இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் கேள்­விக்­கு­றி­யாக மாறி­யி­ருந்த, கொழும்புத் துறை­முக நகரத் திட்­டத்­துக்கு, புதிய அர­சாங்கம் பச்­சைக்­கொடி காண்­பித்­தி­ருக்­கி­றது.

இது பல­ரது புரு­வங்­க­ளையும் உயர்த்திப் பார்க்க வைத்­தி­ருக்­கி­றது.

ஏனென்றால், ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­ன­தாக – வர்த்­தக சமூ­கத்­தினர் மத்­தியில் உரை­யாற்­றிய இப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சுற்றுச் சூழலைக் கருத்தில் கொள்­ளாத- இந்­தி­யாவின் பாது­காப்பு நல­னுக்கு அச்­சு­றுத்­த­லான கொழும்புத் துறை­முக நகரத் திட்­டத்தை இரத்துச் செய்வோம் என்று உறு­தி­படத் தெரி­வித்­தி­ருந்தார்.

அது அப்­போது சீனா­வுக்கு அதிர்ச்­சியைத் தரு­கின்ற ஒரு செய்­தி­யாக அமைந்­தி­ருந்­தது.

அதற்குப் பின்னர், கடந்த ஆறு, ஏழு வாரங்­க­ளாக சீனாவின் திட்­டங்கள் குறிப்­பாக, கொழும்பு துறை­முக நகரத் திட்டம் தொடருமா என்ற கேள்வி நீடித்து வந்­தது.

1.4 பில்­லியன் டொலரை முத­லீடு செய்யும் வகையில், கடந்த செப்­ரெம்பர் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்ட திட்­டத்தை, கைவிடுவதென்­பது சீனாவைப் பொறுத்­த­வ­ரையில் பொரு­ளா­தார ரீதி­யிலும், மூலோ­பாய ரீதி­யிலும் பெரும் பாதிப்பை ஏற்ப­டுத்தும் என்றே கரு­தப்­பட்­டது.

எனினும், ஜனா­தி­பதி தேர்தல் நெருங்­கிய போது, இந்த விவ­கா­ரத்தில் ஆரம்­பத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் காணப்­பட்ட இறுக்­க­மான போக்கு சற்றுத் தளர்ந்­தி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

தேர்­த­லுக்குப் பின்னர், கொழும்பு துறை­முக நகரத் திட்டம் தொடர்­பான புதிய அரசின் நிலைப்­பாடு கொஞ்சம் கொஞ்­ச­மாகத் தளரத் தொடங்­கி­யது.

இறு­தியில் கடந்த வியா­ழக்­கி­ழைமை நடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில், இந்த திட்­டத்­துக்கு பச்­சைக்­கொடி காண்­பித்­ததன் மூலம், சீனா­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்ட அர­சாங்கம் என்ற கரு­து­நிலை முற்­றா­கவே அகன்று போகும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

எதிர்க்­கட்­சி­யாக இருந்த போது, எந்­தெந்தக் கார­ணங்­களைக் கூறி, கொழும்புத் துறை­முக நகரத் திட்­டத்தை தவ­றான முறையில் அளிக்­கப்­பட்ட ஒப்­புதல் என்று ஐ.தே.க. தரப்பு கூறி­யதோ, அவை­யெல்லாம் சரி­யாக அளிக்­கப்­பட்ட ஒப்­புதல் தான் என்று இப்­போ­தைய அர­சாங்கம் கூறு­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சரி அவ­ரது அர­சாங்­கமும் சரி, இந்த விவ­கா­ரத்தில் ஒரே­ய­டி­யாக குத்­துக்­க­ரணம் அடித்­துள்­ளது என்­பதே உண்­மை­யான நிலை.

கொழும்புத் துறை­முக நகரத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது சுற்­றா­ட­லுக்கு ஆபத்து என்று முன்னர் கூறிய ஐ.தே.க, ஆட்­சிக்கு வந்த பின்னர், எந்த ஆபத்தும் இல்லை என்று சாத்­திய ஆய்வு கூறு­வ­தாகச் சொல்­கி­றது.

