ஒடிசா மாநிலத்தில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் துப்புரவு தொழிலாளி தையல் போட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் குஜாங் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்தவுடன் மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் அவசரத்தில் ஏற்கனவே பிரசவித்த பெண்ணுக்கு தையல் போடாமல் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியேறி விட்டார்.

பின்னர், சில பயிற்சி டாக்டர்களை துணைக்கு வைத்து கொண்டு அந்த சுகாதார நிலையத்தை கூட்டிப் பெருக்கும் தொழிலாளி அந்த பெண்ணின் வயிற்றை தைத்து மூடியதாக செய்திகள் வெளியாகின.

இந்த தகவலை உறுதிப்படுத்திய மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி, ‘அந்தப் பெண்ணின் வயிற்றை நான் பரிசோதித்தேன். மிக நேர்த்தியான தையல்’ என்று துப்புரவு தொழிலாளியின் திறமைக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ஜகத்சிங்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், டாக்டருமான குலாமனி சாமால், ‘இந்த செய்தியை கேள்விப்பட்டு நான் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.

பிரசவித்த பெண்ணிடமும், அங்கு பணியாற்றுபவர்களிடமும் விசாரித்த வகையில் இந்த தகவல் உண்மைதான் என்பது தெரியவந்தது.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வாகும். தனது கடமையை சரிவர நிறைவேற்ற தவறிய அந்த டாக்டரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்தபோது வயிற்றுக்குள் காற்றை செலுத்த சைக்கிளுக்கு காற்றடிக்கும் கைபம்பை டாக்டர்கள் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version