இறந்தும் ராமஜெயத்தைத் துரத்திய வழக்குகள்!
ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை ராமஜெயத்தின் தில்லை நகர் அலுவலகத்தில் எப்போதும் ஜெஜெயென மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கட்சிக்காரர்களுக்கு பிரச்னை என்றால், அடுத்த நிமிடம் போன் பறக்கும். உடனுக்குடன் சரிசெய்வார். வருடா வருடம் பள்ளி அட்மிஷன் நேரங்களில், இவரது தில்லை நகர் ஆபீஸுக்கு தங்கள் குழந்தைகளுக்கு பிரபல பள்ளிகளில் சீட் வேண்டும் என கியூவில் நிற்பார்கள். தங்கள் ஊர்களில் கோயில் கட்ட பணம் வேண்டும் என பலர் வரிசையில் நிற்பார்கள். அவற்றையெல்ல்லாம் சட்டென முடிக்கும் ராமஜெயத்தின் பாணியே வித்தியாசமானது.
இது ராமஜெயத்தின் ஒரு முகம். அவருக்கு மற்றொரு முகமும் உண்டு. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என பேசும் கோபக்காரர்.
திருச்சி ஏரியாவில் சர்ச்சைக்குரிய நிலங்கள் விற்பனைக்கு வந்தால், அதில் அங்கு அரங்கேறும் பிசினஸ் பிரச்னை, நிலம் கொடுக்கல் வாங்கல் என அனைத்திலும் ராமஜெயம் பெயர் அடிப்படாமல் இருக்காது.
இதையெல்லாம் வைத்துதான் ஒரு கட்டத்தில், திருச்சியையே இவர் வளைத்துப் போட்டுவிட்டதாகவே சாதாரணமானவர்களைக்கூட பேச வைத்தது.
அது வழக்காகவும் பாய்ந்தது. கடந்த 2011 செப்டம்பர் மாதம் நில அபகரிப்பு வழக்கில் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, கோவை வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். இதுபோன்ற வழக்குகள் அவர் இறந்த பின்னும் தொடர்ந்தது.
கொலை செய்யப்பட்ட ராமஜெயம் இறந்து 25 நாட்களுக்குப் பிறகு அவர் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் மேற்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி என்பவர், ஸ்ரீரங்கம் அருகே உள்ள தனது பசுக்கள் மடத்தை அபகரித்ததாக ராமஜெயம் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் அதற்கு முந்தைய மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதுதொடர்பாக, கொலை செய்யப்பட்ட ராமஜெயம் உள்பட ஐந்து பேர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு ராமஜெயத்தின் இறப்புச் சான்றிதழை கோர்ட்டில் தாக்கல் செய்து, அந்த வழக்கில் இருந்து விடுவித்தனர்,
கார் விபத்தும் காவிரிக் கரையும்!
ராமஜெயம் எப்போதும் உடம்பை பலமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர். அதனால் தன் வேலைபளுவுக்கு நடுவில் தவறாமல் நண்பர்களுடன் பூப்பந்தாடுவது, வாக்கிங் போவது என உடம்பை கட்டுக்குள் வைத்திருந்தார்.
கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அவரின் கார் விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்துபோக நடக்க முடியாமல் சிரமப்பட்டார். கொஞ்ச நாள் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி நடக்க முயற்சி செய்தார்.
2012 மார்ச் 29ஆம் தேதி காலை தனது தில்லை நகர் 10 கிராஸ் வீட்டில் இருந்து கையில் வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் மெல்ல வாக்கிங் கிளம்பினார்.
எதிரில் அவரது வீடு இருக்கும் தெரு முனையில் நின்று ஜட்ஜ் மணி என்பவரைச் சந்தித்து பேசிவிட்டு, ‘சாஸ்திரி நகர் ஆபீஸுக்கு 7 மணிக்கு வந்துடுங்க சார்’ என சொல்லிவிட்டுக் கிளம்பிய ராமஜெயத்தை, அதன் பின்னர் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.
சயனைடு கொடுத்துக் கொலை!