அது­போ­லவே, சீனா­வுடன் இந்த திட்டம் தொடர்­பாக செய்து கொள்­ளப்­பட்ட உடன்­பாடும், முற்­றிலும் சரி­யான வழி­மு­றை­களின் ஊடா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன, எந்த தவறும் இல்லை என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

இது, இந்த திட்­டத்தில் மஹிந்த ராஜ­பக் ஷ தரப்பு எந்த ஊழ­லையும் செய்­ய­வில்லை என்ற அர்த்­தத்­தையும் கொடுக்கும் என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் சரி­யான வழி­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டாத உடன்­பா­டு­களை இரத்துச் செய்வோம் என்று, முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்­ச­ராகப் பத­வி­யேற்ற பின்னர், கபீர் காசிமும் தெரி­வித்­தி­ருந்தார்.

இப்­போ­தைய அர­சாங்கம் இந்த திட்­டத்­துக்கு அளித்­துள்ள ஒப்­புதல், மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் செய்து கொண்ட உடன்பாட்டில் எந்த தவ­றான அணு­கு­மு­றை­க­ளுக்கும் பின்­பற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தையே சுட்டி நிற்­கி­றது.

ஆக, சுற்­றாடல் காரணி மற்றும் உடன்­பாட்டின் குறை­பா­டு­களைச் சுட்­டிக்­காட்டி இந்த திட்­டத்தை இரத்துச் செய்ய முடி­யாத நிலைக்கு புதிய அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்த திட்டம் இரத்துச் செய்­யப்­படும் என்று அறி­விக்­கப்­பட்ட காலத்தில் இருந்து, சீனா எதிர்ப் பிர­சாரம் மற்றும் தனக்கு ஆதரவு திரட்டும் பிற நட­வ­டிக்­கை­களில் தொடர்ச்­சி­யா­கவே ஈடு­பட்டு வந்­தது.

சீன அர­சுத்­துறை நிறு­வ­ன­மான சீன துறை­முக பொறி­யியல் நிறு­வ­னத்தின், துணை நிறு­வ­ன­மான, பல்­தே­சிய சீன தொடர்­பாடல் கட்­டு­மான நிறு­வனம், ஊட­கங்­களில் முழுப்­பக்க விளம்­ப­ரங்­களின் மூலம் உள்­ளூரில் ஆத­ரவு திரட்டும் முயற்­சி­களில் ஈடு­பட்டு வந்­தது.

அடுத்த பத்து ஆண்­டு­களில் 83 ஆயிரம் வேலை­வாய்ப்­பு­க­ளையும், 13 பில்­லியன் டொலர் வெளி­நாட்டு முத­லீட்­டையும் தமது நிறு­வனம் கொண்டு வர­வுள்­ள­தாக, கடந்த வியா­ழக்­கி­ழமை வெளி­யிட்ட முழுப்­பக்க விளம்­ப­ரங்­களில் கூட, சீன நிறு­வத்தின் தலை­வ­ரான ஜியாங் ஹோலியாங் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அது­மட்­டு­மன்றி, சீன செய்தி நிறு­வ­ன­மான சின்­ஹூ­வாவும், இந்த திட்டம் தொடர அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தும் வகை­யி­லான தொடர் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­டி­ருந்­தது.

 

இந்த திட்­டத்­துக்கு ஆத­ர­வான குரல்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி சின்­ஹூவா செய்­தி­களை வெளி­யிட்டு வந்­தது.

இது இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட மறை­முக அழுத்தம் என்றே கூறலாம்.

இந்த திட்­டத்தின் அவ­சியத் தன்­மையைக் கருத்தில் கொண்டு, இரா­ஜ­தந்­திர ரீதி­யா­கவும், இதனைத் தொடர்­வ­தற்கு அனுமதிக்­கும்­படி சீன அர­சாங்கம் இலங்­கைக்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கவும் தயங்­க­வில்லை.

இது­கு­றித்துப் பேச சீன ஜனா­தி­பதி தனது சிறப்புத் தூது­வ­ராக, லியூ ஜியான்­சா­வோ­வையும் கொழும்­புக்கு அனுப்­பி­யி­ருந்தார்.

எனினும், அவர் கொழும்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கடந்த வெள்­ளிக்­கி­ழமை சந்­திப்­ப­தற்கு ஒரு நாள் முன்னதாகவே, கொழும்புத் துறை­முக நகர கட்­டு­மானத் திட்­டத்­துக்கு ஒப்­புதல் அளித்து விட்­டது அமைச்­ச­ரவை.

