திறைசேரியின்  பணத்தைக்கொண்டு ஜனாதிபதிக்கென கொள்வனவு செய்யப்படவிருந்த தனியானதொரு விமானத்தை தடுத்து நிறுத்தியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த ஆட்சியாளர்கள் மக்களின் பணத்தை வீணாக செலவு செய்வதற்கு எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப் பட்டிருப்பதாக தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொள்வனவு செய்ய இருந்த சொகுசு விமானத்தின் பெறுமதி 16 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் உள்ள அதிசொகுசு வசதிகள் பற்றிக் கூறத்தேவையில்லை.

ஜனாதிபதி ஒருவர் பயணிப்பதற்கு உத்தியோகபூர்வ விமானமாக இது அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யப்படவிருந்தது.

இது தொடர்பில் நாம் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி இதனை நிறுத்தியிருப்பதாக ஜனாதிபதி கூறினார்.

இதற்குப் பதிலாக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்காவுக்குத் தேவையான மேலதிக விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் பிராந்தியங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் உணவு மற்றும் குடி வகைகளுக்கான செலவீனம் மட்டும் ஒரு கோடியே 5.7 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் எரிபொருள் செலவீனம் இதனைவிட பன்மடங்கு அதிகமாக வுள்ளது. எரிபொருள் செலவீனம் குறித்து தகவல்கள் திரடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version