ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி கண்டதையடுத்து, கடந்த ஆட்சியின் கோரமுகங்கள் படிப்படியாக அனைத்துத் தரப்பினராலும் வெளிக்கொணரப்பட்டு வருகின்றன.
படுகொலைகளில் தொடங்கி, ஊழல்கள், மோசடிகள் என்று சட்டத்துக்கு முரணான எல்லா கைங்கரியங்களிலும், முன்னைய ஆட்சி கைதேர்ந்திருந்தது என்பது இப்போது மெல்ல மெல்ல வெளிச்சமாகி வருகிறது.
கடைசி வரை மஹிந்த ராஜபக்ஷவைத் துதிபாடிக் கொண்டிருந்தவர்கள் மட்டுமன்றி, அவரையே கடவுளாகவும், கடவுளுக்கு அடுத்ததாகவும் நினைத்துக் கொண்டவர்களும் கூட, இப்போது தமது நிலையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஏனென்றால், கடந்த ஆட்சியின் கோரமுகம் அத்தகையது.
தமிழ் மக்களுக்கு மட்டும் தான், முன்னைய ஆட்சி அநீதியை இழைத்தது என்பது தவறான கருத்து. முன்னைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தடையாக இருந்தவர்கள் எவராயிருந்தாலும், இன, மத,மொழி வேறுபாடுகளின்றி துடைத்தெறியப்பட்டனர்.
ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் கூட படுகொலைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் பல கொலைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இவை குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் புதிய அரசாங்கம் கூறுகிறது. இத்தகைய நிலையில், மீண்டும் ராஜபக் ஷ யுகம் ஒன்று உருவாகாமல் தடுப்பதன் அவசியம் குறித்து இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.
இது தனியே உள்நாட்டு முயற்சியாக மட்டுமன்றி, ஒரு சர்வதேச முயற்சியாகவும் அமைய வேண்டும் என்ற கருத்து, காணப்படுகிறது.
இப்போதும் கூட மஹிந்த ராஜபக்ஷ நல்லவர்தான், அவரைச் சுற்றியிருந்த குடும்பத்தினர் தான் எல்லாவற்றையும் கெடுத்து விட்டனர் என்ற கருத்து அவரது முன்னைய – இப்போதைய சகாக்கள் பலரிடமும் உள்ளது.
இப்போது வாசுதேவ நாணயக்கார கூட அவரை நல்லவர் என்றுதான் கூறுகிறார்.
ஆனால், மஹிந்த ராஜபக் ஷவை இன்னமும் நல்லவர் என்று நம்புகின்றவர்கள் கூட, அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் நல்லவர்களாக இருந்தனர் என்று சான்று கொடுக்கத் தயாராக இல்லை.
மஹிந்தவின் ஒன்பது ஆண்டு ஆட்சிக்காலத்தில், அவரது குடும்பத்தினரே எல்லாமாகவும் இருந்தனர். முடிவுகளை எடுப்பதும் அவர்களே, அதிகாரங்களைப் பயன்படுத்துவதும் அவர்களே, வரவு-– செலவுத் திட்டத்தை பெரும்பாலும் பங்கு போட்டுக் கொள்வதுவும் அவர்களே, என்று எல்லாவற்றையுமே அவர்களே தீர்மானித்தனர்.
இதனால் தான் மஹிந்த ராஜபக் ஷவை சுற்றியிருந்த அவரது குடும்பத்தினரே அவரது பலமாகத் திகழ்ந்தனர்.
அதனால் தான், 2006ஆம் ஆண்டிலேயே கோத்தாபய ராஜபக் ஷவுக்கு புலிகள் குறிவைத்து தாக்கியிருந்தனர் போலும்.
மஹிந்த ராஜபக்ஷவைப் பலவீனப்படுத்துவதற்கு அவரது சகோதரர்களை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற கருத்தே காணப்பட்டது.
ஆனாலும், ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் எல்லோரும் அருகில் இருந்த போதிலும், மஹிந்த ராஜபக் ஷவின் தோல்வியை தடுக்க முடியவில்லை.
அவர்களின் கண் முன்பாகவே அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இப்போது, மஹிந்த ராஜபக்ஷ அடிபட்ட புலியாக பதுங்கிக் கிடந்தாலும், அவரால் இனி எழவே முடியாது என்று ஒரு போதும் கூற முடியாது.
நாட்டின் அதிகாரத்திலும் அவர் இல்லை, கட்சியின் அதிகாரத்திலும் அவர் இல்லை- பிறகு எப்படி அவரால் மீண்டெழ முடியும் என்று ஒருபோதும் கருதிவிட முடியாது.