இந்த முடிவு, சீனா­வுக்குக் கிடைத்­துள்ள மிகப் பெரிய வெற்றி என்றே கரு­தப்­ப­டு­கி­றது.

இந்த திட்டம் கைந­ழுவிப் போயி­ருந்தால், வெறும் பொரு­ளா­தார இழப்­புகள் மட்டும் சீனா­வுக்கு ஏற்­பட்­டி­ருக்­காது.

அதற்கும் அப்பால், இந்­தியப் பெருங்­கடல் தீவில் கால் வைக்கும் தமது திட்­டத்தின் எதிர்­காலம், இலங்கை மீதான பிடி­மானம் என்ற மூலோ­பாய கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த விவ­கா­ரங்­க­ளிலும் சீனா­வுக்கு தோல்வி ஏற்­பட்­டி­ருக்கும்.

அது, சீன ஜனா­தி­பதி ஜி ஜின்பிங் பத­வி­யேற்ற பின்னர் எதிர்­கொண்ட முத­லா­வது பெரும் பின்­ன­டை­வா­கவும் அடையாளப்படுத்­தப்­பட்­டி­ருக்கும்.

கடந்த மாதம் பத­விக்கு வந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம், தமது முன்­னைய நிலைப்­பா­டு­களை ஒதுக்கி வைத்து விட்டு, சீனா விட­யத்தில் கீழ் இறங்கிச் செல்ல நேரிட்­டுள்­ளது.

புதிய அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டுகள் கொஞ்சம் கொஞ்­ச­மாக தளர்ந்து வந்­ததை, கடந்த ஒரு மாத காலத்தில் வெளி­யான அமைச்­சர்­களின் கருத்­து­களில் இருந்தே புரிந்து கொள்­ளலாம்.

எதற்­காக சீனா விட­யத்தில் அர­சாங்கம் இறங்கிப் போக முடிவு செய்­தது என்­பது இன்­னமும் கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்கிறது.

ஒரு­வேளை, இலங்­கையில் தனது திட்­டங்­களை முற்­றாக நிறுத்தப் போவ­தாக சீனா மிரட்­டி­யி­ருக்­கலாம்.

தனது கடன்­களை குறு­கிய கால­அ­வ­கா­சத்­துக்குள் தீர்க்­கு­மாறும் எச்­ச­ரித்­தி­ருக்­கலாம்.

தன்­னுடன் செய்து கொண்ட உடன்­பாட்டை முறித்தால், சர்­வ­தேச அளவில் சட்ட நட­வ­டிக்கை எடுப்போம் என்று மிரட்டியிருக்­கலாம்.

சர்­வ­தேச அரங்கில் இலங்­கையை காப்­பாற்ற முன்­வ­ர­மாட்டோம் என்று எச்­ச­ரித்­தி­ருக்­கலாம்.

இப்­படிப் பல வழி­களில் சீனா தனது கைவ­ரி­சையைக் காட்­டி­யி­ருக்கக் கூடும்.

எவ்­வா­றா­யினும், சீனா விட­யத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அர­சாங்கம் முடி­வெ­டுக்க முடி­யாது என்­பது முன்­னரே எதிர்­பார்க்­கப்­பட்­டது தான்.

ஏனென்றால், அந்­த­ள­வுக்கு சீனா­விடம் இலங்கை கடன்­பட்­டி­ருக்­கி­றது.

அதை­விட இலங்­கைக்குள் சீனாவின் தலை­யீடு தவிர்க்க முடி­யா­த­ள­வுக்கு வேரூன்­றி­யி­ருக்­கி­றது.

ஒரே­ய­டி­யாக இதனை நீக்க முடி­யாது. படிப்­பா­யாகத் தான் செய்ய வேண்டும்.

எவ்­வா­றா­யினும், சுற்­றாடல் மற்றும், உடன்­பாட்டு அம்­சங்­களைக் கருத்தில் கொண்டு தான் இந்த திட்­டத்தை தொடர அரசாங்கம் அனு­மதி அளித்­தி­ருக்­கி­றது.

எனினும், பாது­காப்பு ரீதி­யான அச்­சு­றுத்தல் விவ­கா­ரத்தில் இன்­னமும் இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அதா­வது இலங்­கையின் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு பகு­தியை, சீனா­வுக்கு அறு­தி­யா­கவே எழுதிக் கொடுக்கும் வகையில் இந்த உடன்­பாடு அமைந்­துள்­ளது.

