ilakkiyainfo

சிறையை “மூடும்’ நேரம்!

சிறையை “மூடும்’ நேரம்! 2002ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அமெரிக்க விமானப் படை விமானம் ஒன்று குவான்டனாமோவில் உள்ள கடற்படைத் தளத்தில் தரையிறங்கியது.

ஆரஞ்சு நிற கைதி உடை அணிந்த 20 பேர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, அங்குள்ள “கேம்ப் டெல்டா’ சிறையில் அடைக்கப்பட்டனர்.

usa1அவர்கள் ஆப்கனைச் சேர்ந்தவர்கள் என்றும், 2001, செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் இரட்டைக்கோபுரத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்றும் அமெரிக்கா கூறியது.

அதன்பிறகு அடுத்தடுத்த நாள்களில், அமெரிக்க மண்ணில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கானோர்  குவான்டனாமோவுக்கு கொண்டுசென்று   அடைக்கப்பட்டனர்.

முறையான குற்றச்சாட்டுப் பதிவின்றி, சந்தேகப்படுபவர்களை எல்லாம் விசாரணை என்கிற பெயரில் அச்சிறையில் அமெரிக்கா சித்திரவதை செய்வதாக உலகம் முழுவதும் புகார்கள் எழுந்தது.

ஆனால், எதைப் பற்றியும் அமெரிக்கா கவலைப்படவில்லை. 2009ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் முறையாக அதிபராகப் பதவியேற்ற இரண்டு நாள் கழித்து, “குவான்டனாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவச் சிறை ஓராண்டுக்குள் மூடப்படும்’ என ஒபாமா அறிவித்தார். ஓராண்டு அல்ல 6 ஆண்டுகள் கடந்தும் அவரது வாக்குறுதி நிறைவேறவில்லை.

இப்போதும் தனது பதவிக்காலம் முடியும் முன்னர், அச்சிறை மூடப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆனால், அமெரிக்க அதிபரே நினைத்தாலும் செயல்படுத்த முடியாத அளவு குவான்டனாமோ ராணுவச் சிறை விவகாரம் சிக்கல் நிறைந்தது.

திருப்பிக் கேட்கும் கியூபா கியூபாவின் தென்கிழக்குக் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த குவான்டனாமோ விரிகுடாவில் 45 சதுர மைல் பரப்பளவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தப் பகுதியை தங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கியூபா கடந்த காலங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், இப்போது அமெரிக்கா, கியூபா இடையிலான உறவை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் இந்த விவகாரம் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.


அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் புதுப்பிக்க இணைந்து பணியாற்றப் போவதாக, கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் கியூபாவுக்கு சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் அரசு எதிர்ப்பாளர்களையும் அவர் சந்தித்ததால் ஏற்பட்டது வினை. உறவைப் புதுப்பிப்பதாகச் சொல்லி மீண்டும் கியூபாவின்   உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுகிறதோ என்ற சந்தேகம் கியூபா அரசுக்கு.

இந்தச் சந்தேகத்தைப் போக்கிக்கொள்ளவும், அமெரிக்காவுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், இருநாட்டு உறவு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் தங்களது மூன்று கோரிக்கைகளை அமெரிக்கா முன்கூட்டியே நிறைவேற்ற வேண்டும் என்றார் ரவுல் காஸ்ட்ரோ.

1) கியூபாவுக்கு எதிரான வர்த்தகத் தடையை நீக்க வேண்டும்.

2) குவான்டனாமோ விரிகுடாவை கியூபாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

3) அமெரிக்காவில் கொள்கை முடிவுகளால், கியூபாவுக்கு ஏற்பட்ட மனித, பொருளாதார இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கைகள்.

இதில், மற்ற 2 கோரிக்கைகளுக்குப் பதிலளிக்காத அமெரிக்கா, குவான்டனாமோ விரிகுடாவை திரும்ப ஒப்படைக்கப்போவதில்லை என்பதை மட்டும் உடனடியாகச் சொன்னது.

“குவான்டனாமோ விரிகுடாவில் உள்ள சிறை மூடப்பட வேண்டும் என அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அங்குள்ள கடற்படைத் தளம் மூடப்பட வேண்டும் என்பதில்லை’ என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியுள்ளார்.

