அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள தன்னிலை அறிக்கையில் கூறியுள்ளார்.

அதேபோல தேர்தலுக்கு பின்னர் தனது குடும்பத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விஷம பிரசாரங்களும் ஆதாரங்களற்றவை என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

150113115920_mahinda_rajapaksha_election_coup_512x288_bbc_nocredit

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், தான் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் அலரி மாளிகையிலிருந்து வெளியேறியதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டது”

அலரி மாளிகையிலுள்ள சில பகுதிகளை ஊடகங்களுக்கு காண்பித்து தானும், தனது குடும்பத்தாரும் அரச செலவில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததாக கூறி, மக்களை ஏமாற்றும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அவ்வசதிகள் அனைத்தும் 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டுக்காக அரச தலைவர்கள் மற்றும் பிற நாட்டு பிரதிநிதிகளின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையிலிருந்து வெளியேறிய போது எடுத்த படம்

அத்தோடு தனது மனைவி கருவுலத்திலிருந்து 100 கிலோ பெறுமதியான தங்கத்தை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டு கேலி கூத்தானது என விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருவுலத்திலுள்ள தங்கத்தை அந்நிறுவனத்தின் செயலாளர் நினைத்தால் கூட இரகசியமாக விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தனது படத்துடன் தயாரிக்கப்பட்ட கடிகாரங்கள், தேநீர் கோப்பைகள் ஆகிவை தொடர்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீதும், தனது குடும்பத்தார் மீதும் அபாண்டமானக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என்று அவர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள தன்னிலை விளக்க அறிக்கையில் கூறியுள்ளார்.

தனது தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, பெரிய அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, அவையும் முறையான சட்ட வழிமுறைகளுக்கு அமையவே செயல்படுத்தப்பட்டன என்று அவரது அறிக்கை கூறுகிறது.

எனவே தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களது கவனத்தை திசை திருப்பும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version