மஹிந்த ராஜபக் ஷவின் வீழ்ச்சியால் பலவீனப்பட்டுப் போயுள்ள சிங்கள இனவாத சக்திகளும் சரி, முற்போக்கு சக்திகளும் சரி அவரை வைத்து தாம் மீண்டும் எழுந்து நிற்கவே முயற்சிக்கின்றன.
மஹிந்த ராஜபக் ஷவை முன்னிலைப்படுத்தி, புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கப் போவதான செய்திகளையும் ஊடகங்களில் கவனிக்க முடிகிறது.
மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அரசியலுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்ற கருத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு ஈடாக, அவரை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களும் இருக்கிறார்கள்.
எனவே, மஹிந்த ராஜபக் ஷ வின் இப்போதைய வீழ்ச்சியை நிரந்தரமானதாக எவரும் அவ்வளவு இலகுவாக தப்புக்கணக்குப் போட்டு விடக்கூடாது.
இன்னொரு விடயமும் உள்ளது, மஹிந்த ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் எந்தளவு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ, அதுவும், அவர்களை வீறுடன் எழுந்திருக்கச் செய்து விடக் கூடும்.
கண்டியில் வைத்து தனது வீடு சோதனையிடப்பட்டது குறித்து அவர் வெளியிட்ட கருத்து, அத்தகைய வாய்ப்புகளை நிராகரிக்க இடமளிக்கவில்லை.
எனவே, இப்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, இப்போதைய மாற்றத்துக்குத் துணை நின்ற சக்திகள் அனைத்துமே, மஹிந்த ராஜபக் ஷவின் மீள்வருகையை கனவாக நினைத்துக் கொள்ள முடியாது.
ஆனால், அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை அனுமானிப்பது எவராலும் கடினமான காரியமல்ல. அத்தகைய மீள்வருகையை சர்வதேச சமூகமும் விரும்பாது என்பதை, பெரும்பாலான நாடுகளின் கருத்துகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இப்போதைய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தாமல், பாதுகாப்பது மேற்குலகினதும், இந்தியாவினதும் அக்கறைக்குரிய விடயமாகவே உள்ளது.
இதனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் சற்று மாறுபட்டதாக இருக்கலாம் என்றே தெரிகிறது.
அமெரிக்க இராஜதந்திரிகள், பேராசிரியர்கள் சிலர் வெளியிட்டிருக்கும் கருத்துகள், தற்போதைய அரசாங்கம் பலவீனப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
அதற்குக் காரணம், இலங்கையில் கடந்த ஒரு தசாப்த காலத்தில், ஏற்பட்டுள்ள மோசமான மனித உரிமைகள் நிலை, உள்ளிட்ட சீரழிவுகளில் இருந்து, முன்னேற்றம் காண இந்த அரசாங்கம் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கருத்து அவர்களிடம் காணப்படுகிறது.
ஜனநாயகம், நல்லாட்சி என்பனவற்றை ஏற்படுத்துவதற்கு இப்போதைய அரசாங்கத்தை தம்மால் (மேற்குலகினால்) வளைக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
எனவே எப்படியாவது, மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் இலங்கை அரசியலில் தலையெடுக்காத வகையில், அவர்கள் தமது நகர்வுகளை முன் கொண்டு செல்லக் கூடும்.
இந்தக் கட்டத்தில், இலங்கையின் இப்போதைய அரசாங்கத்துக்கும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கும், முரண்நிலை வரக்கூடிய ஒரே விடயம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடத்தும் விசாரணையாகத் தான் இருக்க முடியும்.
இந்த விசாரணைக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஒத்துழைக்கவும் முடியாது, அடுத்த கட்டத்தில், குற்றவாளிகள் என்று முன்னிலைப்படுத்தப்படுவோரை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும் முடியாது.
ஏனென்றால், இது இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும், இப்போதைய அரசாங்கத்தின் கூட்டாளிகள் கூட அதனை ஏற்கமாட்டார்கள்.
ஏற்கனவே யாரையும் சர்வதேச விசாரணைக்கு ஒப்படைக்கமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்துத் தான் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் போது கூட, ரணில் விக்கிரமசிங்கவிடம் அத்தகைய வாக்குறுதியை பெற்றுக் கொண்டு தான் அமைதியாக வெளியேறிச் சென்றிருந்தார்.
எனவே, சர்வதேச விசாரணைக்கு மஹிந்த ராஜபக் ஷவையோ அவரது குடும்பத்தினரையோ அரசாங்கத்தினால் கையளிக்க முடியாது.
