ஜனவரி 8 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த தருணத்தில் திடீர் அரசியல் புரட்சி மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷ பதிலளித்திருக்கிறார்.
“த ஐலண்ட்’ பத்திரிகைக்கு நேற்று புதன்கிழமை அவர் விசேட பேட்டியொன்றை அளித்திருக்கிறார். அப்பேட்டி வருமாறு;
கேள்வி : ஜனவரி 9 அதிகாலை வேளையில் சதிப்புரட்சிக்கு முயற்சித்ததாக பேச்சுகள் காணப்படுகின்றன. உண்மையில் என்ன நடந்தது?
பதில் : அதிகாலை நான் அலரிமாளிகைக்குச் சென்றிருந்தேன். தேர்தல் முடிவுகளை பொருட்படுத்தாமல் அதிகாலை அலரிமாளிகையை எதிரணி செயற்பாட்டாளர்கள் சூழ்ந்து வருவார்கள் என புலனாய்வு அறிக்கைகளை நாங்கள் முன்பாக பெற்றுக் கொண்டிருந்தோம்.
அத்தகைய நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. சட்டமா அதிபரின் ஆலோசனை நாடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்பு கொள்ளப்பட்டது. தான் உடனடியாக அலரிமாளிகைக்கு வருவதாக அவர் கூறியிருந்தார்.
அவர் அங்கு வந்த பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். அலரிமாளிகையை விட்டு ஜனாதிபதி வெளியேறுவதென தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதியினதும் ஏனையவர்களினதும் பாதுகாப்புக்கான பொறுப்பை விக்கிரம சிங்க ஏற்றுக் கொண்டிருந்தார். தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னராகவே இது இடம்பெற்றிருந்தது.
சதிப் புரட்சிக்கு ஏதாவது முயற்சிக்கப்பட்டிருந்தால் சட்டமா அதிபருடன் ஏன் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும் அவர் அரசாங்கத்திற்கு சட்டரீதியான ஆலோசனையையே வழங்குபவர் ஆவார்.
கேள்வி : தேர்தலுக்குப் பின்னர் விமானப் படை விமானத்தில் நீங்கள் மாலைதீவிற்கு சென்றுவிட்டதாக உடனடியாகவே எவ்வாறு வதந்தி பரவியது?
பதில்: அவர்கள் யாரிடமிருந்தோ தவறான தகவலைப் பெற்றிருக்க வேண்டும். நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இருந்தேன்.
கேள்வி : தேர்தலுக்குப் பின்னர், கல்கிசையில் உங்களின் சொந்த வீடொன்று இருப்பதாகவும் அங்கு சுறாக்களை வளர்ப்பதாகவும் 2 பவுசர்களில் தினமும் கடல் தண்ணீர் வீட்டிற்குக் கொண்டுவரப்படுவதை அயலவர்கள் கவனித்ததாகவும் தேர்தலுக்குப் பின்னர் பேச்சுகள் இடம்பெற்றிருந்தனவே.
அந்த அயலிலிருந்த நாய்களும் காணாமல் போய்விட்டதாகவும் உங்களின் ஆட்களே அந்நாய்களைப் பிடித்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் ஆட்கள் சந்தேகப்பட்டனர். சுறாக்களுக்கு சாப்பாடு போடுவதற்காக உங்களின் ஆட்கள் அந்த நாய்களைக் கொண்டுசென்றுவிட்டதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டது?
பதில் : அந்த வீடு அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபடும் இல்லமாகும். இலங்கையில் கல்கிசையிலோ அல்லது வேறு எங்குமோ எனக்கு சொந்தமாக வீடு இல்லை.
நான் இப்போது எனது மாமியாரின் இல்லத்தில் வசிக்கின்றேன். இதற்குப் பக்கத்திலிருக்கும் காணி சீதனமாக எனது மனைவிக்கு வழங்கப்பட்டதாகும். நான் இராணுவத்திலிருந்த போது எனது மனைவிக்கு சீதனமாக வழங்கப்பட்ட காணி அது. நாங்கள் அங்கு வீடொன்றைக் கட்டியுள்ளோம்.
கேள்வி : நீங்கள் அதிகளவு காணிகளையும் வீடுகளையும் சுவீகரித்திருந்ததாக இலஞ்ச, மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவில் ஜே.வி.பி. முறைப்பாடு தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தனவே?
