மும்பை: மும்பையில் இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது முன்னாள் மனைவி சரிகாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
இசைஞானி இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளதை பாராட்டி மும்பையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.பாலிவுட் இயக்குனர் ஆர். பால்கி ஏற்பாடு செய்த இந்த விழாவை நடிகர் அமிதாப் பச்சன் முன் நின்று நடத்தி வைத்தார்.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், அவரது மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் சரிகா தனது மகள் ஸ்ருதி ஹாஸன் அருகே அமர்ந்திருந்தார்.
அவரை பார்த்ததும் கமல் ஹாஸன் புன்னகை புரிந்தபடி அவர் அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றார். காதலித்து திருமணம் செய்து விவாகரத்தான தனது முன்னாள் மனைவியான சரிகாவின் அருகில் சென்ற கமல் அவரின் கையைப் பிடித்து பாசமுடன் நலம் விசாரித்தார்.
பிரிந்து சென்றபோதிலும் கமல் வந்து பேசியதும் சரிகாவின் முகத்திலோ மலர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. தனது அம்மாவும், அப்பாவும் பாசமாக பேசுவதை சரிகாவின் அருகில் அமர்திருந்த ஸ்ருதி கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார்.
என்ன ஒரு அதிசயம் விழாவுக்கு கமலும் சரி, சரிகாவும் சரி கருப்பு நிற உடையில் வந்திருந்தனர்.