அதேவேளை, அமெரிக்காவினாலும், ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட விசாரணையை இடைநிறுத்தவோ அல்லது அப்படியே தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போடவோ முடியாது.
மஹிந்த ராஜபக் ஷவை எப்போதும் மிரட்டுகின்ற ஒரு ஆயுதமாக அதுவே அமெரிக்காவுக்குப் பயன்படப் போகிறது.
எனவே, ஐ.நா. விசாரணை அறிக்கையை அவ்வளவு சுலபத்தில் அமெரிக்கா கைவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதேவேளை, ஐ.நா. விசாரணை, இலங்கையின் புதிய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதையும், இலங்கை அரசுக்கும் தனக்கும் இடையிலான உறவைச் சீர்குலைப்பதையும் அமெரிக்கா அனுமதிக்காது.
இதனால் தான், 1992ஆம் ஆண்டு தொடக்கம் 1995ஆம் ஆண்டு வரை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய ரெரெசிற்றா கியூரி ஸ்காபர் அம்மையார், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதை சில ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதற்குக் காரணம், புதிய அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்ற ஒரே காரணம் தான்.
அதுபோலவே, அமெரிக்க சட்டப் பேராசிரியரான, ரியன் கோட்மனும் , இதனை வலியுறுத்தியிருக்கிறார்.
அதாவது, இலங்கை அரசாங்கத்தையும் பாதுகாத்து, அதேநேரம், போர்க்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையையும் மேற்கொண்டு, எவ்வாறு இலங்கைக்கு உதவ முடியும் என்று அவர் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
அமெரிக்க குடியுரிமை பெற்றவரான கோத்தபாய ராஜபக்ஷ, போர்க்குற்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பது அவரது யோசனையாக உள்ளது.
1996ஆம் ஆண்டில் அமெரிக்க போர்க்குற்ற சட்டங்களின் படி, அமெரிக்க பிரஜை ஒருவர் போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்கப் பிரஜை ஒருவரினால் போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருந்தாலும் அதற்கெதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும்.
அதற்கமைய, அமெரிக்க குடியுரிமை கொண்ட கோத்தாபய ராஜபக் ஷ மீது அமெரிக்கா வழக்குத் தொடுக்கலாம்.
அமெரிக்கப் பிரஜை என்ற வகையில், அவர் மீதான நடவடிக்கையை யாருமே, இலங்கை மீதான அத்துமீறலாகவும் கருத முடியாது.
இலங்கை அரசாங்கம் கோத்தாபய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்காது. அதனால் அமெரிக்கா அந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், போர்க்குற்றங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவும் காண்பிக்க முடியும்.
அதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கத்தையும் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதே பேராசிரியர் ரியன் கோட்மனின் கருத்தாக உள்ளது.
அவற்றை விட, இன்னொரு பக்கத்தில், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் எழுந்து நிற்பதையும் அதன் மூலம் தடுத்து நிறுத்த முடியும்.
முன்னர் அவருக்குப் பலத்தைக் கொடுத்தவர்களை அவரிடம் இருந்து பிரித்தெடுக்கும் தந்திரமே இது.
இதனை நகங்கள் பிடுங்கப்பட்ட சிங்கத்துடனோ, பற்கள் பிடுங்கப்பட்ட பாம்புடனோ ஒப்பிடலாம்.
அதாவது எது அவருக்குப் பலத்தைக் கொடுக்கிறதோ அதனை இல்லாமல் செய்து விடுவது.
கோத்தாபய ராஜபக் ஷ இன்னமும் வெளிநாடு செல்லாமல் இருப்பதற்குக் காரணம், அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்த அச்சம் தான்.
அவர் இலங்கைக்குள் இருக்கும் வரை தான் பாதுகாப்பு.
வெளியே சென்றால், எந்தவேளையிலும் சிக்கிக் கொள்ள நேரலாம்.
மஹிந்த ராஜபக்ஷ கடைசிநேரத்தில், அலரி மாளிகையை விட்டு வெளியேறிய போது கோத்தாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குறித்தே அதிகம் கவலைப்பட்டதாக அவருக்கு அருகில் கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.30 மணி தொடக்கம், 6.30 மணி வரை இருந்தவரான உதய கம்மன்பில கூறியிருக்கிறார்.
அவர் கோத்தாபயவின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொண்டிருந்ததற்கு ஒரு காரணம் அமெரிக்கா என்றால், இரண்டாவது காரணம், தனது பலம் பறிக்கப்பட்டு விடும் என்பதேயாகும்.
-ஹரிகரன்-