2002ம்  ஆண்டு,  ரணில் மூலம்.. சர்வதேச  சமூகத்தினரின்  அனுசரணையுடன்  சமாதான  ஒப்பந்தம்  ஒன்று  கொண்டுவரப்பட்டு, உள்ளக  சுயநிர்ணயவுரிமையுடன்  கூடிய  சுயாட்சி  முறைமையிலான  ஆட்சி  அதிகாரம்   கொண்ட   “சமஷ்டி”  ஆட்சியை   வழங்குவதற்கான   ஒரு  உத்தேச  திட்டத்தின்   அடிப்படையில்   தமிழர்   பிரதேசங்கள்  புலிகளிடம்  ஒப்படைக்கப்பட்டது   என்பதை  யாவரும்  அறிந்திருப்பீர்கள்.

அதை  சரியாக  பயன்படுத்தி,   சர்வதேச  சமூகத்தை   திருப்திப்படுத்தி  காரியம்  சாதிக்க  முடியாத  (தெரியாத,  அறிவீனமற்ற) புலித் தலைமை  அவசரப்பட்டு  ரணிலுக்கு எதிராக  செயல்பட்டதன்  மூலம், “மகிந்தவுக்கு  மகுடம் சூட்டி”, சர்வதேச  சமூகத்தையும்  பகைத்துக்கொண்டு,  போராளிகளால்   பல்வேறு   தியாகங்கள்   செய்து   போராடி  கட்டிக்காத்த  வன்னி  மண்ணையும்  பறிகொடுத்து, மானத்தையும்  இழந்து,    கடைசியில்  முள்ளிவாய்காலில்   போய்  முடிந்த கதை  யாவரும் அறிந்ததே…

பிரபாகரன்  ரணிலுக்கு  என்ன செய்தாரோ,   அதே  மாதிரியான  நிலைமையொன்றை   மீண்டும்  உருவாக்குவதற்கான  நடவடிக்கையை    எஸ். சிறிதரன்  மேற்கொண்டு வருகிறார்.

10 வருடமாக  மகிந்தவின்  ஆட்சியை   எப்படி  அகற்றலாம்  என   தமிழர்கள்   கனவு கண்டுகொண்டிருந்தார்கள்.  அந்த கனவை  சிங்கள  அரசியல் வாதிகள்  தான் நனவாக்கியுள்ளார்கள்.

அதில்   ரணிலின் பங்கு மிக  முக்கியமானது.   அதனால்  தான்   ரணிலுக்கு  பிரதமர்  பதவி  வழங்கப்பட்டுள்ளது.

இப்ப பிரச்சனை   என்னவென்றால்… “ரணில்   பிரதமராக  பதவி  ஏற்றதிலிருந்து   தமிழ்தேசிய  கூட்டமைப்பு  பாராளுமன்ற  உறுப்பினர்  எஸ் சிறிதரன்  என்பவர்  ரணில்  மீது   விஷமத்தனமாக  குற்றச்சாட்டுகளை  சுமத்தி  பரப்புரை செய்து வருகிறார்.

காரணம்  என்னவென்று  பார்ப்போமானால்…   மகிந்தவின்  ஆட்சியை  மாற்றி  ஒரு நல்லாட்சியை  ஏற்படுத்த  முனையும்   ரணில், மைதிரி  போன்றோர்க்கு  தமிழ் மக்கள்  தங்கள்   வாக்குகளை   வரும்  பாராளுமன்ற  தேர்தலில்  அளித்து விடுவார்களோ  என்ற   பயம்  கூட்டமைப்பினர்களுக்கு வந்துவிட்டது.

கீழே  உள்ள  வீடியோவில்  எஸ். சிறிதரனின்   பேச்சை    கேளுங்கள்….

காணாமற் போனோர் தொடர்பில்  யாழ்.  வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக  சனிக்கிழமை(21)  அன்று  நடந்த  ஆர்ப்பாட்டமொன்றில், சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கும்  ரணிலுக்கும்   என்ன தொடர்பு?

