இராணுவத்தைக் கொண்டு ஆட்சியை தக்கவைப்பதற்காக ஒன்பதாம் திகதி அதிகாலை கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சி குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இது தொடர்பில் பல்வேறு அதிகாரிகள் சாட்சியமளித்துவருகின்றனர் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் இராணுவத்தின் துணையைக்கொண்டு ஆட்சியமைப்பது என்பது சாத்தியமற்ற விடயமாகும். காரணம், இராணுவம் அவ்வாறான விடயத்துக்கு துணைபோகாது.
இலங்கையும் இந்தியாவும் அரசியலில் ஊறிப்போன மக்களைக்கொண்ட நாடுகள், இலங்கையில் 1931ஆம் ஆண்டிலிருந்து வாக்குரிமை பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெப்ரவரி இரண்டாம் திகதி
நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக்கோவையை பாராளுமன்றத்துக்கு சமர்பபிப்போம். இதனை தயாரிக்கும் பணிகள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கூடிய அரசாங்கத்தின் நிறைவேற்றுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் முகமாகவே இந்த செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அங்கு மேலும் குறிப்பிடுகையில் 10 நாட்களில் பல திட்டங்கள் எமது அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தற்போது 10 நாட்கள் கடந்துள்ளன. குறுகிய காலத்தில் பாரிய வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளவேண்டியிருந்தது. முதலில் தேர்தலில் வெற்றிபெற்றதும் அரசாங்கம் ஒன்றை அமைத்தோம்.
அதன் பின்னர் அமைச்சரவையை உருவாக்கினோம். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றோம். தற்போது எங்களுக்கு பாராளுமன்றத்தில் அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர்.
உண்மையான சர்வகட்சி
உண்மையான தேசிய சர்வகட்சி அரசாங்கம் தற்போது உருவாகியுள்ளது. தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைவிட அதிகமான பாராளுமன்ற பலம் எம்மிடம் உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம்முடன் உள்ளன.
சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக இருக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமராக இருக்கின்றார். இதுதான் உண்மையான சர்வகட்சி அரசாங்கமாகும்.
நிறைவேற்றுக்குழு
அந்தவகையில் செவ்வாய்க்கிழமை அரசாகங்த்தின் உயர்பீடமான நிறைவேற்றுக்குழுக் கூடி பல தீர்மானங்களை எடுத்துள்ளது. பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம். சகல கட்சிகளினதும் தலைவர்கள் இந்த தேசிய நிறைவேற்றுக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
ஆறாம் திகதி மருந்துகொள்கை
அதன்படி முதலாவதாக அரசாங்கத்தின் தேசிய மருந்துக் கொள்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தக கொள்கைத்திட்டத்தை அதற்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதியை பெறுவோம்.
அதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவோம். இது தொடர்பில் நானும் ஜனாதிபதியும் நீதியமைச்சரும் பேச்சு நடத்தினோம்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயத்தில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். வாக்குறுதியளித்தவாறு இதனை நாங்கள் செய்கின்றோம்.
அரசியல்வாதிகளுக்கான ஒழுக்கக்கோவை
பெப்ரவரி இரண்டாம் திகதி நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக்கோவையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம். இலங்கை அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக இவ்வாறான ஒரு கோவை வருகின்றது.
இதனை தயாரிக்கும் பணிகள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை நான் பார்த்தேன். அதனை பார்த்தால் அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகளாக வருவதற்கு இன்னொரு முறை சிந்திப்பார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற இடத்திலிருந்து மக்கள் சேவகன் என்ற இடத்துக்கு செல்லவுள்ளனர். இது மிக முககிய விடயமாக அமையும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை இது தாக்கம் செலுத்தும் வகையில் அமையும். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றுக்குழுவில் எடுக்கப்பட்டது.
இராணுவத்தின் துணையுடன்..
