காலி, தடல்ல பிரதேசத்தின் மகமுதலி மாவத்தையில் வீடொன்றில் 24 வயதான யுவதி ஒருவர் கோடாரியினால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சந்தமாலி என்ற இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளதுடன் தாயும் சகோதரனும் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த கொலையினை உயிரிழந்த யுவதியின் மாமனாரே செய்துள்ளதாகவும் அவர் கொலையின் பின்னர் கிங்தோட்டை ரயில் பாலத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவருக்கும் 24 வயதான எஸ்.ஜே. சந்தமாலிக்கும் இடையில் அண்மையில் திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந் நிலையில் கணவரின் ஊரான காலிஇதடல்லஇ மகமுதலி மாவத்தையில் உள்ள வீட்டில் சந்தமாலியும் அவளின் 20 வயதான சகோதரன்இ 48 வயதான தாய் ஆகியோர் சகிதம் குடியேறியுள்ளனர்.
இந் நிலையில் கடந்த இரண்டாம் திகதி மாலை சந்தமாலியின் வீட்டாருக்கும் அந்த வீட்டின் அருகே வசித்த மாமனாருக்கும் இடையே சிறு பிள்ளை ஒருவருக்கு ஏசியமை தொடர்பில் பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று அதிகாலை கோடாரியுடன் சந்தமாலியின் வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்தோரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார்.
இதன் போது சந்தமாலி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சகோதரனும் தாயும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலியில் சிகிச்சைப் பெறும் சகோதரனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த கோடாரித் தாக்குதல் கொலையினை அடுத்து சந்தமாலியின் வீட்டின் அருகே பிறிதொரு வீட்டில் வசித்து வந்த மாமனார் கொழும்பு காலி பிரதான ரயில் பாதையில் உள்ள கிங்தோட்டை ரயில் பாலம் அருகே சென்றுள்ளார்.
அங்கு வைத்து தண்டவாளத்தில் தலைவைத்து ஓடும் ரயில் முன் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொலையாளியின் சடலத்தை நேற்று முற்பகல் காலி பொலிஸார் கிங் கங்கையிலிருந்து மீட்டமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.