சேலம் மத்தியச் சிறையில் அட்டாக்கின் ஆட்கள் சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள். விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் அங்கு ராஜ உபசாரத்தில் இருந்தார்கள்.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு பிறந்த நாள் வரவே, கேக் வெட்டி கொண்டாடியதாக அப்போது கூறப்பட்டது.
உள்ளேயிருந்து அட்டாக்குடன் ஆலோசனைகளை செல்போனில் விஜயபாண்டி கேட்டுக்கொண்டிருந்ததாக தகவல் பரவியது. பிறகு இதுபற்றி சேலம் போலீஸில் வழக்கு பதிவானது.
இன்னொரு பக்கம் அட்டாக்கைத் தவிர்த்து கொலை தொடர்பாக முக்கிய தி.மு.க. பிரமுகர்களிடமும், பொட்டு சுரேஷ் நண்பர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பொட்டு சுரேஷின் நட்பு வளையத்தில் இருந்த மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், சினிமா தியேட்டர் அதிபர் கல்யாணி, ரஜினி மன்ற சேகர் உள்ளிட்டவர்களிடமும், மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர் கோ.தளபதி, பி.எம்.மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோரிடம் மீண்டும் அடுத்த கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே அட்டாக் பாண்டி மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்று தன்னுடைய வழக்கறிஞர் மூலம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துகொண்டிருந்தார்.
pottu suresh
‘எனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பும் இல்லை என்று இவ்வழக்கில் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
ஆனால், போலீஸ் அதிகாரிகளின் தூண்டுதல் பேரில் இவ்வழக்கில் என் பெயரைச் சேர்த்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் என் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
ஆனால், மதுரை உயர்நீதிமன்றம் குண்டர் சட்டத்தில் இருந்து என்னை விடுவித்தது. இப்படி பொய்யான வழக்குகளை ஜோடித்து என்கவுண்டரில் என்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.
எனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது. அதற்காக சிகிச்சை பெற வேண்டி உள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் அட்டாக் பாண்டி தெரிவித்திருந்தார். ஆனால், நீதிபதி அவர் மனுவை தள்ளுபடி செய்தார்.
அதன் பின் அட்டாக்கின் மனைவி, சகோதரர், மாமனார் என்று ஒரு ஆளை விடாமல் விசாரணை என்ற பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் தூக்கி வந்து டார்ச்சர் கொடுத்தது. அப்படி இருந்தும் அவர்களிடம் இருந்து அட்டாக்கின் இடத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை.
இன்னொரு பக்கம் அட்டாக் இருக்கும் இடம் தெரிந்தே கைது செய்யாமல் போலீஸ் காலம் தாழ்த்துகிறது, அதற்கு காரணம் பொட்டு மீது காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் வெறுப்புதான் என்ற தகவல் பரவியது.
தி.மு.க. ஆட்சி நடந்த 2006 – 2011 காலகட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல, தென்மாவட்டங்களில் பணியாற்றிய பல போலீஸ் உயர் அதிகாரிகளை ஒருமையில் அழைத்து, நிற்க வைத்து கேவலமாகப் பேசுவதை தன் அன்றாட நடவடிக்கையாக பொட்டு வைத்திருந்தாராம்.
மோசமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, நல்ல அதிகாரிகள் பழிவாங்கப்படுதல் என, பல கொடுமைகள் நடந்ததாம். அந்தக் காலகட்டத்தில் தென்மண்டல போலீஸ் ஐஜி போலவே பொட்டு நடந்துகொண்டதாக இப்போதும் காவல்துறையினர் சொல்கிறார்கள்.
அதை மனதில் வைத்துதான் போலீஸ் அசால்டாக கேஸை டீல் செய்வதாகச் சொல்லப்பட்டது. காவல்துறை அதிகாரிகளால் அது மறுக்கப்பட்டது.
attack 20pandi
பொட்டு கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் அவர் நிலமோசடி வழக்கில் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். அப்போது, தி.மு.க. ஆட்சியின்போது அவருக்கு சலாம் போட்ட போலீஸ் அதிகாரிகளால் அவருக்கு செம கவனிப்பு நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
பாளையங்கோட்டை சிறையில் இருந்த அவரை கோர்ட்டுக்கு அழைத்து வரும் வழியில், ‘போலீஸ்னா என்ன, அவர்கள் அதிகாரம் எப்படிப்பட்டது” என்பதை அப்போது மதுரையில் இருந்த முக்கிய அதிகாரி நடத்திக்காட்டினாராம்.
அப்போது பொட்டு சுரேஷ் அழுது, அந்த அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சினாராம். அதற்குப் பின்தான் பொட்டு ரொம்பவும் அமைதியாகி, அ.தி.மு.க.வில் இணைவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.
தன்னை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக அழகிரி பற்றி அனைத்தையும் சொல்ல ஒப்புக்கொண்டதாக அப்போது கூறப்பட்டது. அதற்குள் அவர் கொல்லப்பட்டார்.
தி.மு.க. தலைமையும் இவ்வழக்கு பற்றி கருத்து சொல்லவில்லை. பொட்டுவின் பல கோடிக்கணக்கான பணம், பல தொழில்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
அவர் இறந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் அப்படியே அமுக்கிக்கொண்டார்கள். அவர் உயிரோடு இருந்தபோது வாழ்த்தி போஸ்டர் அடித்தவர்கள் எல்லோரும், அவர் இறந்ததுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கூட ஒட்டவில்லை.
ஜனவரி 30 ஆம் தேதி அழகிரியின் பிறந்தநாளுக்கு மதுரை நகரெங்கும் விழாக்கோலமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் அழகிரியை வாழ்த்துகிற போர்டுகள்தான். ஆனால், மறுநாள் பொட்டுவின் நினைவு தினத்தை பற்றி யாரும் கண்டுகொண்டதில்லை.
கொலைகாரர்கள் யார் என்பதை இதுவரை போலீஸால் யூகிக்க முடியாத ராமஜெயம் கொலை வழக்கை விரைந்து நடத்த அவர் மனைவி, மாஜி அமைச்சர் நேரு ஆகியோர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
உயர்நீதி மன்றத்தின் சட்ட உதவியையும் நாடுகிறார்கள். அந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தி.மு.க தலைமையும் ஆர்வம் காட்டுகிறது. ஆனால், பொட்டு வழக்கில்?
இந்த நிலையில்தான் எல்லோராலும் கைவிடப்பட்ட பொட்டுவின் குடும்பத்தினர், வருகிற நினைவு தினத்தன்று சில முடிவுகளை எடுக்க உள்ளார்களாம். அது என்னவென்று விசாரித்தோம்….
தொடரும்…
– செ.சல்மான்