ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இலங்கை அரசிடமிருந்து விலகி நின்ற நாடுகள் நெருங்கிவரத் தொடங்கியுள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.
கடந்த வாரமும் இந்த வாரமும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கொழும்புக்கு வந்திருந்ததால், பரபரப்பான நிலை காணப்பட்டது.
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக இராஜாங்க அமைச்சரான ஹியூகோ ஸ்வயர் மூன்று நாள் பயணமாக இலங்கை வந்திருந்தார்.
கமலேஷ் சர்மா,ரணில்
அதை அடுத்து, பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா மூன்று நாள் பயணமாக வந்திருந்தார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலும் இரண்டு நாள் பயணமான கொழும்பு வந்திருந்தார்.
இதற்குள்ளாக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புதுடெல்லிக்கும் பிரஷெல்சுக்கும் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்னமும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், கொழும்பு நோக்கிய சர்வதேச கவனம் தீவிரமடைந்துள்ளதையே இந்தப் பயணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக இராஜாங்க அமைச்சரான ஹியூகோ ஸ்வயர், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகிய மூவருமே, ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியிலிருந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தனர்.
அவர்கள் மீண்டும் இங்கு வந்திருந்ததன் அடிப்படை நோக்கம், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிப்பதற்கேயாகும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மேற்குலக நாடுகள் உருவாக்கிய மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு அலையும் ஒரு காரணம்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் அரசுக்கு எதிரான உணர்வு தீவிரமாக பரப்பப்பட்டது. இதனாலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ்பக்ஷ தனது பதவியின் இறுதிக்காலகட்டத்தில் அமெரிக்காவுடன் அதிகளவில் முரண்பட்டிருந்தார்.
ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள், ஐ.தே.க. வினால் இளைஞர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை குழப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாவற்றுக்குமே காரணம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி பற்றிய அச்சமே.
அண்மையில் புதுடெல்லி சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அண்மைய ஆட்சி மாற்றத்தை அரபுலகப் புரட்சியை ஒத்தது என்று கூறியிருந்தார்.
அரபுலகப் புரட்சியில் சமூக வலைத்தளங்கள் எத்தகைய பங்களிப்பை ஆற்றினவோ, அதுபோலவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்துவதிலும் அவை முக்கிய பங்காற்றின.
தம்மை வீழ்த்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முனைப்புடன் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் முன்னரே தெளிவாக உணர்ந்திருந்தன.
அதனாலேயே, மேற்குலகுடனான மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் உறவுகள் கடைசிவரை சீரமைக்கப்பட முடியாததாகவே இருந்தது.
இவ்வாறாக, ஆட்சி மாற்றத்துக்கு ஏதோவொரு வகையில் உந்துதல் கொடுத்த மேற்குலக நாடுகள், இப்போது அதன் விளைவு எத்தகையதாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறது.
ஆட்சி மாற்றத்தின் மூலம் தாம் அடைய நினைத்தவை எந்தக்கட்டத்தில் உள்ளன என்பதை அறிவதிலும் அதற்கு எந்த வகையில் உதவலாம் என்பதை அறிந்துகொள்வதுமே அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதிகளினுடைய பயணத்தின் நோக்கமாகும். பொதுநலவாய பொதுச்செயலர் கமலேஷ் சர்மாவினது வருகையின் நோக்கமும் அதுவேயாகும்.
ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சூழல், நல்லிணக்கம் இந்த நான்குமே இலங்கையின் புதிய அரசாங்கத்திடமிருந்து சர்வதேச சமூகத்தினால் எதிர்பார்க்கப்படும் விடயங்களாகும். இந்த நான்கும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், செழிப்பானதொரு நாடாக இலங்கை மாறும் என்பது அவர்களின் கணிப்பு.
இந்த நான்கு விவகாரங்களிலுமே, முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உருப்படியாக எதையும் செய்யவில்லை. செய்வதற்கு முயற்சிக்கவும் இல்லை.
இந்த நான்கு அடிப்படை அம்சங்களையும் நிறைவேற்றுமாறு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தபோதும் சரி, ஆலோசனை கூறியபோதும் சரி, முன்னைய அரசாங்கம் அதனை காதில் வாங்கிக்கொண்டதே இல்லை.
