டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில் இந்தப் போட்டியை மனதில் வைத்து ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒன்றை களம் இறக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாகா எல்லையில் மாலை நேரம் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியில் இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் நடந்து வந்து ஒருவர் முகம் அருகே மற்றொருவர் கால் வரும் அளவுக்கு நடக்கிறார்கள்.
அப்போது பாகிஸ்தான் வீரர் மிகவும் கர்வமுடன் காலை தூக்க இந்திய வீரரோ அவரைப் பார்த்த “யோவ் முதல்ல உன் காலைப் பாருய்யா” என்பது போல கண் ஜாடை செய்கிறார். பார்த்தால் பாகிஸ்தான் வீரரின் ஷூவின் அடிப்பக்கம் பிய்ந்து தொங்குகிறது.
இதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் பாகிஸ்தான் வீரர் விழிக்க இந்திய வீரர் கண் மூடித் திறக்கும் நேரத்தில் தனது பாக்கெட்டில் இருந்த ஃபெவிகுவிக்கை எடுத்து அவரின் காலணியை ஒட்டி சரி செய்து விடுகிறார்.
இதை பார்த்த பாகிஸ்தான் வீரர் நிம்மதி பெருமூச்சுவிட்டுவிட்டு மறுபடியும் கெத்துடன் திரும்புகிறார். இந்த விளம்பரம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
Forever In Love : Rajtv’s Special Music Program 2015