அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த உடை மற்றும் கடந்த 9 மாதங்களில் மோடி பெற்ற 455 பரிசுப் பொருட்கள் புதன்கிழமை முதல் ஏலம் விடப்பட்டன.
குஜராத் மாநிலம், சூரத் அறிவியல் மாநாட்டு மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏலத்தில் திரட்டப்படும் நிதி கங்கையை சுத்தம் செய்யப்படும் பணிக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை ராஜீவ்பாய் அகர்வால் என்பவர் 51 இலட்சத்துக்கு ஏலம் கேட்டு தொடக்கி வைத்தார். சூரத்தைச் சேர்ந்த சுரேஷ் அகர்வால் என்பவர் ஒரு கோடிக்கு ஏலம் கேட்டார்.
வெளிநாடு வாழ் இந்தியரான சவுகேசி என்பவர் ஒரு கோடியே 11 இலட்சத்துக்கும் (இந்திய ரூபாய்), சூரத் தொழில் அதிபர் ராஜேஷ் என்பவர் ஒரு கோடியே 21 இலட்சத்துக்கும் ஏலம் கேட்டனர்.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ரூ.4 கோடியே 31 இலட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் பட்டேல் இந்த கோட்டை ஏலத்துக்கு எடுத்துள்ளார்.
மோடியின் ஆடையை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதி, கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த ஆடை உட்பட ஒன்பது மாதங்களாக அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் என மொத்தம் 455 பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் ஏலம் விடப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் தொகை, கங்கையை சுத்தப்படுத்தும் பணிக்குப் பயன்படுத்தப்படும் என்றார்.