தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் அப்பேரவையிடம் விடுத்த கோரிக்கையை பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
இது இலங்கை அரசாங்கம் பெற்ற மாபெரும் வெற்றியாகும் என வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியிருக்கிறார்.
ஆனால், அது எவ்வாறு நாட்டுக்கு வெற்றியாகப் போகிறது என்பது தெளிவாகவில்லை.
மேற்படி குழு, அந்த விசாரணையை ஏற்கெனவே நடத்தியிருந்தால் அதேவேளை அந்த விசாரணையின் அறிக்கை, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படும் நிலையில் இருந்தால் அதனை இரத்துச் செய்விக்க இலங்கை அரசாங்கத்தால் முடியாமல் போகும். செய்ய முடிந்தது அதனை பேரவையில் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்திக் கொள்வது மட்டுமே.
அதனைத் தான் இப்போது அரசாங்கம் செய்து கொண்டுள்ளது. அது ஒரு வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல. ஏனெனில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நாள் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் அறிக்கையின் உள்ளடக்கம் அதனால் மாறப் போவதில்லை.
உள்ளடக்கம் என்னவென்று இன்னமும் இலங்கையில் எவருக்கும் தெரியாது. அவ்வாறிருக்க அறிக்கையின் தாமதம் வெற்றியாவது எவ்வாறு?
இது ஒரு வழக்கின் தீர்ப்பை தாமதப்படுத்திக் கொண்டதற்கு சமமாகும். தாமதமானாலும் தீர்ப்பு மாறப்போவதில்லை. ஒன்றில் பிரதிவாதி குற்றவாளியாவார்.
அல்லது நிரபராதியாக விடுதலை செய்யப்படுவார். எனவே தீர்ப்பு தாமதமாவதில் எவ்விதப் பயனும் இல்லை. தாம் எதிர்ப்பார்க்கும் தீர்ப்பை பெற்றுக் கொள்ள முடியுமானால் மட்டுமே அது வெற்றியாகும்.
இந்த அறிக்கை தாமதமாவது இலங்கைக்கு பாதகமாக அமையும் என ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியிருக்கிறார்.
அறிக்கை தாமதமானதால் அது அடுத்த முறை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் வரையிலான காலத்திலும் இலங்கைக்கு எதிராக சாட்சியங்கள் சேகரிக்கப்படும் என அவர் வாதிட்டு இருக்கிறார்.
இது சரியான வாதமல்ல. அடுத்த மாதம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் நிலையில் அறிக்கை இருக்குமானால் அதனை சமர்ப்பிக்கும் நாள் ஒத்திப் போடப்பட்டதன் காரணமாக விசாரணைக் குழு மீண்டும் விசாரணைகளை தொடரும் என்று கூற முடியாது.
விசாரணை முடிவுற்றிருக்காவிட்டால் அக்குழு பூரண அறிக்கை ஒன்றை அடுத்த மாதம் பேரவையில் சமர்ப்பிக்காது. தற்போது தம்மிடம் கிடைத்துள்ள தகவல்களினால் குழு திருப்தியடைந்தால் மட்டுமே அறிக்கை இப்போது தயார் நிலையில் இருக்கும்.
எவ்வாறாயினும் அறிக்கையை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்திக் கொள்வதால் அரசாங்கம் என்ன எதிர்ப்பார்க்கிறது என்பது தெளிவில்லை.
சிலவேளை அரசாங்கத்தின் 100 நாட்கள் முடிவடைந்து அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் வரை அதனை தாமதப்படுத்திக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம்.
ஏனெனில் தேர்தலுக்கு முன்னர் அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மூலம் முன்னாள் அரசாங்கத்தில் சில தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் குற்றச்சாட்டப்பட்டு இருந்தால் அவர்கள் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படும்.
அவர்கள், தென் பகுதியில் மக்கள் மத்தியில் வீரர்களாக மாறிவிடுவார்கள். அவர்களுக்காக பரிந்து பேசும் அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்படும்.
இது பொதுத் தேர்தலின் போது அரசாங்கத்தை பாதிக்கலாம். எனவே தான் அரசாங்கம் இந்த அறிக்கையை தாமதப்படுத்துமாறு மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது என ஊகிக்கலாம்.
அவ்வாறான ஊகம் தவிர அறிக்கையை தாமதப்படுத்திக் கொண்டதற்கான வேறு காரணத்தை அனுமானிக்க முடியாமல் இருக்கிறது. அதேவளை இது ‘அந்த நேரத்துக்கு ஏதாவது செய்யும்’ கடந்த அரசாங்கத்தின் கொள்கையே.
குறிப்பாக மனித உரிமை விடயத்திலும் அதிகார பரவலாக்கல் விடயத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ‘அந்த நேரத்துக்கு ஏதாவது செய்வதே’ தமது கொள்கையாகக் கொண்டிருந்தது. வரலாற்றை சற்று புறட்டிப் பார்த்தால் அது தெளிவாகும்.
