ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 4 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 30). கட்டிட ஒப்பந்த தொழிலாளர். இவர், இணையதளம் மூலமாக வரன்தேடி கோவையைச் சேர்ந்த காயத்திரி(31) என்ற பட்டதாரி பெண்ணை 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 3 மாதம் சந்தோஷமாக குடும்பம் நடத்தினர்.

இந்த நிலையில் காயத்திரி, தனக்கு தனிப்பட்ட முறையில் கோவையில் கடன் இருக்கிறது. அதற்கு ரூ.50 ஆயிரம் ரொக்கமும், 5 பவுன் நகையையும் கொடுங்கள் என்று சீனிவாசனிடம் கேட்டார்.

இதனால் காயத்திரி மீது சீனிவாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் விசாரித்த போது காயத்திரிக்கு ஏற்கனவே சிலருடன் திருமணம் நடந்து இருப்பது சீனிவாசனுக்கு தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நேற்று முன்தினம் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் காயத்திரியை அழைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அதில், காயத்திரிக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்ததும், அவர்களிடம் பணம்-நகை மோசடி செய்து இருப்பதும், அதை மறைத்து அவர் 4-வதாக சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை

காயத்திரிக்கு பெற்றோர் கிடையாது. அவர் பி.எஸ்.சி. படித்து உள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் இணையதளம் மூலமாக வரன் தேடுபவர்களை குறிவைத்து இதுபோன்ற கல்யாண மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளார்.

காயத்திரியின் உண்மையான பெயர் உமா. அவர் இடத்திற்கு தகுந்தவாறு தன் பெயரை மாற்றி வைத்து கொண்டு உள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு திருவையாறு பகுதியைச் சேர்ந்த நரசிம்மராவ் என்ற காண்டிராக்டரை காயத்திரி முதல் திருமணம் செய்தார். அவரிடம் ரூ.2 லட்சம் பெற்று மோசடி செய்து விட்டு, அவருடன் வாழ பிடிக்கவில்லை என்று விவாகரத்து பெற்று விட்டார்.

நகை-பணம் மோசடி

அதன் பிறகு 2012-ம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து அவரிமும் ரூ.1 லட்சத்தை மோசடி செய்து இருக்கிறார். அவரிடம் இருந்தும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அடுத்ததாக 2013-ல் ராஜகோபால் என்ற ஒரு கோவில்பூசாரியை 3-வது திருமணம் செய்து அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகையை சுருட்டிக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து வீசிய வலையில் தான் 2014-ல் சீனிவாசன் மாட்டிக்கொண்டார். ஏற்கனவே நடந்த 3 திருமணங்களையும் மறைத்து சீனிவாசனை 4-வது திருமணம் செய்து கொண்டார்.

ஆடம்பர பொருட்களை வாங்கி அனுபவித்து வந்த காயத்திரி திடீரென ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன்நகை ஆகியவற்றை சீனிவாசனிடம் பெற்று கொண்டு அவரை ஏமாற்றிவிட முடிவு செய்து இருந்தார்.

5-வது திருமணத்துக்கு முயற்சி

காயத்திரியின் அடுத்த இலக்கு அம்பத்தூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரை 5-வதாக திருமணம் முடிப்பதாகும். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதற்கான வேலையும் ரகசியமாக நடந்து வந்தது.

இதுபற்றி எப்படியோ தெரிந்து கொண்ட சீனிவாசன், காயத்திரி கேட்ட பணம்-நகையை தராமல் உஷாரானார். அதோடு போலீசில் புகாரும் கொடுத்து விட்டார்.

அவர் கொடுத்த புகாரில்தான் கல்யாண மோசடி ராணி காயத்திரி என்ற உமா வசமாக போலீசாரிடம் மாட்டிக்கொண்டார் என போலீசார் தெரிவித்தனர்.

கைது

சீனிவாசன் முகப்பேர் மேற்கு பகுதியில் வசிப்பவர் என்பதால் அவரது புகார் நேற்று நொளம்பூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நொளம்பூர் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து காயத்திரியை கைது செய்தனர்.

அவரை இன்று(வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version