ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு சுதந்திர கட்சியினரையும் நாட்டு மக்களையும் நடுத்தெருவில் நிர்க்கதியாக்கி விட்டு அமெரிக்காவுக்கு தப்பியோடி சுகபோகம் அனுபவிக்கின்றார் பஷில் ராஜபக்ஷ எனஅமைச்சர் நவீன் திஸாநாயக நேற்று சபையில் தெரிவித்தார்.
கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்லுமானால் 130 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்
மஹிந்த ராஜபக் ஷ சிறந்த அரசியல்வாதி திறமையானவர். பலசாலி அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையை மூடி மறைக்க மாட்டேன்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி தோல்வி கண்டு வீட்டுக்கு போக முக்கிய காரணம் பஷில் ராஜபக் ஷ ஆவார்.
பஷில் ராஜபக் ஷ எனது தந்தையின் நல்ல நண்பர்.
ஆனால் கடந்த ஆட்சியில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார். மக்கள் பிரதி நிதிகளை மக்களுக்கு சேவை செய்ய விடாது தடுத்தார். அடக்கு முறையை மேற்கொண்டார் என்பதை சுதந்திரக் கட்சியினரான நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முதன்மையானவர் பஷில் ராஜபக் ஷ.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை நடுத்தெருவில் கைவிட்டு மக்களையும் நடுத்தெருவில் கைவிட்டு அமெரிக்காவுக்கு தப்பிச்சென்று சுகபோகமாக வாழ்க்கை நடத்துகின்றார்.
கடந்த ஆட்சியாளர்கள் தமிழ் பேசும் மக்களை ஓரம் கட்டினார்கள். அவர்களை மதிக்கவில்லை. சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே போதும் நாம் வென்று விடுவோம் என்ற மமதையில் செயற்பட்டுள்ளார்.
எனவே, தமிழ் பேசும் மக்கள் மஹிந்தவை நிராகரித்தனர். மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றி பெறச்செய்தனர்.
இது கடந்த கால ஆட்சியாளர்களுக்கு நல்ல பாடமாகும்.
எதிர்வரும் உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் 130 மில்லியன் ரூபாவை சன்மானமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து இன, மத மக்கள் மத்தியிலும் மைத்திரிபால சிறிசேன தனது கொள்கைகளை பிரசாரம் செய்தார்.
ஆனால் மஹிந்த ராஜபக் ஷ இனவாத த்தை கையிலெடுத்தார் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.