போர் முடிவடைந்து ஒரு வாரத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரது விஜயத்தின் போது போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றியும் அவற்றுக்கு பொறுப்புக் கூறலைப் பற்றியும் அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இரு தலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையிலும் இந்தப் பொறுப்புக் கூறல் குறிப்பிடப்பட்டு இருந்தது. இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாக அப்போது ராஜபக்ஷ கூறியிருந்தார்.
ஆனால், அது ‘அந்த நேரத்துக்கு ஏதாவது செய்யும்’ அரசாங்கத்தின் கொள்கையே என்பது ஒரு வருடம் சென்றும் அரசாங்கம் ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததன் மூலம் தெளிவாகியது.
ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு வழங்கும் வாக்குறுதியானது இந்நாட்டு மக்களுக்கு தேர்தல்களின் போது வாக்குறுதிகளை வழங்குவதைப் போல் வழங்கலாம் என ராஜபக்ஷ நினைத்தார் போலும். தாம் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு வழங்கிய வாக்குறுதியின் பாரதூரத்தன்மையை அவர் புரிந்து கொள்ளவில்லை.
ஒரு வருடம் ராஜபக்ஷ என்ன செய்வார் என்று பார்த்துக் கொண்டிருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் 2010ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சூகி தருஸ்மான் தலைமையில் குழுவொன்றை நியமித்தார்.
தருஸ்மான் குழு நியமிக்கப்படப் போவதை அறிந்த ராஜபக்ஷ வழமைப் போல் ‘அந்த நேரத்துக்கு ஏதாவது செய்ய’ வேண்டும் என நினைத்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.
ஆனால், பான் கீ மூன் தமது ஆலோசனைக் குழுவை நியமிப்பதை கைவிடவில்லை. அதேவேளை ராஜபக்ஷ நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவும் அரசாங்கத்தின் சுபாவத்தின் படி நிறைவேற்ற முடியாத பல சிபாரிசுகளைக் கொண்ட அறிக்கையொன்றை தயாரித்து முன்வைத்தது.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக 2012ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் அமெரிக்கா ஒரு பிரேரணையை சமர்ப்பித்தது.
அதனை தமக்கு எதிரான பிரேரணையாக இலங்கை அரசாங்கம் கருதினாலும் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்ற வேண்டும் என்றே அந்தப் பிரேரணையின் மூலம் கூறப்பட்டது.
ஆனால், ராஜபக்ஷ அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை. அதேவேளை போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றியே மேற்கத்திய தலைவர்கள் அக்கறை செலுத்தினர்.
அக்கால கட்டம் எதுவென அவர்கள் நிர்ணயித்து இருக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷ 2002ஆம் ஆண்டிலிருந்தே இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்யும் வகையில் தான் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். அதுவும் சிந்தித்து செயலாற்றும் கொள்கையல்ல. ‘அந்த நேரத்துக்கு ஏதாவது செய்யும்’ கொள்கையே.
அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கப் பிரேரணை கூறிய போதிலும் அரசாங்கம் அதைப் பற்றி அக்கறை செலுத்தவில்லை.
எனவே அமெரிக்கா 2013ஆம் ஆண்டு மற்றுமொரு பிரேரணையை மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்தது. அதன் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டது.
அப்போதும் ‘அந்த நேரத்துக்கு ஏதாவது செய்ய’ வேண்டும் என நினைத்த ராஜபக்ஷ அரசாங்கம் 2006ஆம் ஆண்டு மூதூரில் கொல்லப்பட்ட தொண்டர் நிறுவன ஊழியர்களின் மரணங்களைப் பற்றியும் திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் மரணங்களைப் பற்றியும் விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால், ஆரம்பித்த ஆர்வத்துடன் அதனை தொடரவில்லை.
அதேவேளை, அது வரை காலமும் போரின் போது எவரும் காணாமற்போகவில்லை என கூறிக் கொண்டு இருந்த அரசாங்கம், காணாமற்போனோரைப் பற்றி விசாரணை செய்வதற்காக ஆணைக்குழுவொன்றையும் நியமித்தது.
ஆனால், இவற்றால் மேற்கத்தேய நாடுகளை திருப்திப்படுத்த முடியவில்லை. எனவே, முன்னாள் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை மேற்படி சர்வதேச விசாரணைக்கான குழுவையும் நியமித்து அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக உலகப் புகழ் பெற்ற மூன்று நபர்களையும் நியமித்தார்.
(ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு ஆலோசகர்களாகவும், ஆதரவு வழங்குபவர்களாகவும் பின்லாந்தின் முன்னால் சனாதிபதியும், சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்ரி அஹ்ரிசாறி (Martti Ahtisaari), நியுசிலாந்தின் ஆளுநர் நாயகமாகவும், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும் பணியாற்றிய சில்வியா கார்ட்ரைட் (Silvia Cartwright) மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் தலைவரும், பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் மேற்கொண்டுவரும் குடியேற்றங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கான குழுவின் உறுப்பினருமான அஸ்மா ஜஹான்கீர் (Asma Jahangir) ஆகியோர் நியமிக்கப்பட்டுளனர்.)