இதில் ..  சிறிதரன்  ஏன்  ரணிலை  வம்புக்கு  இழுக்கின்றார்?

sumanthiran_fire_011யார் இதை செய்தார்கள்,   யாரின்  தூண்டுதலில்  பேரில்   இது   நடந்தது  என்பது  பற்றி  சுமந்திரனுக்கு நன்றாகவே  தெரியும்.  புலி வால்களுக்கு தான்  இந்த  மாதிரியான  “கொடும்பாவி” எரிக்கின்ற  வேலைகள் தெரியும். அந்த புலி வால்கள்  யார் என்பதும்  சுமந்திரனுக்கு  புரிந்திருக்கும்.

கூட்டமைபினர்  எத்தனையோ  வெளிநாட்டு  பிரதிநிதிகளை சந்தித்து    மகிந்த  அரசுக்கு  எதிராக  குற்ற பத்திரிகை  வாசித்திருப்பார்கள்.   எந்தனையோ நாடுகளுக்கு பயணம் செய்தார்கள்.  எதாவது நடந்ததா?  மகிந்த அரசுக்கு எதிராக  எதையாவது  செய்யமுடிந்ததா?

எஸ. சிறிதரன், மாவை, சுரேஸ்.. போன்றவர்கள்  “மகிந்தவின்  ஆட்சிக்கு எதிராக  வெளிநாடுகளுக்கு  போய்  “எதையோ  வெட்டி வீழ்தப் போகின்றோம்”   என்ற போர்வையில்…    எத்தனையோ  தடவைகள்  சுற்றுலா  பயணங்கள்  மேற்கொண்டு   பல்வேறு   புலம்பெயர்  தமிழ் அமைப்புகளை  சந்தித்து  பேசி, கூட்டங்களும் நடத்தினார்கள்.

புலம் பெயர்  தமிழ்   அமைப்புகளால்   அல்லது   கூட்டமைப்பினர்களால்    மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக ஒரு துரும்பை  கூட  அசைக்கமுடிந்ததா?

சிங்கள அரசியல்வாதிகள் தான்   போராடி  மகிந்தவின்  ஆட்சியை  மாற்றியுள்ளார்கள.  மகிந்தவின்  கொடூர  ஆட்சி  முடிந்து,   ஒரு நல்லாட்சிக்கான “சமிகை” தோன்றுகின்றது.  உலகமே  மைத்திரி, ரணிலின்  புதிய   ஆட்சியை  வரவேற்றுள்ளது.

இந்நிலையில்… எப்படியாவது..    இந்த ஆட்சிக்கு  எதிரான மனேநிலையை  தமிழ்  மக்கள் மத்தியில்   உருவாக்கி,  வரும்  தேர்தல்களிலும்  தமிழர்களின்   வாக்குகளை  பெற்றுக்கொள்ளவேண்டும்  என்கின்ற   குறுகிய    நோக்கத்தில்  தான்   கூட்டமைப்பினர்கள்    மேடைகளில்  புதிய  அரசுக்கு எதிராக  பேசத்தொடங்கியுள்ளர்ர்கள்.

ரணில் ஆட்சியில் அமர்ந்த   நாளிலிருந்து   எஸ்.சிறிதரன்,  முதலமைச்சர் விக்கினேஸ்வரன்  போன்றோர்   ரணிலுக்கு  எதிராக விஷமத்தனமான  பரப்புரைகளை செய்துவருகின்றனர். தேர்தலுக்கு  முன்பு  வாயை  மூடிக்கொண்டிருந்த  எஸ்.சிறிதரன்,   இப்பொழுது  ரணில்  மோசமானவராம்  என  பரப்புரை  செய்கிறார்.

“யார் ஆட்சிக்கு  வந்தாலும், எதையாவது காரணம்  சொல்லி   எதிர்க்கவேண்டும்.

 

அப்படி  எதிர்த்தால் தான்,  அவர்கள்  தமிழர்களுக்கு எதையும் செய்ய முன்வரமாட்டர்கள்.

 

சிங்கள  ஆட்சியாளர்கள்  தமிழர்களுக்கு  எதுவுமே  செய்யவும்   கூடாது, செய்தாலும்  அதை  நாம்  ஏற்றுக்கொள்ளவும்  மாட்டோம்.

