இங்கிலந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திரிமன்னே ஆகியோர் சதம் விளாசி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “ஏ ” யில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலாவதாக களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோய் ரூடின் சதத்தின் உதவியுடன் இமாலய இலக்கை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய ஜோய் ரூட் 108 பந்துகளில் 121 ஓட்டங்களைக் குவித்தார். பெல் 49 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் மலிங்க, லக்மால், மெத்தியூஸ், டில்ஷான், ஹேரத், பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
309 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டில்ஷான் மற்றும் திரிமன்னே ஆகியோர் நல்ல ஆரம்பத்தினை வழங்கினர்.
இலங்கை அணி 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது டில்ஷான் 44 ஓட்டங்களைப் பெற்ற ஆட்டமிழந்து வெளியேற திரிமன்னேயுடன் ஜோடி சேர்ந்த சங்கா இங்கிலாந்தின் பந்து வீச்சுக்களை சிதறடித்தார்.
இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக கையாண்டு 212 ஓட்டங்களை பிரிக்க முடியாத இணைப்பாட்டமாக பெற்றுக் கொடுத்தது.
23 ஆவது ஒருநாள் சர்வதேச சதத்தை கடந்த குமார் சங்கக்கார 86 பந்துகளில் 117 ஓட்டங்களையும் 4 ஆவது ஒருநாள் சர்வதேச சதம்பெற்ற ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திரிமன்னே 143 பந்துகளில் 139 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் மொயின் அலி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
309 என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி 47.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.
இப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி குழு “ ஏ” யில் புள்ளிப்பட்டியலில் 4 லீக் போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வியடைந்து 6 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலுள்ளது.
இக் குழுவில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்து அணி முதலிடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.