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட மார்ச் 29 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு, அவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் சிறிதளவு ஆல்கஹால் இருந்ததாகவும், அவர் கொலை செய்யப்பட்டு 12 மணி நேரத்துக்கு மேலாகி இருக்கலாம் என்பதாகவும் தெரிவித்தாக தகவல் பரவியது.
ராமஜெயத்தின் குடும்பத்தினர், அவருக்கு டிரிங்ஸ் சாப்பிடும் பழக்கமே இல்லை என மறுத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம், ராமஜெயம் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
அந்த அறிக்கையில், ராமஜெயம் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு சயனைடு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. மேலும் அவரது கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகளும், அவரது பின்மண்டையில் பலமாகத் தாக்கியதற்கான அறிகுறிகளும் இருந்தன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை, முக்கிய தடயமாக அமையும் எனக் கருதப்பட்டது.
ராமஜெயத்தைக் கொலை செய்தவர்கள், அவரது மனைவிக்கு போன் செய்து நேருவின் நம்பரை கேட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. கொலை வழக்கைத் துரிதப்படுத்தும் விதமாக ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கே.என்.நேரு, ராமஜெயம் குடும்பத்தினர், அவருடைய சகலையின் மகன் வினோத், ராமஜெயத்துக்கு நெருக்கமான கட்சிக்காரர்கள், கணக்குவழக்குகளைப் பார்த்துவந்த அமுதன், லாட்டரி ராம்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் உள்ளிட்டோரிடம் மணிக்கணக்காக விசாரணை நடத்தினர். துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ‘ராமஜெயம் அன்று வீட்டுக்கே வரவில்லை, இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே கடத்தப்பட்டதாகவும், பெண் தகராறில் கொல்லபட்டதாகவும் கிளப்பிவிட்டார்கள். ஆனால் விசாரணையில், ‘காலையில் வாக்கிங் சென்றபோதுதான் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார்’ என்பது மட்டுமே உறுதிசெய்யப்பட்டது.
கண்காணிப்பு வளையத்தில் ராமஜெயத்தின் நிழல்!
ராமஜெயம் வாக்கிங் சென்றால் அவருடன் எப்போதும் வழக்கமாக கடவுள் பெயர்களைக் கொண்ட இன்ஸ்பெக்டரும், கவுன்சிலரும் வாக்கிங் போவது வழக்கம். ஆனால், அவர்கள் அன்று வாக்கிங் போகவில்லை. அவர்களிடம் விசாரணையும் இல்லை.
இதுமட்டுமல்லாமல், சம்பவத்துக்கு முதல் நாள் இரவு சென்னையில் இருந்து திருச்சிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமஜெயம் வந்துள்ளார். இவருடன் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் உடன் வந்ததாக சொல்லப்பட்டது. இந்த பேராசிரியர் மன்னார்குடி வகையறாவைச் சேர்ந்த அ.தி.மு.க, முக்கிய பிரமுகருக்கும் நெருக்கமானவர். இவர் தனக்கு மிக நெருக்கமான காவல்துறை உயரதிகாரியின் நட்பால், போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்பட்டது.
அந்த நபர் இப்போதுதான் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணை வளையத்தில் வந்துள்ளார். ஆனாலும், அந்தப் பேராசிரியரை காவல்துறை அதிகாரி காப்பாற்றுகிறார் என்கிறார்கள்.
ராமஜெயம் கொலை வழக்கில் 90 நாட்கள் ஆகியும் மாநகர காவல்துறை எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி உதவி ஆணையர் மலைச்சாமி தலைமையில் 12க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் அடங்கிய படை களத்தில் இறங்கி மீண்டும் சாட்சிகளை விசாரிக்கத் துவங்கியது. ராமஜெயத்துக்கு ஓரிரு மாதங்களாக வந்த போன் அழைப்புகள், அவர் தொடர்புகொண்ட நபர்கள், கொலை நிகழ்ந்த அன்று நள்ளிரவில் இருந்து காலை வரை திருச்சி மாநகரில் தொடர்பில் இருந்த 4,000 செல்போன் இணைப்புகள் ஆகியவற்றை விசாரித்தனர்.