பதில் : காணிப் பதிவாளர் அலுவலகத்தில் இதனை உறுதிப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். குறிப்பிட்ட வீடு அல்லது நிலத்திற்கு யார் உரிமையாளர் என்பதை அங்கு உறுதிப்படுத்த முடியும்.
எனக்குச் சொந்தமான காணி அல்லது வீடொன்றை எவராவது கண்டுபிடித்தால் அந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டவருக்கு அதனை நான் பரிசாக அளிப்பேன் என்று நீண்ட காலத்துக்கு முன்பே கூறியிருந்தேன்.
கேள்வி : லங்கா லொஜிஸ்டிக்ஸினால் யுத்த காலத்தின் போது இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவு தொடர்பாக தேர்தல் பிரசாரத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகா பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். முன்னாள் இராணுவத் தபளதி அத்தகைய குற்றச்சாட்டுகளை சமர்ப்பிக்கும் போது ஆட்கள் நம்புவதற்கு தலைப்படுவார்களே?
பதில் : 2010 ஜனாதிபதித் தேர்தலிலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. லங்கா லொஜிஸ்டிக்ஸ் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமானதாகும். அத்துடன் பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் குழுவின் கண்காணிப்புக்குள் அது வருகின்றது.
ஆயுதங்களை தனியார் கொள்வனவு செய்வதை இல்லாமல் செய்வதற்காக இது அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகளவு பணம் சேமிக்கப்பட்டது. ஏதாவது கொள்வனவு செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் விநியோகத்தருடன் லங்கா லொஜிஸ்டிக்ஸ் தொடர்பை மேற்கொள்ளும்.
இடையீட்டாளராக செயற்படும். விலைகளை ஒப்பிட்டு பார்ப்பதற்கு அது செயற்படும். அநேகமாக சகல கொள்வனவுகளும் அரசாங்கங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றிருந்தன. லங்கா லொஜிஸ்டிக்ஸ் உண்மையான கொள்வனவை மேற்கொண்டதில்லை. கொள்வனவு இடம்பெறும் போது அமைச்சரவை நியமித்த கேள்வி மனு சபைகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுக்கள் போன்ற வழமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
கேள்வி : ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை விடயம் எத்தகையது? இந்த அமைப்புக்குச் சொந்தமான ஆயுதங்கள் பொலிஸாரினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளனவே?
பதில் : ரக்ன லங்கா பல்வேறு தியாகங்கள், முயற்சிகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். பாதுகாப்பு அமைச்சின் கீழ் கம்பனியாக இது இருக்கின்றது. மேலதிக செயலாளரின் கீழ் இது செயற்படுகிறது.
பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் குழுவின் (கோப்) கண்காணிப்புக்குள் வருகின்ற அரச நிறுவனமே இதுவாகும். முன்னாள் படை வீரர்கள் பலருக்கு இந்தக் கம்பனி அதிகளவு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்து சமுத்திரத்தில் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும் ரக்ன லங்கா சம்பந்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் இலாபகரமான செயற்பாடாகும். தனியார் பாதுகாப்பு நிறுவனமான அவான்ட் ஹாட்டுடன் ரக்ன லங்கா உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
ரக்ன லங்காவின் வர்த்தக நடவடிக்கைகளை சர்வதேச ரீதியாக மேற்கொள்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடல் வழி பாதுகாப்பு சேவையை வழங்குதல் ஐ.நா. அங்கீகாரத்துடனான நடவடிக்கையாகும். அதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளன.
ஆட்கள், ஆயுதங்கள் மற்றும் நடைமுறைகளை ரக்ன லங்கா வழங்கு கிறது. இங்கு நடைமுறைகள் மிகவும் முக்கியமானவையாகும்.
தனியார் பாதுகாப்பு கம்பனியொன்றிற்கு நீங்கள் ஆயுதத்தை வழங்க வேண்டுமானால் அவை சட்ட விரோத நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால் அங்கு பிரச்சினை உள்ளது. ரக்ன லங்கா ஆதாயம் பெறும் தொழில் நிறுவனமாக இருக்கின்றது. அதன் இலாபம் அரசாங்கத்திற்கு செல்கிறது. இந்த பிராந்தியத்தில் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்கும் முன்னணி அமைப்பாக இது உருவாகியுள்ளது. இந்த நிறுவனத்தை அழிப்பது குற்றமாகும்.