கடந்த எட்டாம் திகதி இரவு அல்லது ஒன்பதாம் திகதி அதிகாலை நா்ட்டில் இராணுவத்தைக் கொண்டு ஆட்சியை தக்கவைக்க கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் முயற்சித்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இது தொடர்பில் பல்வேறு அதிகாரிகள் சாட்சியமளித்துவருகின்றனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முறைப்பாட்டையும் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி இராணுவத்தின் துணையைக்கொண்டு தனது மீதி இரண்டு வருடங்களுக்கு பதவியில் இருக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் இலங்கையில் இராணுவத்தின் துணையைக்கொண்டு ஆட்சியமைப்பது என்பது சாத்தியமற்ற விடயமாகும். காரணம் இராணுவம் அவ்வாறு துணைபோகாது. இலங்கையும் இந்தியாவும் அரசியலில் ஊறிப்போன மக்களைக் கொண்ட நாடுகள். இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலிருந்து வாக்குரிமை பயன்படுத்தப்படுகின்றது.
அரசியலில் ஊறிப்போனவர்கள்
எமது நாட்டு மக்கள் அரசியலில் ஊறிப்போனவர்கள். எனவே இங்கு இராணுவத்தின் துணையுடன் ஆட்சியை தக்க வைப்பது முடியாத விடயமாகும்.
இந்த சம்பவத்தின்போதும் இராணுவத்தினர் கடந்த அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர். அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர். எனவே இந்த விடயம் தொட்ர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என்பதனை கூறுகின்றோம்.
ஊழல் குறித்து விசாரணை
ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும். தற்போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைககுழுவுக்கு கிடைத்துள்ள கோப்புகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ,தன் தலைவரை உடனடியாக மாற்ற முடியாது. உடனடியாக பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நேர்மையான ஒருவரை நியமிப்போம்.
புதிய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைககுழு நிறுவப்பட்டதும் புதிய அதிகாரிகளை நியமிப்போம். யார் ஊழல் செய்திருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தாலு் ஊழல் விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்க பணம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனது பெயரில் அரசாங்கத்தின் நிதியை வைத்திருந்துள்ளார். இவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை எவரும் தமது கணக்கில் வைக்க முடியாது. எனவே இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும். பாதுகாப்பு அமைச்சு நாட்டில் ஹோட்டல்களை கட்டிக்கொண்டிருக்கின்றது. அது பாதுகாப்பு அமைச்சின் வேலை அல்ல.
பல ஊழல்கள்
அதனால்தான் ராஜபக்ஷ குடும்பம் 69 வீதமான அரச நிதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்று கூறுகின்றோம். பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலும் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும். ஊடக நிறுவனங்களுக்கு கடந்த அரசாங்கம் கடன் செலுத்தவேண்டியுள்ளதாகவும் தெரிகின்றது.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுககு மோட்டார் சைக்கிள்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகள் விரிவுபடுத்தப்படும். இதற்கான தீர்மானமும் தேசிய நிறைவேற்றுக் குழுவில் எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் குறித்து துரித நடவடிக்கை
அரசியல் கைதிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம். கே.பி. போன்ற புலிகளின் தலைவர்கள் சுதந்திரமாக இருக்கும்போது அரசியல் கைதிகள் எவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்க முடியும்?
எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து அனைத்து விபரங்களையும் திரட்டுமாறு பணிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களின் நிலை இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்னவென்று ஆராய்ந்துவிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
நல்லாட்சி
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பி்னர் பாலித்த தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார். இது நல்லாட்சிக்கான அரசாங்கம். எனவே தவறு செய்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் இறக்குமதிக்கு இடமளிக்கமாட்டோம். அதனுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல் அறியும் சட்டமூலம்
பெப்ரவரி மாதம் ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எனவே தொலைபேசி ஒட்டுக் கேட்கும் செயற்பாடுகள் இனி இடம்பெறமாட்டாது.
வௌ்ளைவான்கள் ஊடகவியலாளர்களி்ன் பின்னால் வராது.எனவே ஊடகவியலாளர்கள் அச்சமின்றி எம்மை எதிர்த்து எழுதுங்கள். ஆனால் எமது பக்க நியாயத்தை பார்த்து எழுதுங்கள்.