அப்போது ‘அந்த நேரத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என நினைத்த மஹிந்த ராஜபக்ஷ தாமும் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகளைப் பற்றி விசாரணை செய்வதற்கு காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கினார்.
அக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நான்கு சர்வதேச நிபுணர்களையும் நியமித்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த சேர் டெஸ்மன்ட் டி சில்வா (கியூ சி), சேர் ஜெப்ரி நைஸ் (கியூ சி), ரொட்னி டிக்சன் (கியூ சி) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் எம் கிரேன் அந் நால்வராவர்.
(இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய சட்டவாளரும், சியராலியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் ஐ.நாவின் தலைமை சட்டவாளராக பணியாற்றியவருமான, சேர் டெஸ்மன்ட் டி சில்வாவின் (Sir Desmond de Silva) திறமையான செயப்பாட்டால், அன்றைய ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த கோபி அனான் அவர்களால் பிரதி சட்டவாளர் நிலையிலிருந்து தலைமைச் சட்டவாளராக 2005ல் பதவியுயர்த்தப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் புரிந்ததாக நிரூபிக்கப்பட்ட லைபீரியாவின் முன்னால் சனாதிபதி சாள்ஸ் ரெயிலர் கைது செய்யப்படுவதற்கு பின்னணியில் இருந்த இவர், பொல்கன்ஸ் (Balkans) போரின் போது, போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை சரணடையச் செய்யும் நடவடிக்கைக்கான, ஐ.நாவின் சிறப்பு தூதுவராக சேர்பியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அதேவேளை, காஸாவுக்கு மனிதாபிமான உதவிப்பொருட்களோடு சென்ற கப்பல் தொடரை இஸ்ரேல் வழிமறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒன்பது பேர் தொடர்பான விசாரணைக்களை முன்னெடுப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
சிறீலங்காவின் சனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிரியாவில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யும் குழுவின் தலைவராக இந்த ஆண்டு சேர் டெஸ்மன்ட் டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.)
அவர்களுக்கும் அவர்களோடு கடமையாற்றும் மேலும் சிலருக்கும் அரசாங்கம் இது வரை 135 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது.
ஆனால், அவர்கள் ஆணைக்குழுவின் தலைவரை ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளனர். அதேவேளை ஆணைக்குழு மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்வதாகவும் தெரியவும் இல்லை.
போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி உள்ளக விசாரணை பொறிமுறையொன்றை உருவாக்குவதாக வாக்குறுதியளித்தே அரசாங்கம் ஐ.நா. அறிக்கையை தாமதப்படுத்தக் கோரியிருக்கிறது.
ஆனால், அந்த உள்ளக பொறிமுறையானது காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழு மூலமாக ராஜபக்ஷ அரசாங்கம் ஆரம்பித்த பொறிமுறையே தானா அல்லது புதிய ஒன்றா என்பது தெளிவில்லை.
அரசாங்கம் அதற்காக கால அவகாசமும் கேட்டுள்ளது. ஆனால், செப்டெம்பர் மாதம் ஐ.நா. அறிக்கை நிச்சயமாக மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
அதாவது உள்ளக விசாரணை பொறிமுறை அமைக்கப்பட்டாலும் ஐ.நா.வினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, இரத்துச் செய்யப்படப் போவதில்லை.
எனவே அதன் அறிக்கை தாமதப்படுவதனால் நாட்டுக்கு எவ்வித நன்மையோ அல்லது தீமையோ புதிதாக ஏற்படப் போவதில்லை.
உள்ளக விசாரணை பொறிமுறையொன்றை ஆரம்பிப்பதாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஆளும் கட்சி கூறிய போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் அதனை விமர்சித்தனர்.
ஆனால், ராஜபக்ஷ அரசாங்கமே காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழு மூலம் உள்ளக பொறிமுறையொன்றை ஆரம்பித்திருந்ததை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நினைவூட்டினார்.
இப்போது அரசாங்கம் உள்ளக பொறிமுறையொன்றைப் பற்றிய வாக்குறுதியை மனித உரிமை பேரவைக்கு வழங்கியும் ஐ.ம.சு.கூ. அதனை விமர்சிக்கவில்லை. விமர்சிக்கவும் முடியாது.
ஐ.நா. அறிக்கை தாமதப்படுத்தப்பட்டதனால் இலங்கைக்கு கிடைத்த வெற்றி எதுவும் இல்லையாயினும் அது உள்நாட்டில் தமிழ் தலைவர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
அதாவது அரசாங்கம் தென்பகுதியை திருப்திப்படுத்தினால் வட பகுதி அதிருப்தியடைகிறது. வட பகுதி திருப்தியடைந்தால் தென் பகுதி அதிருப்தியடைகிறது. அதாவது எந்தப் பொறிமுறை வந்தாலும் வராவிட்டாலும் அரசாங்கத்துக்கு அது பொறியாகவே அமைகிறது.
– எம்.எஸ்.எம். ஐயூப்