ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களாகியுள்ள நிலையில், இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நம்பமுடியாததொரு விடயமாக பேசப்படுகிறது.
சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இதை ஓர் ஆச்சரியமான விடயமாக, அபூர்வமான நிகழ்வாக சித்திரிக்கப்படுகிறது. அந்தளவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் அசைக்கமுடியாத பலத்துடன் இருந்துவந்தார். அவரது தோல்வியை எவராலும் நம்பமுடியாத நிலை இன்னும் தொடர்கிறது.
ஏன், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட, இது நம்பமுடியாத அதிசயமாக நிச்சயம் இருந்திருக்கும். ஆனாலும், அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் என்ன என்ற கேள்விகளும் அதற்கு விடை தேடும் முயற்சிகளும் தொடர்கின்றன.
இந்தக் கட்டத்திலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பின்னால், இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்ற தகவல் கடந்த வாரம் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது.
கொழும்பிலிருந்த ‘றோ’வின் தலைமை அதிகாரியான கே.இளங்கோ, கடந்த டிசெம்பர் மாதம் திடீரென்று புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டார்.
அவருக்கு புதுடெல்லியில் ‘றோ’வின் தலைமையகத்தில் புதிய பதவி வழங்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே ‘றோ’ அதிகாரி இளங்கோ புதுடெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டதாக தேர்தலுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எதிரணியின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமாக இருந்தார் என்பதற்காகவே இளங்கோவை திருப்பி அழைக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்போது அது பற்றி பெரிதாக எவரும் அலட்டிக்கொள்ளவில்லை.
தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை தழுவியதுமே, இதன் பின்னணி குறித்து பலரும் ஆராயத்தொடங்கியுள்ளனர்.
இந்தச் சூழலிலேயே, ஆட்சி மாற்றத்தில் ‘றோ’வின் பங்களிப்பு பற்றிய செய்திகளும் வெளியாகியிருக்கின்றன. இதுபற்றி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமே புதிய சந்தேகங்களை கிளப்பியிருந்தது. உலகளாவிய ஊடகங்களில் அது முக்கிய இடத்தை பிடித்தது.
ஏனென்றால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி அந்தளவுக்கு உலக ஊடகங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
எனவே, அதற்கான காரணத்தை விபரிப்பதில் அவை முன்னின்றன. அதைவிட, இந்திய புலனாய்வுத்துறையான ‘றோ’வின் மீது எப்போதும் உலகளாவிய கவனம் இருந்துவருகின்ற நிலையில், இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு அது காரணமாயிற்று என்பது இயல்பாகவே கவனத்தை பெறக்கூடிய விடயம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வலுவான பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி, அவரை தோற்கடிப்பதற்கு ஊக்கமளித்தார் ‘றோ‘ அதிகாரி இளங்கோ என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் வெளியக புலனாய்வுப்பிரிவான ‘றோ’ எனப்படும் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகின் கொழும்புக்கான தலைமை அதிகாரியாக இருந்தவரே கே.இளங்கோ. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி.
1981ஆம் ஆண்டு இந்திய பொலிஸ் சேவையில், ஜம்மு காஷ்மீர் மாநில ஒதுக்கீட்டின் மூலம் இணைந்துகொண்டவர்.
பொலிஸ் அதிகாரியாக செயற்பட்ட அவர், பின்னர் ‘றோ’வுக்குள் உள்வாங்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு மினிஸ்டர் கவுன்சிலர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பொதுவாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள், இவ்வாறு தமது புலனாய்வு அதிகாரிகளை தூதரகங்களில் இராஜதந்திரிகளாக நியமிப்பது வழக்கம். அதுபோலவே, இளங்கோவும் கொழும்பில் ஓர் இராஜதந்திரியாகவும் புலனாய்வு அதிகாரியாகவும் இரட்டைப்பணி ஆற்றியிருந்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து, இவர் திடீரென்று புதுடெல்லிக்கு மாற்றப்பட்டார்.
அஜித் டோவல் கொழும்பு வந்தபோது, அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியத் தூதரக அதிகாரியான இளங்கோவின் செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு தெரிவித்திருந்தார் என்கின்றன சில தகவல்கள்.
அப்போது, அவரை திருப்பி அழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டமைக்கு இணங்க, உடனடியாக புதுடெல்லி அவரை திருப்பி அழைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தியாவின் மறுப்பு
ஆனால், இந்திய இராஜதந்திரிகள் எவரும் அவ்வாறு திருப்பி அழைக்கப்படவில்லை என்று அடித்துச் சொல்கிறது இந்திய அரசாங்கம். இதுபற்றி கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன், ‘வெளிநாட்டில் அதிகாரி ஒருவர் மூன்று வருடங்களுக்கு மாத்திரமே பணியாற்ற அனுமதிக்கப்படுவார்.
