற அனு­ம­திக்கும் உத்­த­ரவில் கையெ­ழுத்­திட்டார் மஹிந்த.

அதி­காலை 5.15 மணி­ய­ளவில் ரணிலின் வாக­னத்­துக்­காக அலரி மாளி­கையின் கத­வுகள் திறக்­கப்­பட்­டன.

ஒன்­றன்பின் ஒன்­றாக மூன்­ற­டுக்குப் பாது­காப்பு தடை­களைத் தாண்டி உள்ளே சென்ற ரணி­லுக்கு அதிர்ச்சி காத்­தி­ருந்த்து.

ஏனென்றால், உயர்­நீ­தி­மன்ற பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் அங்கு நின்று கொண்­டி­ருந்தார்.

அந்த நேரத்தில் அவர் அங்கு சென்­றி­ருக்க வேண்­டி­ய­தில்லை.

அவ்­வாறு செல்­வதும் ஒரு பிர­தம நீதி­ய­ர­ச­ருக்­கு­ரிய மாண்பு அல்ல.

indexபிர­தம நீதி­ய­ர­ச­ரான மொஹான் பீரிஸ், தேர்தல் முடி­வுகள் வெளி­வந்து கொண்­டி­ருந்த போது, அலரி மாளி­கையில் நின்று கொண்­டி­ருந்­தது அவ­ரது அர­சியல் சார்புத் தன்­மையை உணர்த்­தி­யி­ருந்­தது.

அவரைக் கடந்து உள்ளே சென்ற ரணில், நிலையை விளங்­கப்­ப­டுத்தி, அதி­கா­ரத்தை சுமு­க­மான முறையில் கைமாற்­று­வதே சிறந்­தது என்று மஹிந்த ராஜபக் ஷவுக்கு எடுத்துக் விளக்­கினார்.

முன்­னரே அதற்குத் தயா­ரா­கி­யி­ருந்த மஹிந்த ராஜபக் ஷ, ரணி­லிடம் இருந்து சில உத்­த­ர­வா­தங்­களை எதிர்­பார்த்தார்.

அதனைப் பெற்றுக் கொள்­வதே தனக்கும் தனது குடும்­பத்­துக்கும் பாது­காப்பு என்று அவர் புரிந்து கொண்­டி­ருந்தார்.

அதனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் இருந்து அதற்­கான உத்­த­ர­வா­தத்தைப் பெறு­வதே அவ­ரது குறி­யாக இருந்­தது.

கோத்­தா­பய ராஜ­பக் ஷ, லலித் வீர­துங்க ஆகி­யோ­ருடன் இணைந்து ரணி­லுடன் பேரத்தில் இறங்­கினார் மஹிந்த.

ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் சிறையில் அடைக்­கப்­ப­டு­வார்கள் என்று சந்­தி­ரிகா குமா­ர­துங்க இரா­ஜ­தந்­தி­ரிகள் பங்­கேற்ற நிகழ்வு ஒன்றில் கூறி­யதைச் சுட்­டிக்­காட்டி, தமக்கு பாது­காப்பு அளிக்­கப்­பட வேண்டும் என்று மஹிந்த கோரி­யி­ருந்தார்.

அவ்­வாறு எதுவும் நடக்­காது என்று ரணில் உறு­தி­ய­ளித்தார்.

அடுத்து, மஹிந்த ராஜபக் ஷ அச்சம் கொண்­டி­ருந்­தது சரத் பொன்­சே­கா­வினால்.

அவர் புதிய அர­சாங்­கத்தில் பாது­காப்புத் துறையில் வல்­லமை மிக்­க­வ­ராக மாறுவார் என்­பது மஹிந்­த­வுக்குத் தெரிந்திருந்தது.

தன்னால் பழி­வாங்­கப்­பட்ட சரத் பொன்­சேகா தன்­னையும், தனது தம்பி கோத்­தா­பய ராஜ­பக்­ச ஷவையும் பழி­வாங்­குவார் என்று அவர் அஞ்­சினார்.

கோத்­தா­பாய ராஜ­பக்­ ஷவின் பாது­காப்­புக்கும், மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்­புக்கும், தாம் உத்­த­ர­வாதம் அளிப்­ப­தா­கவும், கொமாண்டோ படை­யி­னரின் பாது­காப்பு தொடர்ந்து வழங்­கப்­படும் என்றும் அவர்­க­ளுக்கு ரணில் உத்­த­ர­வா­த­ம­ளித்தார்.

