சமீபத்தில் சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவியது. தொடர்ந்து அது வேகமாக பரவி வருகிறது. இதுவரை அந்த வீடியோவை 6 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 29,000 பேர் அதை தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 14-ம் திகதி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் பல பயணிகள் தங்களை அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றனர். பின் கூச்சலிடுகின்றனர். இறுதியாக கெஞ்சி கூட பார்க்கின்றனர். ஆனால் விமான நிலைய அதிகாரியோ “ஒரு முறை நீங்கள் தாமதமாக வந்தால் வந்தது தான். நீங்கள் உங்கள் விமானத்தை தவறவிட்டு விட்டீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்கிறார்.
ஒரு பயணி என் அம்மா தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்னை அனுமதியுங்கள் என்று உடைந்த குரலில் அழுகிறார். அதிகாரி அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். ஏர் இந்தியா இணைய தளத்தின் படி சர்வதேச விமானம் புறப்படுவதற்கு 60 நிமிடத்திற்கு முன்னர் பயணிகள் வர வேண்டும். இவர்கள் 5 நிமிடம் தாமதமாக வந்தனர்.
விமானம் புறப்படுவதற்கு 55 நிமிடம் இருந்தது. அந்த அதிகாரி நினைத்திருந்தால் கெஞ்சும் பயணிகளை கண்டித்து விட்டு விமானத்தில் பயணிக்க அனுமதித்திருக்க முடியும். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தாக வேண்டும்.
இதே ஏர் இந்தியா நிறுவனம் சில தினங்களுக்கு முன் சிட்னி கிரிக்கெட் போட்டியை கண்டுகளிப்பதற்காக இந்தியாவிலிருந்து கிளம்பிய ரசிகர்களை சில மணி நேரம் தாமதமாக கொண்டு போய் சேர்த்து பயணிகளின் கடும் கோபத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட அதிகாரியுடனான உரையாடலை தனது செல்போனில் பதிவு செய்த பயணி ஒருவர் அதை தனது பேஸ்புக்கில் பதிவேற்றினார். இந்த வீடியோ அதிகாரி பற்றி சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.