கிளிநொச்சி: சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு தாம் இருக்க வேண்டும் என்று இலங்கையின் கிளிநொச்சியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கேபி என்ற குமரன் குமரன் பத்மநாதன் உருக்கமாக கூறியுள்ளார்.

26-1422273762-kumaran-pathmanathan-kp-600தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பெற்றோரை போரில் இழந்த குழந்தைகளுக்காக செஞ்சோலை உள்ளிட்ட பல இல்லங்கள் நடத்தப்பட்டன. போர் முடிவடைந்த நிலையில் கேபி என்ற குமரன் பத்மநாதன் செஞ்சோலை, பாரதி ஆகிய இல்லங்களை நடத்தி வருகிறார்.

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவில் உள்ள இந்த இல்லங்களின் 2வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கேபி பேசியதாவது:

இந்த இல்லத்திற்கு வரும்போது சிறுவர்களின் மழலைச் சிரிப்பும், மகிழ்ச்சியும் பெருமையாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை சிறுவர்களிடம் உருவாக்க எனக்கு 2ஆண்டு காலம் ஆகியுள்ளது.

இவர்கள் கல்வியில் குறிப்பிட்டளவு சாதனை படைத்தாலும், ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே அரவணைத்து அவர்களது உள்ளங்களை திறந்து மகிழ்ச்சியை உருவாக்க என்னாலான முயற்சியை செய்திருக்கிறேன்.

சிறுவர்கள் தமது துன்பங்களையும், தடைகளையும் கடந்து வந்துள்ளனர். ஒவ்வொரு குழந்தையின் மகிழ்ச்சியான மாற்றங்களை காணும்போது எமது மனம் மகிழ்கிறது.

எனது எதிர்கால வாழ்க்கை தொடர்பாக பலரும் என்னை கேட்டபோது “நான் இறக்கும் வரை இந்த குழந்தைகளுடன் வாழவேண்டும்” என்ற எனது ஆசையை, கனவை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

இவ்வாறு கேபி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறார் இல்லங்களைச் சேர்ந்த சிறுமியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

Share.
Leave A Reply

Exit mobile version