அது­போ­லவே, தனது பாது­காப்பு அச்­சு­றுத்தல் கருதி, கொம்­பனி வீதி­யி­லுள்ள அரச விருந்­தினர் மாளி­கை­யான ஒக்லண்ட் ஹவுஸை தனது அதி­கா­ர­பூர்வ வச­திப்­பி­ட­மாக வழங்க வேண்­டு­மென்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு ரணில் உடன்­ப­ட­வில்லை. மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கேட்டுப் பதி­ல­ளிப்­ப­தாகக் கூறினார்.

பின்னர், அவர் மைத்­தி­ரி­பா­ல­விடம் அதனை தொலை­பே­சியில் கேட்­ட­போது அவர் அதற்கு இணங்­க­வில்லை.

வேறொரு பொருத்­த­மான இடம் அவ­ருக்கு அளிக்­கப்­படும் என்று கூறி­விட்டார்.

சுமு­க­மாக ஆட்­சியை கைமாற்ற இணங்­கினால், தேவை­யான பாது­காப்பு வழங்­கப்­படும் என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறுதியளித்­த­தை­ய­டுத்தே, அலரி மாளி­கையில் இருந்து வெளி­யேற இணங்­கினார் மகிந்த.

காலை 6.30 மணி­ய­ளவில், அவ­சர அவ­ச­ர­மாக மஹிந்த ராஜபக் ஷ அலரி மாளி­கையில் இருந்து வெளி­யே­றினார்.

அப்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தொலை­பே­சியில் அழைத்து மைத்­தி­ரி­பால சிறி­சேன பேசினார்.

அப்­போது தொலை­பே­சியை மகிந்­த­விடம் கொடுத்தார் ரணில்.

அப்­போது தான் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு வாழ்த்துக் கூறி­யி­ருந்தார் மஹிந்த.

அவ­ராகத் தொலை­பேசி எடுத்து மைத்­தி­ரி­பா­ல­வுக்கு வாழ்த்துக் கூற­வில்லை.

மஹிந்­தவின் அலரி மாளிகை வெளி­யேற்­றத்தை அவ­ரது ஊட­கச்­செ­யலர் விஜ­யா­னந்த ஹேரத் அவ­சர அவ­ச­ர­மாக ஊட­கங்­க­ளுக்கு அறி­வித்தார்.

அப்­போது தேர்தல் முடி­வுகள் பர­ப­ரப்­பாக வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.

தோல்­வியை ஒப்புக்கொண்டு அலரிமாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக் ஷ வெளியேறியதும், தேர்தல் முடிவுகளின் மீதிருந்த ஆர்வமும், பரபரப்பும் அப்படியே பொசுங்கிப் போனது.

தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரே, பதவியில் இருந்து விலகிச் சென்றதன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடிக்க முயன்றார் மஹிந்த ராஜபக் ஷ.

அவரது அந்த முயற்சிக்காக காரணம், அதிகாலையில் தான் மேற்கோண்ட சதித்திட்டத்தின் இரகசியத்தை மறைப்பதற்கேயாகும்.

இப்போது, மஹிந்த ராஜபக் ஷவும் அவரது சகாக்களும், அத்தகைய திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

ஆனால், அமெரிக்க இராஜாங்கச் செயலர், ஐ.நா பொதுச்செயலர், மேலும் பல நாடுகளின் தலைவர்கள் தமது செய்தியில், அமைதியான முறையில் அதிகார கைமாற்றம் நிகழ்ந்ததை வரவேற்றுள்ளனர்.

இதுமறைமுகமாக உணர்த்துவது எதனையென்றால், அத்தகைய அதிகாரக் கைமாற்றலுக்குரிய சூழல் இலங்கையில் இருந்திருக்கவில்லை என்பதை தான்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக் ஷ இப்போது அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இராணுவச் சூழ்ச்சிக்குத் திட்டமிட்டதான விசாரணைக்குமுகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு அவர் எதனைச் செய்தாரோ அதுவே இப்போது அவரைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது.

இதனை முன்வினைப் பயன் என்பதா, ஊழ்வினை என்பதா?

-என்.கண்ணன்-

Share.
Leave A Reply

Exit mobile version