 

அப்படி  எதையாவது  செய்ய  முன்வந்தால் அதில்..  குற்றமும், குறையும  கண்டு,

 

செய்ய  முனைவதை செய்யாமல்  தவிர்த்துவிட  வேண்டும்.

 

“அவர்  ஆட்சிக்கு  வந்தால் என்ன.. இவர்  ஆட்சிக்கு வந்தால் என்ன   தமிழர்களுக்கு  எதையும் தரமாட்டார்கள்” என்கின்ற  தாரக மந்திரத்தை  தொடர்ச்சியாக   தமிழ்  மக்களுக்கு  ஓதிக்கொண்டிருக்க வேண்டும்.

1956ம்  ஆண்டிலிருந்து… சிங்கள  ஆட்சியாளர்கள்  தமிழர்களுக்கு  எதிராக  அதை செய்தார்கள்,  இதை செய்தார்கள்  என  “அப்பா, தாத்தா, கொப்பாட்டன், மகன், பேரப்பிள்ளை  போன்றோர்க்கு தொடர்ச்சியாக  சொல்லிக்  கொண்டிருக்கவேண்டும்.

பிறகு,   தமிழர்கள்   இந்த  வரலாற்றை    மறந்து  போனால்  சிங்களவர்களுக்கு  எதிரான்  மனோ நிலை  தமிழர்களிடம்  மங்கிப்  போய்விடும.

சிங்கள  ஆட்சியாளர்களை   எப்பவுமே   தமிழர்களுக்கு  எதிரியாக  வைத்துக்கொண்டிருக்க   வேண்டும. அப்பதான்  தமிழர்களை  வைத்து பிழைப்பு நடத்தலாம்.

ஆட்சி  மாற்றம்  நடந்து  இன்னும்   இரண்டு  மாதம்  கூட  முடியவில்லை ..  அதற்குள்,  மைத்திரி, ரணில் அரசை  விமர்சிப்பதானது,   மகிந்தவின்  ஆட்சியை  மீண்டும்    கொண்டு    வருவதற்கான  முயற்சியும்,   புதிய   அரசாங்கத்தை  ஆதரித்து  நிற்கும்  “அமெரிக்க, மேற்குலக,  இந்தியா”  போன்ற  நாடுகளையும்  எங்களின்  பிரச்சனையிலிருந்து  ஓதுக்கி  வைக்கும்  ஒரு  செயல்பாடாயாகும்.

இதை தான்,  எஸ்.சிறீதரன், அரியநேத்திரன், முதல்வர் விக்கினேஸ்வரன்   போன்றோர்    தங்களின்  பரப்புரை  மூலம்   செய்ய முனைகின்றார்கள்

எஸ். கண்ணன்

 

வவுனியாவில்  வைத்து எஸ். சிறிதரன்  மைத்திரி, ரணிலை  பற்றி   வாசித்த  குற்றப் பத்திரிகையை    வாசித்துப்பாருங்கள்..

 

ரணில் ஒரு ஆபத்தானவர்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார் சிறிதரன் எம்.பி

ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆபத்து மிக்க ஒரு நபர். அவருடைய காலத்தில் தான் சிதைக்கப்பட்டோம். இந்த சமாதான காலத்தில் எமது கூட்டமைப்பு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
ஒரு விடுதலையை நோக்கி பயணிக்கின்ற தேசிய இனம் தனது அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கும் தமது மக்களையும் போராளிகளையும் சந்தித்து அவர்களினுடைய பிரச்சனைகளை ஆராய்வதற்கும் அலுவலகங்கள் முக்கியமானவை.
அவ் அலுவலகங்கள் உயிரோட்டமானவையாக இருக்கவேண்டும். மா ஓ சேதுங் அவ்வாறே கிராமங்களாக பின்னர் கிராமங்களில் இருந்து வீடுகளுக்கு சென்று தனது சீன புரட்சிக்கான அத்திபாரத்தை இட்டிருந்தார்.
தமிழர்கள் தேசிய இனம். நாங்கள் ஒரு சிறுபான்மை இனம் அல்ல. எங்களில் பலருக்கு இது தொடர்பில் மயக்கங்கள் உள்ளது. ஆகவே மயக்கத்தில் இருந்து தெளிய வேண்டும்.
சுயநிர்ணய உரிமைக்காக இன்று நேற்று அல்ல 70, 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடுகின்ற ஒரு இனமாகும். சுயநிர்ணய உரிமையை கேட்பதற்கு நாங்கள் வரலாற்று ரீதியான ஒரு நிலப்பரப்பை கொண்டிருக்க வேண்டும்.அவ் நிலப்பரப்பை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அத்துடன் மொழி, கலாசாரம் என்பவற்றையும் இந்த பூமி பந்தில் வைத்துள்ள ஒரு இனம். நாங்கள் வந்தேறு குடிகளல்ல.
நாங்கள் தேசிய இனம் என்ற ரீதியில் தான் எங்கள் உரித்தை நாங்கள் கேட்கின்றோம். அந்த உரித்து என்பது நாடு பிரித்தல் அல்ல.
அண்மையில் பொஸ்னியாவில் வழங்கப்பட்ட சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, ஏற்கனவே சுவிஸ் நாட்டில் உள்ள சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அமெரிக்காவில் உள்ள சமஸ்டி கூட வித்தியாசமான சமஸ்டி, இந்தியவில் உள்ள மொழி வாரியான சமஸ்டியும் இருக்கின்றது.ஆகவே அந்த அடிப்படையில் எங்களது சுயத்தை இழக்காமல் எங்களை நாங்களே ஆளுகின்ற சுயநிர்ணய தத்துவத்தின் பிரகாரம் நாங்கள் எங்களுக்கான ஆட்சி உரிமையை கேட்பது எங்களது முக்கியமான கடமையாகும்.
அதற்காகத் தான் நாங்கள் இந்த மண்ணிலே நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போராளிகளை புதைத்துள்ளோம். அவர்களது கல்லறைகளுக்கு கண்ணீரை சிந்த முடியாதவர்களாக இருக்கின்றோம்.
ஒருபெரும் போர் நடத்தி முடிந்து அதில் நாம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இருந்த ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் தமிழர்கள் தங்களுடைய முனைப்பை காட்டுகின்றார்கள்.
அதற்காகத் தான் நாங்கள் கடந்த 8 ஆம் திகதி தமிழ் மக்களிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒரு ஆட்சி மாற்றத்தை காண விருப்புகின்றோம் என்ற கோரிக்கையை விடுத்திருந்தது.
மகிந்த சிந்தனையை தோற்கடித்து மைத்திரி யுகத்தை உண்டாக்குவதல்ல எங்கள் நோக்கம். மாற்றம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது.
மூச்சு வீடுவதற்கான காலம் வேண்டும். பேச்சு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அந்த காலத்திற்காக வாக்களியுங்கள் என கேட்டிருந்தோம். அதனூடாக ஜனவரி 9 ஆம் திகதி இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
இதன் காரணமாக தமிழர்களுடைய பல பிரதேசங்களில் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார்கள். இது மைத்திரியின் வெற்றிக்காக கொளுத்திய வெடி அல்ல.
ஒரு கொடுங்கோலன், பல இசைப்பிரியாக்களையும் பாலச்சந்திரன்களையும் உடன் பிறந்த சகோதரர்களையும் சகோதரிக்களையும் நிர்வாணமாக்கி கொன்றவனை, கொரகொரவென எமது உறவுகளை இழுத்துச் சென்றவனை  நாங்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றோம் என்ற பழிவாங்கும் உணர்ச்சியோடு அவர்கள் அதனை செய்திருக்கின்றார்கள்.
இந் நிலையில் 100 நாட்களுக்குள் எல்லாம் நடந்து விடும் என்று எங்கள் மக்களிடம் நாங்கள் பொய்களை சொல்ல முடியாது. அதற்கு கால இடைவெளி இருக்கின்றது.அந்த கால இடைவெளியில் நாங்கள் அதனை செய்து கொண்டு தான் செல்ல வேண்டும்.
வட மாகாணசபைக்கான பிரதம செயலாளர் ஏற்கனவே இருந்தவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டார்.ஆனால் புதியவர் பதவியேற்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அவரை புலி என்கின்றார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்புக்காரர் என்கின்றார்கள்.அதனால் மொனராகலையில் இருந்து இடமாற்றம் பெற்று செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆகவே ரணில் நல்லது செய்வார் அல்லது மைத்திரி நல்லது செய்வார் என்று பார்க்காது இவர்கள் எவ்வளவு தூரம் எமது பிரச்சனையில் கவனம் செலுத்துவார்கள் என்பதே பிரச்சனை.