கடந்த வருடத்தில் கொழும்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவருமே அங்கு தமது சேவைக்காலத்தை பூர்த்திசெய்தவர்களே. யாரும் திருப்பி அழைக்கப்படவில்லை. முகம் தெரியாதவர்கள் வெளியிடும் கருத்துக்களை செவிமடுக்காதீர்கள்’ என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமன்றி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் கருத்து வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அவ்வாறு நடந்திருக்கச் சாத்தியமில்லை என்று அடித்துக்கூறியிருக்கிறார்.
அவ்வாறு மூத்த இராஜதந்திரி ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால், அது இராஜதந்திர ரீதியில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்குமென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது மக்களே தவிர, ‘றோ’ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து இலங்கை அரசாங்கமோ, இந்திய அரசாங்கமோ இப்போது இந்த விவகாரம் தீவிரம் அடைவதை விரும்பவில்லை என்பதை உணரமுடிகிறது.
அதேவேளை, இந்தியா தாம் ஆட்சி மாற்ற விடயத்தில் தலையீடு செய்யவில்லையென்று ஒருபோதும் கூறவில்லை என்பதை இங்கு கவனத்திற்கொள்ளவேண்டும்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரோ அல்லது வேறு எந்த அதிகாரிகளோ ‘றோ’ அதிகாரி திருப்பி அழைக்கப்படவில்லை என்று கூறினரே தவிர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க இந்தியா முயற்சிக்கவில்லை என்று குறிப்பிடவில்லை.
மஹிந்தவை எதற்காக தோற்கடிக்க இந்தியா விரும்பியது?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிக்க இந்தியா ஏன் விரும்பியது- ‘றோ’ அதிகாரி இளங்கோ அதற்கான முயற்சிகளில் ஏன் ஈடுபட்டார் என்ற கேள்விகளுக்கு விடை கூறுவது அவ்வளவு கடினமானதல்ல.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவதை இந்தியா விரும்பியமைக்கு கடந்த ஒன்பதாண்டுகால அவரது ஆட்சியில் இடம்பெற்ற எத்தனையோ காரணங்களை இந்தியாவினால் அடுக்கமுடியும்.
1. இந்தியாவுக்கு கட்டுப்படுகின்ற ஒருவராக அவர் இருந்திருக்கவில்லை
2. இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக அவர் நடந்துகொள்ளவில்லை.
3. இந்தியாவின் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கு அவர் இடமளிக்கத் தயங்கவில்லை.
4. பிராந்தியத்தில் இந்தியாவின் நலனுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை.
5. அவற்றைவிட, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, இந்தியாவுடன் அவர் விளையாட முனைந்தார். இவை போன்ற பல காரணங்கள் கூறப்படலாம்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தனது புலனாய்வுப்பிரிவை இந்தியா செயற்படுத்த முனைந்தமைக்கு கடைசியாக காரணமொன்று கூறப்படுகிறது. அதுவே, சீனாவின் நீர்மூழ்கிகள் கொழும்பில் தங்குவதற்கு இடமளித்தமையாகும்.
ஒன்றல்ல இரண்டு தடவைகள், சீன நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச்செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்திருந்தார்.
இது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களின் மீது கைவைத்த விவகாரம். அதற்கு முன்னதாக தனது பொருளாதார நலன்களை சீனா தட்டிப்பறித்தபோது பொறுமையாக இருந்த இந்தியாவினால், தன் பாதுகாப்பு நலன்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியபோது, சும்மா இருக்கமுடியவில்லை.
சீன நீர்மூழ்கிகளுக்கு தரித்துநிற்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளித்ததே, இந்தியாவின் கோபத்துக்கு அவரை தோற்கடிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தக் காரணமென்று பொதுவாக நம்பப்படுகிறது. உள்ளேயும் வெளியேயும் இதற்கப்பால் வேறும் பல காரணங்கள் இருக்கலாம்.
எப்படி வகுக்கப்பட்டது வியூகம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக இந்திய புலனாய்வுத்துறை அதிகாரியான இளங்கோ, இரண்டு அல்லது மூன்று தடவைகள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் என்கிறது ரொய்ட்டர்ஸ் செய்தி.
