நெல்லை: சாதியை காரணம் காட்டி காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் மறுத்ததால் மனவேதனை அடைந்த கப்பல்படை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் தமிழ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜா. இவர் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவருடைய மகன் தங்கத்துரை (29). இவர் மும்பையில், இந்திய கப்பல் படையில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் அதிகாரியாக பணியாற்றினார். சில நாட்களுக்கு முன்பு தங்கத்துரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 26ஆம் தேதி நள்ளிரவில் திடீரென தங்கத்துரை தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் தங்கத்துரை, காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் அவரது அறையில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு தங்கத்துரை, தன்னுடைய தந்தைக்கு 17 பக்கத்தில் எழுதிய கடிதத்தையும், பெருமாள்புரம் காவல்துறை ஆய்வாளருக்கு எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர்.
இந்த கடிதங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டு இருந்தது. அந்த கடிதங்களில் தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெருமாள்புரம் காவல்துறை ஆய்வாளருக்கு எழுதிய கடிதத்தில், “நான் மராட்டிய பெண் ஒருவரை காதலித்தேன். அந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வேறு சாதியைச் சேர்ந்தவருக்கு பெண்ணை காதல் திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்.
இதனால், காதலியை திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நான் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறேன்.
எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் பெற்றோர் உள்பட யாரையும் இந்த தற்கொலை சம்பந்தமாக நீங்கள் அழைத்து விசாரணை நடத்தக்கூடாது” என்று கூறப்பட்டிருந்தது.
தந்தைக்கு எழுதிய கடிதத்தில், “என்னை நல்லமுறையில் வளர்த்து படிக்க வைத்தீர்கள். என்னை வேலைக்கும் அனுப்பினீர்கள். நான் ஒரு பெண்ணை காதலித்தேன்.
அந்த பெண்ணின் சாதி வழக்கப்படி அடுத்த சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ய முடியாது. இதனால் என்னை அந்த பெண் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் தற்போது ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அந்த பெண்ணும் நானும் காதலித்த போது பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உள்ளோம். ஒன்றாக இருந்தோம். அப்போது பல்வேறு சம்பவங்கள் நடந்து உள்ளன.
அந்த நேரத்தில் அந்த பெண் அப்படி நடந்து கொண்டாள். இதனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை. நான் உயிருக்கு உயிராக காதலித்த அந்த பெண் எனக்கு கிடைக்காததால், நான் வாழ விரும்பவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த குழந்தையை தொட்டில் கட்டி காட்டுப்பகுதியில் போட்டு சென்ற தாய்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ரயில்வே கேட் அருகிலிருந்து குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டது. அப்போது அந்த இடத்தில் பேருந்துக்காக நின்ற பொதுமக்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.
முட்புதர்களால் மூடியிருந்த ஒரு மரத்தின் கிளையில், சேலையில் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. அதில், தொப்புள் கொடி காயாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக 108 மருத்துவ உதவி மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைதொடர்ந்து, தொட்டிலில் இருந்த குழந்தையை ஆம்புலன்ஸ் உதவியுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப்பின், அந்தக் குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தொட்டில் கட்டி குழந்தையை போட்டுவிட்டு சென்றது யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.