சந்திரிக்கா காலத்தில் ரத்துவத்தை வவுனியாவிற்கு வ்து இரண்டு பற்றரிகள் கொடுத்து வமாதானம் என கூறி அவற்றை அனுப்பியிருந்தார்.
அவருடைய சமாதானம் பற்றரியில் தான் தொடங்கியது. பின்னர் அவரும் இல்லை. பற்றரியும் இல்லாமல் போய் விட்டது.
இவ்வாறு சமாதான காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய சமாதான புறாக்களை பறக்கவிட்டு வருவார்கள். அதனால் தான் நாம் தற்போதுள்ள காலத்தை மிக துள்ளியமாக ராஜதந்திரமாக நகர்த்தவேண்டிய தேவையுள்ளது.
இதில் இருந்து நாம் தவறுவோம் ஆனால் எங்களுடைய இனப்பிரச்சனை கூட வேறு திசைகளுக்கு செல்லக்கூடிய சூழல் தோன்றி விடும்.

ஆகவே இதில் கவனமாக இருக்கவேண்டியது ஒவ்வொருவரது கடமையாகும். நாங்கள் வாக்குப் பலத்தின் ஊடாக பூமி பந்தில் ஒரு இனமாக செய்தியை சொல்லியிருக்கின்றோம். அதை இன்னும் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய தேவை எங்களிடம் இருக்கின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்களையே ரணில் விக்கிரமசிங்க சில வேளைகளில் தனித்தனியே சந்திப்பார்.அவர் மிக மிக முக்கிய ஆபத்திற்கு உரிய நபர்.
சமாதானம் பேசும் காலங்களிலேயே நாம் அழிக்கப்பட்டோம். யுத்தம் நடந்த காலத்தில் நாம் இறுக்கமாக இருந்தவர்கள். சமாதானம் பேச எப்போது முனைந்தோமோ அப்போது எல்லாம் நாம் சிதறடிக்கப்பட்டிருக்கின்றோம்.
ஆகவே தான் இக் காலத்தில் நான் பயப்படுவதும் அவதானமாகவும் இருக்க நினைப்பது என்வென்றால் இந்தக்காலம் எங்களுக்கு ஆபத்தான காலம்.
அவர்கள் ஒவ்வொருவராக இனம் கண்டு உடைப்பார்கள்.இதே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே சாவகச்சேரிக்கு வந்து எங்களுடைய பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை தன்னுடைய கட்சியில் சேர்த்துவிட்டுப்போனார்.

அதுவும் தான் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே அவ்வாறு செய்தார். ஆகவே நாம் அவர்களுடன் சமாதானம் பேசும் போது மிக அவதானமாகவும் நிதானமாகவும் எங்களுடைய கொள்கையோடும் எங்களுடைய இலட்சியத்தோடும் எங்களுடைய மக்களை அணைத்து செல்லும் வகையில் எங்கள் பயணங்களை நாங்கள் மேற்கொள்ளவெண்டும். 

இதில் நாம் தவறினால் எங்கள் இனம் அடியோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே ஏராளம் என தெரிவித்தார்.

இந்த குற்றப் பத்திரிகையை  சிறிதரன்ரணிலை, மைத்திரியை   ஆட்சியில் அமாத்துவதற்கு முன் வாசித்திருக்கலாமே?

நேரத்துக்கு நேரம்  நிறம் மாறும் பச்சோந்திகள்… போன்று   தங்களுடைய  சுயநலவாத அரசியல்  நடவடிக்கைகளுக்காக   பல்வேறு கதைகள்  சொல்லி   மக்களை ஏமாற்றிக்  கொண்டிருப்பார்கள். 

இன்னும்  60 வருடமல்ல…  600வருடத்துக்கு கதைசொல்லுவான்  கேட்டுக்கொண்டிருக்க வேண்டியது தான்.

Share.
Leave A Reply

Exit mobile version