எங்களுக்கு புத்தி சொல்ல இவர்கள் யார் என்ற தொனியிலும் தாங்கள் நியாயமாக நடந்துகொள்பவர்கள் என்ற தொனியிலுமே முன்னைய அரசாங்கம் சர்வதேச சமூகத்தை பார்த்து கேள்வியெழுப்பும் நிலையிலிருந்து வந்தது.
அதனாலேயே, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னிலைப்படுத்தி நல்லாட்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லிணக்கம் போன்ற விடயங்களை வலியுறுத்தி ஓர் ஆட்சி மாற்றத்தை கோரியபோது, உள்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் ஆதரவை திரட்டமுடிந்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், இந்த நான்கு அடிப்படை விடயங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்களை அறிவதில் சர்வதேச சமூகம் உன்னிப்பாக உள்ளது.
இந்த நான்கு விடயங்களையும் இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் அவ்வளவு இலகுவாக நிறைவேற்றமுடியாது. அத்துடன், 100 நாள் செயற்றிட்டத்துக்குள் அது சாத்தியமும் அற்றது. இதனை சர்வதேச சமூகம் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது.
100 நாள் செயற்திட்டத்துக்கு அப்பாலும், மாதக்கணக்காக சில விடயங்களை நிறைவேற்ற வருடக்கணக்காக கூட காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
உதாரணத்துக்கு நாட்டில் ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதோ, நல்லாட்சியை ஏற்படுத்துவதோ, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சூழலை உருவாக்குவதோ பெரிய விடயங்களில்லை.
அவற்றை முழுமையாகவோ, பகுதியாகவோ 100 நாள் செயற்றிட்டத்துக்குள்ளாகவே ஓர் அரசாங்கத்தினால் மீள நிறுவமுடியும். ஆனால், நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற விடயம் என்பது அதற்கு அப்பாற்பட்டது.
அது நீண்டதொரு செயல்முறை என்பதையும் முன்னைய மூன்று விடயங்களையும் திறமையாக நடைமுறைப்படுத்தன் மூலமே இதனை அடையமுடியும் என்பதையும் சர்வதேச சமூகம் நன்கறியும்.
நல்லிணக்கத்தை எட்டுவதில் முக்கியமான இரண்டு விடயங்கள் உள்ளன. பொறுப்புக்கூறலும் அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய அரசியல் தீர்வுமே இவை இரண்டுமாகும். இவை இரண்டையும் அவ்வளவு சுலபத்தில் நிறைவேற்றமுடியாது.
அதனாலேயே, நல்லிணக்க செயல்முறைக்கு எவராலும் காலக்கெடுவை விதிக்கமுடியாது. ஆனால், இலங்கையை பொறுத்தவரையில் முன்னைய அரசாங்கத்துக்கு போர் முடிந்து நான்கு ஆண்டுகள்வரை பொறுப்புக்கூறலுக்கும் நல்லிணக்கத்தை எட்டுவதற்கும் சர்வதேச சமூகத்தினால் கால அவகாசம் வழங்கப்பட்டது.
முக்கியமாக, நம்பகமான பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்தது.
முதலில் உள்நாட்டு பொறிமுறைகளை ஏற்படுத்துமாறு சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களின் ஊடாக வலியுறுத்தியபோது, அதற்கு கொஞ்சமும் மசிந்துகொடுக்காமல் நடந்துகொண்டது.
காலப்போக்கில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஒவ்வொரு தீர்மானமாக கொண்டுவந்து இறுக்கியபோது, கொஞ்சம் கொஞ்சமாக தானும் ஏதோ சில உள்நாட்டு பொறிமுறைகளை உருவாக்குவது போன்று காட்டிக்கொண்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட உள்நாட்டு பொறிமுறைகள் இதுவரையில் எந்தத் தீர்வையும் அடைய உதவவில்லை.
உள்நாட்டு பொறிமுறைகளின் இறுதி இலக்கு நல்லிணக்கத்தை எட்டுவதாகவே இருந்தாலும், முன்னைய அரசாங்கத்தினால் அத்தகைய நோக்கத்தை அடைவதில் எந்த முன்னேற்றத்தையும் எட்டமுடியவில்லை.