அதுபோலவே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் அவர் தொடர்பிலிருந்ததாக கூறப்படுகிறது. அதைவிட, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தை விட்டு வெளியேறவைப்பதிலும் இவர் பங்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேண்டாமென்றும் அவ்வாறு போட்டியிட்டால் தோல்வி அடைய நேரிடுமென்பதையும் விபரித்து, அவரை போட்டியிலிருந்து ஒதுங்கவைத்ததும் இவரே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைவிட, வெற்றி பெறத்தக்க ஒரு வேட்பாளரை நிறுத்தவேண்டுமென்ற ஆலோசனையையும் அவரே முன்வைத்திருந்தாராம்.
இவையெல்லாம் உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை. என்றாலும், இந்த அரசியல் சூத்திரங்களே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் வெற்றியை கொடுத்துள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பற்காக வியூகம் வகுத்ததில், சந்திரிகா, ரணில் உள்ளிட்ட தலைவர்களுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லையென்றே இத்தகைய ஊகங்கள் கருதவைக்கின்றன.
நிச்சயமாக அத்தகைய வங்குரோத்து நிலையில், இலங்கை அரசியல் தலைமைகள் இல்லையென்றே நம்பலாம். அதற்காக, ‘றோ’ அதிகாரியின் பங்களிப்பு இல்லையென்று முற்றாக ஒதுக்கித்தள்ளவும்முடியாது.
ரணில் விக்கிரமசிங்க யாருடைய ஆலோசனையையும் பெறவில்லையென்று அவரது பேச்சாளர் கூறிருக்கிறார். ஆனால், இரண்டு மூன்று தடவைகள் இந்திய அதிகாரிகள், அவரை சந்தித்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார் ரணிலின் பேச்சாளர்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவும் இந்த விவகாரத்தில் ‘றோ’வின் தலையீடு இருந்திருக்குமென்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், அவரது குடும்ப வட்டாரங்கள் அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்கவில்லை.
ஆக, எல்லாத் தரப்புகளுமே மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் ‘றோ’ பங்களித்தது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையென்பது கவனிக்கத்தக்கது.
அடக்கி வாசிப்பது ஏன்?
வெளிநாட்டுச் சதியென்று தேர்தல் பிரசாரத்தின்போது ஓயாமல் புலம்பிக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, ‘றோ‘ விவகாரம் குறித்து செய்திகள் வெளியான பின்னரும் அடக்கி வாசிக்கிறார்.
எதற்காக இப்போது எல்லாத் தரப்பினரும் இதனை முக்கியத்துவப்படுத்த விரும்பவில்லையென்றால், அதற்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமே காரணம்.
ஒருவேளை, மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாரேயானால், இந்தளவுக்கு இது பூதாகரமான பிரச்சினையாக வெடித்திருக்கலாம். தன்னை கவிழ்க்க முயன்றதாக இந்தியா மீது அவர் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கலாம்.
தனது முயற்சி தோல்வியில் முடிந்ததென்ற கோபத்தில் இந்தியாவும் தனது அதிகாரியை வெளியேற்றியமைக்கு பதிலடி கொடுக்க முனைந்திருக்கலாம். ஆனால், இப்போது எதையுமே செய்யமுடியாது.
புதிய அரசு, இந்தியாவுடன் நட்புறவை பேண விரும்புகிறதென்பதால், அது இந்த விவகாரத்தை மறைக்கப் பார்க்கலாம்.
இந்தியாவும் தனது அதிகாரி விடயத்தில் அதிருப்தியான விடயங்கள் நடந்தேறியிருந்தாலும், தமது பிரதான திட்டமான மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றுவிட்டதால், இப்போது அதை பெரிதாக்க விரும்பாது.
ஆரம்பத்தில்கூட, இந்தியா அமைதியாக இருந்தமைக்கு சிலவேளைகளில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டால், அவருடன் இணங்கி செயற்படவேண்டும் என்ற முன்னெச்சரிக்கையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதனால், எதிர் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாதிருந்திருக்கலாம்.
இலங்கையின் புதிய அரசாங்கமும் தமது வெற்றிக்கு அடித்தளமிட்டதென்பதால், அடக்கியே வாசிக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட, தன்னை ‘றோ’ தோற்கடித்ததென்ற குற்றச்சாட்டை சுமத்தினால், ஒருபோதும் தன்னை இந்தியாவோ, ஏனைய நாடுகளோ ஆதரிக்காதென்பதை அறிவார்.
எனவே, இப்போதைக்கு எந்தத் தரப்பினருமே ‘றோ’ விவகாரத்தை தூக்கிப்பிடிக்கத் தயாரில்லை. இது இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு சாதகமான விடயம்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக ‘றோ‘ வியூகம் வகுத்திருந்தாலும் சரி, வகுக்காதிருந்தாலும் சரி அதனைச் செய்துமுடித்தது இலங்கை மக்கள்; என்பதை மறுக்கமுடியாது.
-கே.சஞ்சயன்-