மொத்தம் 233 ஹெக்­ரெயர் பரப்­ப­ளவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள கொழும்பு துறை­முக நகரில், 88 ஹெக்­ரெ­யரை 99 வருட குத்த­கைக்கும், 20 ஹெக்­ரெ­யரை அறு­தி­யா­கவும் என மொத்தம் 108 ஹெக்­ரெயர் நிலத்தை சீனாவை தன் கைக்குள் வைத்துக் கொள்ளப் போகி­றது.

இது இலங்­கையின் பாது­காப்­புக்கு மட்­டு­மன்றி, இந்­தி­யாவின் பாது­காப்­புக்கும் கூட சவா­லான விடயம்.

அதுவும், இந்த நிறு­வனம் ஒன்றும் தனியார் நிறு­வனம் அல்ல. சீன அர­சுத்­துறை நிறு­வனம்.

இன்­னொரு நாட்டு அர­சாங்க நிறு­வ­னத்­துக்கு, இலங்­கையின் ஒரு பகுதி நிலத்தை எழுதிக் கொடுப்­பது மிகப்­பெ­ரிய ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என்று அர­சாங்கம் கரு­து­கி­றது.

99 வருட குத்­த­கைக்கு கொடுக்­கலாம், ஆனால், அறு­தி­யாக கொடுக்க முடி­யாது என்­பதில் அர­சாங்கம் பிடி­வா­த­மா­கவே இருக்கும்.

அதே­வேளை, இந்த திட்டம் இந்­தி­யா­வுக்கு ஆபத்­தா­னது என்று இந்­திய அதி­கா­ரிகள் கருத்து வெளி­யிட்­டி­ருந்த போதும், அதிகா­ர­பூர்­வ­மாக இந்­தியா எந்த எதிர்ப்­பையும் தெரி­விக்­க­வில்லை என்று அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

இந்த திட்­டத்தை புதிய அர­சாங்கம் தொடர அனு­ம­தித்த பின்னர் இந்­தியா என்ன நிலைப்­பாட்டை எடுக்கப் போகி­றது என்­பது கேள்­விக்­கு­ரிய விடயம்.

அடுத்­த­வாரம், இந்­தியா செல்லும் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இந்­தி­யாவின் நிலைப்­பாடு குறித்து எடுத்துக் கூறப்­ப­டலாம்.

அதே­வேளை, கொழும்புத் துறை­முக நகரத் திட்­டத்தைத் தொடர்­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­ம­தி­ய­ளித்­துள்ள போதிலும், முன்­னைய அர­சாங்கம் செய்து கொண்டு உடன்­பாட்டு அம்­சங்கள் அனைத்­தையும் புதிய அர­சாங்கம் நிறை­வேற்றும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

இலங்­கை­யி­னதும், இந்­தி­யா­வி­னதுர்ம் பாது­காப்பு நலன்­களைக் கருத்தில் கொண்டு, அந்த உடன்­பாட்டில் திருத்­தங்­களைச் செய்யும் முயற்­சி­களில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஈடு­ப­ட­வுள்ளார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அடுத்­த­மாதம், கொழும்பு வந்து சென்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் செல்லவுள்ளார்.

இது சீனாவுடன் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பயணம் மட்டுமன்றி, சீனாவின் திட்டங்களின் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை நடத்துவதற்குமேயானதாகும்.

இந்தப் பயணத்தின் போது, இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்ததாத வகையில், கொழும்புத் துறைமுக நகரத் திட்ட உடன்பாடு திருத்தியமைக்கப்படலாம்.

அதற்கு ஏற்கனவே சீனா ஒப்புதல் அளித்ததன் பேரில் கூட சில வேளைகளில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருக்கக் கூடும்.

அதேவேளை, இந்தக் கட்டத்தில் இந்த திட்டத்தை நிறுத்துவது சீனாவுடனான நீண்டகால உறவை பாதிக்கக் கூடும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்து, சீனா விடயத்தில் புதிய அரசாங்கம் கொண்டுள்ள அச்சத்தையம் பிரதிபலிக்கிறது.

எவ்வாறாயினும், இந்த திட்டத்தை தொடர்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது சீனாவுக்கு கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகவே கருத வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version