அதற்கு முக்கியமான காரணம், அந்தப் பொறிமுறைகள் நம்பகமானவையாகவோ, சுதந்திரமானதாகவோ மட்டுமன்றி, தீர்வை எட்டுகின்ற நோக்கத்தை கொண்டவையாகவும் இருக்கவில்லை.
ஏதோ பெயருக்கு ஓர் உள்நாட்டு பொறிமுறையை உருவாக்கியிருக்கிறோம் என்று காட்டிக்கொண்டு, சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதே முன்னைய அரசாங்கத்தின் ஒரே நோக்கமாக இருந்தது.
அதனால், அந்தப் பொறிமுறைகள் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடவும் இலங்கைக்கு உதவவில்லை, அதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கைகொடுக்கவில்லை.
இந்தச் சூழலில், சர்வதேச விசாரணை நெருக்கடிகள் இலங்கையின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கின்ற கட்டத்திலேயே, அதிகாரத்தை விட்டுச் சென்றிருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச விசாரணையின் விளைவுகளிலிருந்து நாட்டை காக்கவேண்டியது இப்போது முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான ஐ.நா. வின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான வகையில் அமையப்போவதில்லை என்பதை புதிய அரசாங்கம் தெளிவாக உணர்ந்துவைத்திருக்கிறது.
எனவே, அந்த அறிக்கையின் தொடர் நடவடிக்கைகளை நிறுத்தவைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருகிறது.
அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து, தனக்கு ஆதரவான சூழல் ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறது மைத்திரிபால சிறிசேன அரசாங்கம்.
சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தவிர்ப்பது, அதாவது பிற்போடுவது அல்லது முடக்கிவைப்பது அரசாங்கத்தின் ஒரு திட்டமாக இருந்தாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.
ஏனென்றால், இது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட தீர்மானத்தை அடிப்படையாக கொண்ட விடயம்.
விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பித்து, அதனை நிறைவேற்றவேண்டியது ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கடப்பாடு. எனவே விசாரணை அறிக்கையை வெளிவராமல் முடக்குவதோ, பிற்போடுவதோ நடைமுறைச் சாத்தியமான விடயமா என்பது சந்தேகமே.
ஆனால், அந்த அறிக்கையின் மீதான மேல் நடவடிக்கை குறித்து இன்னொரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். அதனை அமெரிக்கா செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
தற்போதுள்ள நிலையில், அத்தகைய தீர்மானத்தை கொண்டுவரும் திட்டத்தை அமெரிக்கா பிற்போடக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் புதிய அரசாங்கம் ஐ.நா. வின் தொழில்நுட்ப உதவியை பெற்று – நம்பகமான உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறது.
இந்த விசாரணைக்கு கால அவகாசத்தை கொடுப்பதற்கு அமெரிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின் கொழும்பு பயணத்தின்போது, இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை, பொதுநலவாய செயலர் கமலேஷ் சர்மாவும் கூட பொறுப்புக் கூறுவதற்கான உள்நாட்டு பொறிமுறையை உருவாக்கும் முடிவை வரவேற்றுள்ளார். அதுமட்டுமன்றி, அத்தகைய விசாரணைகளுக்கு உதவ பொதுநலவாய அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதேவேளை பிரித்தானியாவிடமிருந்து சற்று வேறுபட்ட கருத்து வெளியாகியிருக்கிறது.
புதிய உள்நாட்டு விசாரணைகளை பிரித்தானியா வரவேற்றாலும், ஐ.நா. வின் விசாரணைகளுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது. ஆனாலும், இலங்கைக்கு கால அவகாசத்தை கொடுக்கும் விடயத்தில் அமெரிக்கா சாதகமான நகர்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை நிராகரிக்கமுடியாது.
இத்தகைய கட்டத்தில், ஜெனீவாவில் பிடியை இறுக்குவது விரைவில் நடக்கப்போகும் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு சார்பான நிலையை உருவாக்கிவிடலாம்.
எனவே, தற்போதைய சாதகமான நிலையை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அமெரிக்கா ஒரு கால அவகாசத்தை கொடுக்கலாம். அது உள்நாட்டு விசாரணை பொறிமுறைக்கானது என்றாலும் கூட, இன்னொரு பக்கத்தில் இலங்கையில் தனக்கு சார்பான அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டது என்பதையும் மறுக்கமுடியாது.