கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.ஏ. சிறிசேனவுக்காக அரச ஊடகங்கள் சுமார் இரண்டு மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போன்ற தோற்றத்தை கொண்ட இந்த ஆர்.ஏ. சிறிசேன, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச நிறுவன சூழலில் தங்கியிருந்தாகவும் கூறப்படுகிறது.
தனியான பயிற்சியாளர் இவருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசுவது போலவும் அவரது நடை உடை பாவனை பற்றி பயிற்சிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவற்றுக்கான சகல செலவுகளையும் அரச ஊடகங்களே ஏற்றிருந்தன.. இதனை தவிர ஆர்.ஏ. சிறிசேன நிதியம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த நிதியம் போலியானது எனவும் தெரியவந்துள்ளது. ஒய்வுபெற்ற கிராம உத்தியோகஸ்தரான ஆர்.ஏ. சிறிசேன வீரகெட்டிய மெதமுலன பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பல மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிக்க புதிய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஆர். ஏ. சிறிசேனவை அப்போதைய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன போன்று வேடம் தரிக்கச் செய்து தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றச் செய்வதற்காக 28 நாட்களுக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் தங்க வைப்பதற்கென அப்போதைய ரூபவாஹினி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவருடன் தொலைக்காட்சியில் தோன்ற இருந்த ஏனைய நபர்களுக்கும் இலங்கை மன்றக் கல்லூரியில் தங்குவதற்கு முன்னாள் பணிப்பாளர் நாயகத்தின் தலையீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாகவும் தெரியவந்துள்ளது.
தங்கும் செலவுகளுக்காக ரூபவாஹினி முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகேயின் பெயரில் 28 நாள் கட்டணமாக ரூபா 2,55,897.60 தொகைக்கு வவுச்சர் அனுப்பப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகம் இந்தச் சட்டவிரோத கொடுப்பனவை இடைநிறுத்தி வைத் துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடைபெற்ற மோசடிகள், ஊழல்கள் தொடர்பாக பல நபர்களிடமிருந்தும் புதிய நிர்வாகத்துக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இத்தகவல்கள் இரகசியமாக வைத்துப் பேணப்படும். முறைப்பாடுகள் தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது