ஈழத் தமிழ் தேசியவாதிகள் மத்தியில், கடந்த பல மாதங்களாக பனிப்போர் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு போன்று காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், பின்னணியில் நமக்குத் தெரியாத வேறு சில காரணிகளும் இருக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தர், சுமந்திரன் அணி மிதவாதிகளாக அறியப் படுகின்றனர். அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து மைத்திரி அரசை ஆதரிப்பது தெரிந்ததே. அதையே காரணமாகக் காட்டி, தீவிரவாதிகளின் அணி அவர்களுக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை விடுத்த பிரிவினர் தான் இந்தத் தீவிரவாதிகள். ஆனால், தேர்தலில் பொது வேட்பாளரான மைத்திரிக்கு தமிழ் மக்களின் அமோக ஆதரவு இருந்த காரணத்தால் அடக்கி வாசித்தார்கள்.

பின்னர், பெப்ரவரி 4 சுதந்திர தின நிகழ்வில், சம்பந்தர், சுமந்திரன் கலந்து கொண்டதை சாட்டாக வைத்து, “கிளர்ச்சி அரசியல்” செய்து கொண்டிருக்கிறார்கள்.

லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், சம்பந்தர், சுமந்திரன் உருவப் படங்களை எரித்த சம்பவத்தை, மேற்குறிப்பிட்ட பின்னணியில் தான் பார்க்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் தேசிய அமைப்புகள், தீவிர தமிழ் தேசியத்தை முன்னெடுப்பது அனைவரும் அறிந்ததே.

அவர்களுடன் தொடர்புடைய கஜேந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளன.

பொதுவாகவே, கடந்த காலங்களிலும் இந்தக் குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை இருந்ததை, ஒரே மாதிரியான அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

sumanthira-hang2
தீவிர தமிழ்த் தேசியவாதிகளின் அணி, புலிகளின் அரசியலுக்கு தாமே வாரிசு என்று காட்டிக் கொள்வார்கள். தமது பிடிவாதமான போக்குகள் மூலம் அதனை “நிரூபித்துக்” கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு பெரிய முரண்நகை என்னவென்றால், ஒரு காலத்தில் ஈழத்தில் புலிகள் இருந்த இடத்தில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சம்பந்தர் அணி) இருக்கின்றது.

1986 ம் ஆண்டு, புலிகளுக்கும், TELO இயக்கத்திற்கும் இடையில் நடந்த சகோதர யத்தத்தின் முடிவில் புலிகளின் கை ஓங்கியது.

அப்போது, தமிழீழ மக்கள் மத்தியில் தமது இயக்கத்திற்கு மட்டுமே ஆதரவு இருப்பதாக சொல்லிக் கொண்டார்கள். அதே நேரம், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமக்கு மட்டுமே ஆதரவு இருப்பதாக TELO சொல்லிக் கொண்டது.

இறுதியில் ஈழத்தில் காலூன்றிய புலிகள் தான் நிலைத்து நின்றனர். ஏனென்றால் அவர்களது ஆதரவுத் தளம், அந்த மண்ணில் வாழும் மக்களில் தங்கி இருந்தது.

இன்றும் கூட, ஈழப் பிரதேசத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெருமளவு தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள். புலிகளின் காலத்தில் இருந்ததைப் போன்று, இதுவும் ஒரு வகை தார்மீக ஆதரவு தான்.

கூட்டமைப்பு தலைவர்கள் அயோக்கியர்கள் என்று குற்றஞ்சாட்டிக் கொண்டே, தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடும் மக்கள் ஏராளம்.

இங்கே ஈழத் தமிழ் மக்களுக்கு முக்கியமானது கட்சித் தலைமையோ, அல்லது கட்சியோ அல்ல. சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புக் காட்டுவதற்கு, ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி தேவைப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட காரணத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்களை விட, புலம்பெயராத தமிழர்களே தமது ஆதரவுத் தளம் என்பதை சரியாகக் கணிப்பிட்டிருந்தது.

அதை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழ் தேசியக் குழுக்களை கலந்தாலோசிக்காமல், சுயாதீனமாக முடிவுகளை எடுத்து வந்தது.

இந்தியாவும், சர்வதேச சமூகமும், கூட்டமைப்பினர் இலங்கை அரசுடன் பேசித் தான், தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கறாராக சொல்லி விட்டனர்.

அதனால், இன்றைய மைத்திரி அரசுடன் இணக்க அரசியல் செய்யுமளவிற்கு சில விட்டுக் கொடுப்புகளை செய்துள்ளது. இது அவர்களது வர்க்க நிலைப்பாட்டில் இருந்து பார்த்தாலும் சரியான முடிவு தான்.

பொதுவாகவே, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அல்லது கொள்கை உடன்பாடு கொண்டவர்கள் என்பது இரகசியம் அல்ல.