விசாரணை முடிவில் கொலைக்கான காரணங்களைப் பட்டியலிட்டனர். அதில் முக்கியமான காரணங்களை லிஸ்ட் அவுட் செய்து, தனிப்படை போலீஸார் விசாரித்தனர். ரவுடி குரூப், தொழில் போட்டி, அரசியல் எதிரிகள், ராமஜெயத்தால் அவமதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களைத் தேடிப்பிடித்து விசாரித்தும் உருப்படியான ‘க்ளு’ எதுவும் கிடைக்கவில்லை.
இந்த துரைராஜின் கொலைவழக்கு மோட்டிவ்கூட, ராமஜெயம் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என நினைத்தனர். ஆனால் கடந்த 2013 டிசம்பர் மாதம் திருவானைக்கோவிலைச் சேர்ந்த சாமியார் கண்ணன், ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜையும் அவரது டிரைவரையும்தான் கொன்றதாக ஒப்புக்கொண்டு சிறையில் உள்ளார்.
அதனை அடுத்து அந்தக் கோணத்திலான விசாரணையும் முடிவுக்கு வந்தது. துரைராஜ் கொலை வழக்கில் எதற்காக ராமஜெயம் பெயரை கிளப்பிவிட்டார்கள் என்பது போலீஸாருக்கே வெளிச்சம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
ராமஜெயம் கொலை வழக்குக்குப் பிறகு பார்ப்பவர்களை எல்லாம் சந்தேகப்பட ஆரம்பிப்பது திருச்சிவாசிகளின் நிலைமை ஆகிவிட்டது. ராமஜெயம் கொலை பாணியில் என எழுத ஆரம்பித்தார்கள். தமிழகத்தில் எங்கெல்லாம் இதுபோன்ற ஸ்டைலில் கொலை நடக்கிறதோ, அங்கெல்லாம் போலீஸார் நேரில் சென்று விசாரித்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல்லில் பிரபல டாக்டர் பாஸ்கர் மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். பல மாதங்கள் நடந்த தேடலுக்குப் பிறகே குற்றவாளிகளை போலீஸ் பிடித்தது. அந்தக் கொலையை செய்த மதுரையைச் சேர்ந்த ஒரு கூலிப்படை. அந்த படைக்கும். ராமஜெயம் கொலையில் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடந்தது.
ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸார் எத்தனையோ பேரை விசாரித்தனர். ஆனால், ஒருவரை மட்டும் ஏனோ நெருக்கமாகக் கண்காணித்தபடியே இருக்கிறார்கள். அவர், ராமஜெயத்தின் நிழல் என்று வர்ணிக்கப்பட்ட நபர். ராமஜெயம் உயிருடன் இருந்தவரை, அந்த உறவுக்கார இளைஞரை மீறி, யாரும் அவரை சந்தித்துவிட முடியாது.
பல்வேறு நாடுகளுக்கும் பறந்து, தொழிலை விருத்தி செய்யும் முனைப்பில் ராமஜெயம் இருக்க, அதைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு கல்வித்துறை முதல் காவல்துறை வரை தனது ராஜாங்கத்தை விரிவுப்படுத்தினார் அந்த இளைஞர்.
அந்தளவுக்கு ராமஜெயத்துக்கு எல்லாமுமாக இருந்த அந்த இளைஞர், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பிறகு, தன் அலைபேசிகள் அனைத்தையும் சுவிட் ஆஃப் செய்துவிட்டார். அவரை யாராலும் அத்தனை எளிதில் தொடர்புகொள்ள முடியவில்லை.
ராமஜெயத்தின் கொலை வழக்கைத் விசாரிக்கும், போலீஸார். அந்த இளைஞருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது என்று நம்புகிறார்கள். அதனால், இப்போதும் அந்த இளைஞர் விசாரணை வளையத்திலேயே உள்ளாராம்.
ராமஜெயம் கொலை வழக்கு மர்மம் தொடரும்…