காதலர் தினத்தை முன்னிட்டு பிரசுரமாகும் நிஜக்காதல் கதையிது. கடந்த வாரம் கல்யாணம் செய்து கொண்ட இந்த காதல் கதையின் நாயகன் பிறைமதி ஒரு இந்து என்பதும் நாயகி ஸ்டெல்லா தமிழரசி ஒரு கிறித்தவர் என்பதும் சின்ன சுவராசியம் என்றால் இவர்களை இணைத்தது கவிதை தமிழ் என்பதுதான் பெரிய சுவராசியம்.

கும்பகோணத்தை சேர்ந்த பிறைமதி சென்னைக்கு வந்து பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

தமிழ் மீது ஆர்வம் அதிகம் கொண்ட இவர் முகநூலில் நிறைய கவிதைகள் எழுதுவார்.இவரது கவிதைகளுக்கு நிறைய ‘லைக்கும் கமெண்டும்’ வந்தாலும் கவிதைக்கு கவிதையாலேயே காமெண்ட் கொடுக்கும் ஸ்டெல்லா தமிழரசி தனியாக தெரிந்தார்.

பெண் பெயரில் நிறைய பொய்யான முகநூல் கணக்கர்கள் உலாவருவதால் ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாத பிறைமதி பின்னொரு நாளில் இவர் உண்மையில் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்பி இன்பாக்சில் நீவீர் யார்? என்று ஒரு கேள்வியைக்கேட்டு தனது போன் எண்ணை போட்டார்.

உடனே பதில் இல்லை ஆனால் வேறு வேறு எண்ணில் இருந்து ஒரு பெண்குரல் பேங்க் லோன் வேண்டுமா? ரியல் எஸ்டேட்டில் விருப்பம் உண்டா?என்பது போல கேட்டது.

முகநூலில் தனது எண்ணைப்போட்டபிறகுதான் இப்படிபட்ட விசாரணைகள் வருகிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகு அடுத்த போன் வந்ததும் நீங்கள் ஸ்டெல்லா தமிழரசிதானே என்று கேட்கவும் நீண்ட மவுனத்திற்கு பிறகு பதில் ஆம் என்று வந்தது.

பிறகு கவிதை பற்றியும் தமிழ் பற்றியும் நிறைய பேசியிருந்தாலும் ஒருவரை ஓருவர் பார்த்துக்கொண்டது இல்லை அதில் பிறைமதி ஆர்வம் காட்டவும் இல்லை.

இருவருமே முகநூலில் தங்களது படங்களையும் பதிவிட்டதில்லை இதனால் அவர் எப்படி இருப்பார் என்று இவருக்கும் இவர் எப்படி இருப்பார் என்று அவருக்கும் தெரியாது.

இந்த நிலையில் கும்பகோணத்திற்கு பெண் பார்க்க சென்ற பிறைமதி தனது தாயார் வீட்டில் தங்கியிருந்தார்.மறுநாள் பெண்பார்க்க செல்லவேண்டும் முதல்நாள் அவரது போன் அழைக்கிறது, அவர் குளியலறையில் இருந்ததால் அவரது தாயார் போனை எடுக்கிறார், பேசியது ஸ்டெல்லா.

எதிர்முனையில் பேசுவது பிறைமதியின் தாயார் என்பதையும் தன் மகனுக்கு மறுநாள் பெண் பார்க்க விருப்பதையும் சொல்லியிருக்கிறார், உடனே ஸ்டெல்லா ‘வணக்கம் அத்தை’ நான் அவரை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் நான் இருக்கும் போது எப்படி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யலாம் என்றுகேட்டு அழுதிருக்கிறார்.

குளியல் முடித்துவந்த பிறைமதிக்கு விஷயம் போகிறது, அவருக்கு எதுவும் புரியவில்லை அம்மாவிடம், ‘வெறும் பேச்சுவார்த்தைதான் நான் நேரில்கூட பார்த்தது இல்லை’ என்று விளக்கம் கொடுக்கிறார்.

கிராமத்து தாயாக இருந்தாலும் இன்னோரு பெண்ணின் மனதை அறிந்த அந்த தாய் ‘நீ முதல்ல போய் உன்னை இந்த அளவு நேசிக்கும் பெண்ணை பார் பேசு பிறகு உனக்கு சம்மதம் என்றால் பின்னர் அவரது பெற்றோரிடம் பேசு என்று சொல்லி அனுப்பிவிட்டார்.சென்னை வந்து ஸ்டெல்லாவை சந்திக்கிறார் அவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்பதை தெரிந்துகொள்கிறார்.

இருவரும் உட்கார்ந்து பெரம்பூர் பூங்காவில் பலகட்ட பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். நமது சந்தோஷம் பெற்றவர்களுக்கு சங்கடங்களை உருவாக்கிவிடக்கூடாது என்பது போன்ற காரணங்களை சொல்லி திருமண எண்ணத்தை கைவிட சொல்கிறார் அதைவிட பல காரணங்கள் சொல்லி திருமணத்திற்கு ஸ்டெல்லா சம்மதம் பெறுகிறார்.

அதன்பிறகு ஸ்டெல்லாவின் பெற்றோரை பார்த்து விஷயத்தை சொல்கிறார் பிறைமதி.உடனடியாக பதில் இல்லை ஆறு மாத காலமாகிறது இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தவம் போல இருவரும் பேசிக்கொள்ளவில்லை,இறுதியில் ஸ்டெல்லாவின் மனஉறுதி வெற்றி பெறுகிறது.பெற்றோர் சம்மதம் கிடைக்கிறது.

இப்படி அனைவரின் சம்மதத்தை பெற்ற பிறகு வேகமெடுத்த காதல் கும்பகோணம் திருமணத்திலும் சென்னை வரவேற்பிலும் முடிந்தது.

நான் சென்னை வரவேற்பில் கலந்து கொண்டேன். மணமக்கள் மத்தாப்பூ சிரிப்புடனும், மனம்நிறைந்த மகிழ்ச்சியுடனும் வரவேற்றார்கள்.மேலும் இருவீட்டாரிடம் காணப்பட்ட சந்தோஷத்தை பார்க்க மனம் நிறைவாக இருந்தது.

கவிஞர் பிறைமதியை முகநூல் மூலம் அறிமுகம் செய்திட்ட நண்பர் அ.ப.ராசாவிற்கு நன்றி.

மணமக்கள் தமிழாய் நீடுவாழ வாழ்த்துக்கள், நீங்களும் வாழ்த்த விரும்பினால் எண்:98435 14251.

Share.
Leave A Reply

Exit mobile version