கேள்வி : இலங்கை வங்கியில் பாதுகாப்புச் செயலாளரின் கணக்கில் 800 கோடி ரூபா இருப்பதாக புதிய நிதியமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில் : நான் ஏற்கனவே இந்தக் கணக்கு பாதுகாப்பு அமைச்சின் கணக்கென விளங்கப்படுத்தியிருந்தேன். இராணுவத் தலைமையக காணி விற்பனையினால் பெற்ற பணத்தை திறைசேரி மாற்றியிருந்தது தொடர்பாக நான் விபரித்திருந்தேன்.
இந்த பணத்தின் மூலம் பத்தரமுல்லையில் பாதுகாப்பு அமைச்சின் புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது. எந்த நிலையிலும் தனிப்பட்ட கணக்கில் திறைசேரியால் பணத்தை வைப்பிலிட முடியாது.
அந்தக் கணக்கு எனது பெயரில் இருக்கவில்லை. அமைச்சின் செயலாளரின் பெயரிலேயே அது இருக்கின்றது. இதன் தற்போதைய பாதுகாவலர் தற்போதைய பாதுகாப்புச் செயலாளராவார். பணம் நிலையான வைப்பில் இடப்பட்டிருந்தது.
புதிய ஆயுதப் படைகளின் கட்டிடத் தொகுதி நிர்மாணத்துக்கு தாமதமின்றி அனுசரணை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சின் கணக்கில் இது இருக்கின்றது.
20 வருடங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் சேவை கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்க காணி வழங்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன.
ஆதலால் இந்தக் கட்டிடத் தொகுதி நீண்டகால திட்டமாகும். இந்தக் கணக்கை பாதுகாப்பு அமைச்சின் பிரதம கணக்காளரே நிர்வகித்து வந்தார். வருடாந்த வரவு செலவு அரசாங்கத்தின் ஐந் தொகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கேள்வி: தேர்தல் பிரசாரத்தின் போது அவர்களுக்கெதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் ஒருபோதும் பதிலளித்திருக்கவில்லை. அவை உண்மையானவை என பலர் ஆச்சரியப்பட்டிருந்தனர்.
உதாரணமாக ஜனாதிபதியின் புதல்வர்களினால் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டதை எடுத்துக் கொண்டால் “ஓ நான் ஹெலிகொப்டர்களை எனது மகன்மாருக்காக வாங்கினேன்.
அவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த போது’ என்று கூறப்பட்டது. அது போதியளவான பதிலாக இருக்கவில்லை. பொது மக்களுக்காக நீங்கள் விடயங்களை வெளியிட வேண்டியுள்ளது.
ஹெலிகொப்டர் கதையை மேலோட்டமாக தெரிவிப்பதற்கு பதிலாக நாட்டில் எத்தனை ஹெலிகொப்டர்கள் இருந்தன? எவ்வளவு ஹெலிகொப்டர்கள் விமானப் படைக்குச் சொந்தமானவை?
எவ்வளவு ஹெலிகள் தனியார் கம்பனிகளுக்குச் சொந்தமானவை? என்பது பற்றியும் அவரின் மகன்மாருக்கு எந்தவொரு ஹெலிகொப்டர்களும் சொந்தமாக இருக்கவில்லை என்பதைப் பற்றியோ அல்லது அவர்களின் பயன்பாட்டுக்கு விமானப் படை ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டன என்பது குறித்தோ பொது மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்க வேண்டும் அல்லவா?
பதில் : சில தனியார் கம்பனிகள் ஹெலிகொப்டர்களையோ அல்லது சிறிய விமானங்களையோ வைத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று சஜின்வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமானது.
ஐ.தே.க. அரசியல்வாதிகளான தயா கமகே, மயந்த திஸாநாயக்க ஆகியோரும் ஹெலிகொப்டர்களை வைத்திருக்கும் கம்பனிகளில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
நோயல் செல்வநாயகம் போன்ற ஏனையவர்கள் சிலரும் ஹெலிகொப்டர் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். முதல் குடும்பத்திடம் எந்தவொரு ஹெலிகொப்டர்களும் இருக்கவில்லை. அத்துடன் ஜனாதிபதியின் புதல்வர்கள் பயணம் செய்வதற்கு விமானப் படை சொப்பர்கள் எவையும் அமர்த்தப்பட்டிருக்கவில்லை.