கனவு… ஓர் அற்புத உணர்வு! இமை மூடலில், ஏழையைப் பணக்காரனாக்கி ஆனந்தம் கொடுக்கும். பணக்காரனின் செல்வத்தை தொலைக்க வைத்து அதிர்ச்சி கொடுக்கும். பழைய காதலியின் முகத்தை ஓர் நள்ளிரவில் கொண்டு வந்து நிறுத்தும். துரத்தும் பாம்பிடமிருந்து தீராத பாதையில் ஓடச் செய்யும்! இந்தக் கனவுணர்வின் நிஜங்கள் அறிவீர்களா..? சுவாரஸ்யமானவை..!
*ஆயுளில் ஆறு வருடம் கனவுக்கு!
ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், விலங்குகள் என அனைவருக்கும் கனவு வரும். ஒரே இரவில் பல கனவுகள் வரலாம். ஒரு கனவு 5 – 20 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அந்தக் கணிப்பின் படி, ஒரு மனிதன் தன் ஆயுளில் கிட்டத்தட்ட 6 வருடங்கள் கனவில் கழிக்கிறான் என்கிறது ஓர் ஆய்வு!
* பார்வையற்றவர்களின் கனவு!
பிறப்பிலேயே பார்வையற்றவர்களுக்கும் கனவு உடைமையே! காட்சிகளாக நமக்கு உணர்த்தப்படும் தகவல்கள், அவர்களுக்கு கனவிலும் ஒலி, தொடுதல், சுவை, நறுமணம் போன்ற குறியீடுகளால் உணர்த்தப்படும்!
* கனவுகள் ஏன் நினைவில் இருப்பதில்லை..?
‘எனக்கெல்லாம் கனவே வராதுப்பா…’ என்பவர்களுக்கு, அது நினைவில் இருக்காது என்பதுதான் உண்மை. 95 சதவீதம் கனவுகள் எழுவதற்குள் மறக்கக் கூடியவை.
அதாவது, கனவு கண்டது தெரியும், என்ன கனவு என்பது மறந்துபோயிருக்கும். மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நினைவுகளைப் பதியும் மூளையின் செயல் இயக்கமற்று இருப்பதாலேயே கனவுகள் நமக்கு நினைவில் இருப்பதில்லை. அதனாலேயே… அது கனவு!
80 சதவிகிதத்தினர் வண்ணங்களில் கனவு காண்கிறார்கள், 20 சதவிகிதத்தினர் கருப்பு, வெள்ளையில் கனவு காண்கிறார்கள். அதில் சிலர், கருப்பு, வெள்ளையில் மட்டுமே கனவு காண்கிறார்கள் என்பதும் ஆச்சர்யம்!
* ஆண்களின் கனவில்..!
ஆண்களின் கனவு கோபங்கள் நிரம்பியது. பெண்களின் கனவு கொண்டாட்டமானது. சில நிமிடங்களே நீடிக்கும் ஆண்களின் கனவை விட பெண்களின் கனவு நீளமானது என்பதுடன், உறவுகள், நட்புகள், குழந்தைகள் என நிறைய மனிதர்கள் உலவுவது. ஆண்களின் கனவில் ஆண்களே நிறைய வருவார்கள். பெண்களின் கனவில் ஆண், பெண் சம அளவில் வருகை தருவார்கள்!
* உலகப் பொதுக் கனவுகள்!
மகிழ்ச்சி, வெற்றி, காதல் என்று பல உணர்ச்சிகள் கனவில் வெளிப்பட்டாலும், நெகட்டிவ் உணர்ச்சிகளையே கனவில் அதிகம் காண்போம்.
குறிப்பாக, பயம்! தேசம், மொழி எல்லாம் தாண்டி… உலகில் உள்ள அனைத்து மக்களும் அடிக்கடி காணும் கனவுகள் சில உண்டு. துணை துரோகம் செய்வது, தான் துரத்தப்படுவது, தாக்கப்படுவது, கீழே விழுவது, இயக்கமற்றுப் போவது, தாமதமாக வருவது, பொது இடத்தில் நிர்வாணமாக நிற்பது… இவையெல்லாம் உலகப் பொதுக் கனவுகள்!
ஹேப்பி டிரீமிங்!
– ஜெ.எம்.ஜனனி