டெல்லி: இந்தியாவில் முறைகேடாக கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் மட்டும் 1195 இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து, பல லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் தீவிர முயற்சிக்கு பிறகு தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் வைத்து இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தர சுவிட்சர்லாந்து நாட்டு அரசு முன் வந்தது. இது தெடர்பாக நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் தனி விசாரணைக் குழுவும் செயல்பட்டு வருகிறது.

09-1423481483-swiss-bank1-600நாளிதழ் அம்பலம்
இந்த நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தியில், சுவிட்சர்லாந்து நாட்டு எச்எஸ்பிசி வங்கியில் 1195 இந்தியர்கள் 1668 அக்கவுண்டுகளை வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதாவது சில இந்தியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்த அக்கவுண்டுகளில் மொத்தம் ரூ.25 ஆயிரத்து 420 கோடி பதுக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த கருப்புப்பணத்தை வைத்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள்தான் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு பட்டியலும் கிடைத்துவிட்டது
2008ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின், எச்எஸ்பிசி வங்கியில் இருந்து, முன்னாள் ஊழியரால் திருடப்பட்ட, ஆவண தகவல் இந்திய அரசுக்கும் கிடைத்திருந்தது. அதில் சுமார் 628 பேரின் பெயர்கள்தான் கிடைத்த நிலையில், இன்று வெளியான தகவலில் அனைவரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது, கருப்பு பணம் வைத்துள்ளோர் பெயர் பட்டியல் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

அரசியல்வாதிகள்:
காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக இருந்த பிரனீத் கவுர், முன்னாள் காங்கிரஸ் எம்.பி, அன்னு தாண்டன், காங்கிரசின் முன்னாள் அமைச்சரும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவருமான வசந்த் சாதே குடும்பத்தினர், பால்தாக்ரேவின் மருமகள் ஸ்மிதா தாக்ரே ஆகியோரின் பெயர்களும் அதில் உள்ளன.
தொழிலதிபர்கள்:
அம்பானி சகோதரர்கள், பர்மான்ஸ் (டாபர் நிறுவனம்), டால்மியா, ஜெட்ஏர்வேசின் நரேஷ் கோயல், எம்மார் எம்ஜிஎப்பின், சர்வண் குப்தா உள்ளிட்ட பலரது பெயர்களும் பட்டியலில் உள்ளன. அதில் 276 இந்தியர்களின் கணக்குகளில் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பணம் இருப்பு உள்ளதாம்.
சட்டம் என்ன சொல்கிறது
2006-07ம் ஆண்டு நிலவர பட்டியல்தான் தற்போது வெளியாகியுள்ளது. வங்கி விவரம் திருடப்பட்டது தெரிந்ததும் பலரும் அக்கவுண்டை மூடியிருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், அப்போதுள்ள இந்திய சட்டத்தின்படி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.
அருண் ஜேட்லி
இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்க கடந்த 8 மாதங்களாக மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் பயனாக கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய எல்லா தகவல்களையும் தர சுவிட்சர்லாந்து அரசு முன் வந்துள்ளது.
புதிய பெயர்களும் விசாரிக்கப்படும்
சுவிஸ் வங்கிகளில் உள்ள 1195 இந்தியர்களின் கணக்குகளில் 350 கணக்குகள் மீது ஆய்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில் 60 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று பத்திரிகையில் வெளியான பெயர்களில் பல பெயர்கள் ஏற்கனவே அரசு வைத்துள்ள கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் உள்ளது. சில பெயர்கள் புதிதாக உள்ளன. அவை ஆய்வு செய்யப்படும்.
விரைவில் நல்ல சேதி
டவோஸ் மாநாட்டின் போது சுவிட்சர்லாந்துடன் நான் பேசியதன் மூலம் இப்போது நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. எனவே அடுத்த மாதம் (மார்ச்) 31ம் தேதிக்குள் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் எல்லா கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. நிச்சயமாக விரைவில் கருப்புப் பணம் மீட்கப்படும். இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.
Share.
Leave A Reply

Exit mobile version