(மனிதர்களை சிறை வைத்து எப்படியொல்லாம்  வதைக்கின்றார்கள் என்று பாருங்கள். இவாகள் (அமெரிக்கர்கள்) தான் உலகில் மனிதவுரிமைகள்  மீறப்படுவதாக போலிக் குரல் கொடுப்பவர்களாகவும்  செயல்படுகின்றார்கள்)

சித்திரவதை முகாம்? குவான்டனாமோ விரிகுடாவில் உள்ள அந்த ராணுவச் சிறையை 2002ஆம் ஆண்டு அமெரிக்கா ஏற்படுத்தியது. 2001, செப்டம்பர் 11 தாக்குதல் மற்றும் அமெரிக்க மண்ணில் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என அமெரிக்காவால் சந்தேகிக்கப்படும் 700-க்கு மேற்பட்டோர் இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மிகக் கொடூரமான வகையில் சித்திரவதை செய்யப்படுவதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எப்படியெல்லாம் சித்திரவதை செய்வது என்பதை பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடமாக அமெரிக்கா இச்சிறையைப் பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்டு இச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மௌரிடானியா நாட்டைச் சேர்ந்த முகமது  சலாகி எழுதி, அவரது   வழக்குரைஞரால் வெளியிடப்பட்டுள்ள “குவான்டனாமோ டைரி’, இச்சிறையில் பணியாளராக இருந்த ஜோசப் ஹிக்மேன் எழுதியுள்ள “கேம்ப் டெல்டாவில் கொலை’ ஆகிய நூல்கள், அச்சிறையில் நடத்தப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான சித்திரவதை கொடூரத்தை வெளிப்படுத்தி, அமெரிக்காவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.

மூடும் நேரம்? இந்தச் சூழ்நிலையில்தான், குவான்டனாமோ விரிகுடாவை கியூபா திரும்பக் கேட்பதும், அங்குள்ள சிறையை மூட வேண்டும் என்ற விருப்பத்தை அதிபர் ஒபாமா அவ்வப்போது கூறி வருவதும்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட ஒபாமா ஒரு கூட்டத்தில் பேசுகையில், “”அமெரிக்கர்களாக, நீதிக்காக ஓர் ஆழமான அர்ப்பணிப்பை நாம் கொண்டுள்ளோம்.

அதனால், ஒரு சிறையைத் திறந்துவைத்து ஒரு கைதிக்கு 3 மில்லியன் டாலரை இன்னும் செலவு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

அச்சிறையை மூட வேண்டும் என்கிற எனது உறுதியை நான் கைவிட மாட்டேன்.

நாம் யார் என்பதற்கு குவான்டனாமோ சிறை உதாரணமாக இருக்கக் கூடாது. இது சிறையை மூடவேண்டிய நேரம்’ என்றார். ஆனால், இந்த விவகாரத்தில் அதிபரின் விருப்பத்தைவிடவும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல்தான் முக்கியமானது.

கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்கும் வகையில், அங்கு அமெரிக் கர்கள் சுற்றுலா செல்வதற்கான தடையை நீக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் ஜனநாயக, குடியரசுக் கட்சி செனட்டர்கள் சேர்ந்து அறிமுகம் செய்துள்ள நிலையில், குவான்டனாமோ சிறை விவகாரம்குறித்து மட்டும் அமைதி காக்கிறார்கள்.

இது ஒரே நாளில் நடந்துவிடக்கூடிய விஷயமும் அல்ல. அதேவேளையில், கியூபா மட்டுமன்றி உலகின் அனைத்து நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள்குறித்து அதிகமாகவே கவலைப்படும் அமெரிக்கா, குவான்டனாமோ சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்குறித்தும் கவலைப்பட்டாக வேண்டும் அல்லவா?

சிறையின் கதை 1898: சுதந்திர நாடாக அறிவிக்கக் கோரி, ஸ்பெயினை சார்ந்திருந்த கியூபா போராடத் தொடங்கியது. அப்போது கியூபாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதால், ஸ்பானிஷ்-அமெரிக்கப் போர் ஏற்பட்டது. போரின்முடிவில் கியூபா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது. 3 ஆண்டுகள் கழித்து கியூபா சுதந்திர நாடாகியது.

1903: கியூபாவின் தென்கிழக்கு கடலோரம் உள்ள குவான்டனாமோ விரிகுடாவை கியூபாவுடன் ஒரு குத்தகை ஓப்பந்தத்தை ஏற்படுத்தி, அதில் தனது கடற்படைத் தளத்தை அமெரிக்கா அமைத்தது.

1959: பிடல் காஸ்ட்ரோ கியூபா அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, குவான்டனாமோ விரிகுடாவை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கியூபா வலியுறுத்தி வருகிறது.

தொகுப்பு: எஸ்.ராஜாராம் – தினமணி –

 

Exit mobile version