தற்போதைய மைத்திரி அரசை பின்னால் இருந்து இயக்குவதும் ஐ.தே.க. தான். அதனால், இனம் இனத்தோடு சேரும் என்பது போல, இதுவும் சிங்கள- தமிழ் மேட்டுக்குடி வர்க்க அரசியலின் ஓர் அங்கம் தான். அதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

அநேகமாக, சம்பந்தர் அணி அரசுடன் சேர்ந்து இணக்க அரசியலை செய்யலாம் என்ற அச்சமே, தற்போதைய சலசலப்புகளுக்கும் காரணமாக உள்ளது.

லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தர், சுமந்திரனுக்கு துரோகி முத்திரை குத்தப் பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னிலையில் நடந்துள்ளது. தமிழ் தேசியவாதிகளுக்குள் நடக்கும் பனிப்போருக்கும், அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

இதே நேரம், யாழ் நகரில் பல்கலைக் கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போதிலும், அரசியல் ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும், மக்களும் கலந்து கொண்டனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கையை வெளியிடுவதை பின்போடக் கூடாது என்ற கோரிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பிப்பதற்காக அந்த ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தின் முடிவில், இந்து, கிறிஸ்தவ, (இஸ்லாம் எங்கே?) மத குருக்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. யாழ் நகரில், UNHCR, UNICEF, WHO என்று பல ஐ.நா. அமைப்புகளின் பிராந்திய அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. போராட்டக்காரர்கள், அவற்றில் ஒன்றில் தமது கோரிக்கையை சமர்ப்பிக்காத காரணம் என்னவென்று தெரியவில்லை!

மேலும், யாழ் நகர் ஆர்ப்பாட்டத்திற்குள் நுளைந்த தீவிர தமிழ் தேசியவாதிகள், குறிப்பாக ஆனந்தி, கஜேந்திரன் குழு போன்றோர், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பப் பயன்படுத்தினார்கள். அங்கே, சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது.

இதற்கிடையே, உதயன் பத்திரிகை நிறுவன முதலாளியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகருமான வித்தியாதரன், முன்னாள் புலிப் போராளிகளை ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

உள்ளூர் மக்களாலும், புலம்பெயர் சமூகத்தாலும் புறக்கணிக்கப் பட்ட, அரச இயந்திரத்தினால் நசுக்கப்படும் பிரிவினரின் குறைபாடுகளை அரசியல்மயப் படுத்துவது நியாயமானது.

தென்னிலங்கையில் நடந்த பெரும் இனப்படுகொலைப் போருக்குப் பின்னர், மீண்டும் உயிர்த்தெழுந்து மைய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்ட ஜேவிபியை வித்தியாதரன் உதாரணமாகக் காட்டுகின்றார்.

அதாவது, எவ்வாறு ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேவிபியினர், அரசியல்வாதிகளாக மாற்றப் பட்டனரோ, அதே மாதிரி முன்னாள் புலிப் போராளிகளையும் கொண்டு வருவது தான் நோக்கம்.

புரட்சிகர அரசியலை கை கழுவி விட்டு, பாராளுமன்ற அரசியல் சாக்கடைக்குள் இறங்கிய ஜேவிபி, ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த சிறிலங்கா அரசுடன் மட்டுமல்லாது, இந்தியா, அமெரிக்காவுடனும் சமரசம் செய்து கொண்டது.

ஆகவே, வித்தியாதரன் முன்மொழியும் “தமிழ் ஜேவிபி”, எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆனால், முன்னாள் புலிப் போராளிகளைக் கொண்ட புதிய கட்சியின் இலக்கு என்ன, அரசியல் கொள்கை என்ன என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.

தாம் ஒரு கட்சியாக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறுகின்றனர். உண்மையில் அது கட்சியாக இல்லாமல், ஒரு அரசு சார்பற்ற நிறுவனமாக இயங்குவது சிலநேரம் அதிக பலனைத் தரலாம்.

வித்தியாதரன் புதிய கட்சி தொடர்பாக இராணுவ தளபதிக்கு அறிவுறுத்தியதாகவும், அரசிடம் இருந்து எதிர்ப்பு எதுவும் வரவில்லை என்றும் உறுதிப் படுத்தி உள்ளார்.

ஏற்கனவே, வித்தியாதரன் ஐ.தே.க.வுக்கு நெருக்கமானவர். ஆகவே, உண்மையிலேயே புதிய கட்சி அமைக்கும் யோசனை, அரசிடம் இருந்து வந்திருக்கலாம். கட்சி தொடங்குவதற்கான நோக்கம் எதுவாக இருந்தாலும், காலம் முக்கியமானது.

அதாவது, மிதவாத, தீவிரவாத தமிழ் தேசியவாதிகளுக்குள் பனிப்போர் நடக்கும் காலகட்டத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீவிர தமிழ்தேசியவாதிகள், தாமே புலிகளின் வாரிசுகள் என்று உரிமை கோரி வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக, உண்மையான புலிகளான, முன்னாள் போராளிகளை நிறுத்துவதன் மூலம், தீவிர தமிழ்தேசியவாதிகள் தமது இலக்கை அடைவதை தடுத்து நிறுத்தலாம். வருங்காலத்தில், ஈழத் தமிழ் தேசிய அரசியலில் பல சுவாரஸ்யமான மாற்றங்கள் நிகழலாம்.

-கலையரசன்-

Share.
Leave A Reply

Exit mobile version