ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வடக்கில் இருந்து இது வரையில் இராணுவக் குறைப்புக்களோ அல்லது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தவொரு செயற்பாடுமோ இடம்பெறவில்லை.

இலங்கையைப் பொறுத்த வரையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் இருக்கின்றது. ஆனால் ஒரு சிலர் தெரிவிக்கும் வகையில் உள்நாட்டில் ஒரு பகுதியில் மட்டும் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்பது பொய்யானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான கருத்தாகும்.

இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தலைதூக்கும் எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை. புலம்பெயர் அமைப்புக்களும் ஒரு சில இயக்கங்களும் சர்வதேச அளவில் எதை வேண்டுமென்றாலும் செய்ய முடியும்.

ஆனால் அவர்களினால் இலங்கைக்குள் எதையுமே செய்ய முடியாது. ஆனால் வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதில் தவறிழைக்கும் போது நாட்டில் பிரச்சினைகளுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதே உண்மை. யுத்தம் இடம்பெற்ற போது வடக்கில் இருந்த தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறை யாடப்பட்டன?

வாகனங்கள், வீடுகள், நகை, பணம் என அனைத் தையும் விடுத்து ஒரு சிறிய கைப்பையுடன் அப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்தமை நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். வடக்கில் பொதுமக்களின் சொத்துக்கள் யாரால் சூறையாடப்பட்டன.

அவை இன்று எங்கிருக்கின்றன? யார் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரிய உடமைகளை மீண்டும் அப் பகுதி மக்களுக்கே ஒப்படைக்க வேண்டும்.

யுத்தம் இடம்பெற்ற காரணத்திற்காக வடக்கில் பொதுமக்களின் சொத்துக்களை யாரும் உரிமை கொண்டாடவோ அல்லது அபகரிக்கவோ அதிகாரமில்லை.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் என்பது வேறு? பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பது என்பது வேறு. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல் வடக்கில் யுத்த கால கட்டத்தில் இராணுவம் அபகரித்த பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வடக்கில் இராணுவ பாதுகாப்பு அவசியம்.

இது வடக்கிற்கு மட்டும் அல்ல நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியமானது. ஆனால் வடக்கில் மட்டுமே பாதுகாப்பு அவசியம் என்ற கருத்தினை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இன்று வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளில் இராணுவ முகாம்களும் இராணுவ விளையாட்டு மைதானங்களும் ஹோட்டல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை உடனடியாக அகற்றி உரிய நிலங்களை சொந்தமான மக்களுக்கு வழங்க வேண்டும். வடக்கில் தேவைக்கு அதிகமாக இருக்கும் இராணுவத்தினரையும் இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டும்.

பொது மக்கள் விவசாயம் செய்யும் நிலங்களில் இராணுவத்தினருக்கு வேலை இல்லை. இராணுவம் விவசாயம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவம் என்ன செய்ய வேண்டுமோ அந்த கடமையினை செய்ய வேண்டும். எனவே வடக்கில் பொதுமக்களின் காணிகளை சூறையாடி கட்டப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றி அவ் இடங்களை மீண்டும் உரிய மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல் அரசியல் கைதிகள் விடயத்தில் இனிமேலும் அமைதி காப்பது அர்த்தமற்ற செயலாகும். போர்க்கால சூழலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் மற்றும் சாதாரண மக்கள் இன்றும் காரணமின்றி தடுப்புக் காவலில் உள்ளனர்.

இவர்கள் தொடர்பில்  தகவல்களை சேகரித்து இவர்களின் விடுதலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். குற்றம் செய்தோர் யார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டோர் யார் என்பது தொடர்பில் அறிக்கையினை தயாரிக்க தேசிய அரசின் மூலம் வலியுறுத்தியுள்ளோம். நாட்டின் தேசிய பாதுகாப்பில் எம் அனைவருக்கும் அக்கறை உள்ளது.

ஏன் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் மிகவும் கவனமாகவே செயற்படுகின்றது.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட தேசிய பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து காணிப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனவே இன்று யாரும் பிரிவினைவாதக் கொள்கையில் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது. இனவாதம் பிரிவினை வாதம் பேசியும் இம்முறை மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் தேசிய நிறைவேற்று சபையில் நாம் இக்காரணங்கள் தொடர்பில் பேசியுள்ளோம். வடக்கு கிழக்கு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய சாதாரண தன்மைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

நூறு நாட்கள் வேலை திட்டத்தில் இயன்றளவு மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜே.வி.பி. முயற்சிகளை எடுக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version